ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் (1906 - 1955) (

Rajeshwari Ammaiyar

)

இராஜேசுவரி அம்மையார் அறிவியல் மழை பொழிந்த மேகம். தமிழ் இலக்கிய நூல்களில் மறைந்துள்ள அறிவியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் காட்டியவர். தமிழ் இலக்கியம், அறிவியல் ஆகிய இரு துறைகளிலும் இவர் சிறந்து விளங்கினார். திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியலுண்மைகளைத் தெளிவுபடச் சொற்பொழிவாற்றுவதில் வல்லார். அறிவியல், அம்மையாரிடம் தமிழில் எளிமையாகப் பணியாளானதை யாவருமறிவர். இவ்வம்மையார் மேரி இராணியார் கல்லூரியில் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றி இளமையில் மறைவுற்றார். " சூரியன் ", " பரமாணுப் புராணம் " போன்ற பல அறிவியல் நூல்களை இவர் எழுதியுள்ளார்.

" இந்நிலவுலகில் ஞாயிறு ஒன்றே முதன்மை பெற்றும் மேன்மையுற்றும், சிறந்து விளங்குகிறது. அனைத்திற்கும் அடிப்படையான இதனை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். எத்தேசத்தினராயினும் சரி. எம்மதத்தினராயினும் சரி, எத்தொழிலாராயினும் சரி, எத்தன்மையராயினும் சரி, ஞாயிற்றைக் கண்டு களிக்காதவர் இல்லை. நீரற்ற கடுங்கானலில் நெருப்பெனக் கொளுந்துவிடும் முதுவேனிற் கொடுமையில் தீய்ந்து வருந்துவோரும் வருந்தும் அச்சமயத்தில் பகலவனைப் பழிப்பாராயினும், சில நாட்கள் வரையில் சூரியவெளிச்சமே இல்லாது இருண்டு போகும்படி விடாமழை பெய்யுமாயின் எப்போது கதிரவனைக் காண்போம் என்றே ஏங்கிக் கிடப்பர்."

- இராஜேஸ்வரி அம்மையார்.

Site Meter