புறநானூறு...?
புறப்பாட்டின் காலமும் சூழலும் உரையாசிரியரால் உள் வாங்கப்படவில்லை என்பதனால் தொகுப்பில் பிழைகள் மலிந்திருக்கின்றன - தொ. பரமசிவன்
கணிப்பொறி அறிஞர், நாவலாசிரியர், நாட்டார் கள ஆய்வில் ஈடுபாடு காட்டியவர், குறுங்கட்டுரையாளர் என்பதாகத் தொடங்கிய சுஜாதாவின் எழுத்து வேலை ஆழ்வார் அறிமுகம், திருக்குறள் உரை என்று விரிவடைந்து இப்போது சங்க இலக்கியப் பெரு வெளிக்குள் நுழைய முயன்றிருக்கிறது.
எந்த வெளியும் யாருக்கும் காணியாட்சியுடையதல்ல. அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது. ஆனாலும் அறிவுலகப் பெருவெளிக்கு என சில நாகரிக வரம்புகள் உண்டு. செவ்விலக்கியங்களாகிய சங்க இலக்கியங்கள் ஆழ்ந்தும் அகன்றும் நுணுகியும் நிற்பன. அந்தப் பெருங்கடலுக்குள் இறங்க அசட்டுத் துணிச்சல் பற்றாது. 224 பக்கங்களையுடைய புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முதல் தொகுப்பு) என்னும் நூலின் முதல் ஐந்து பக்கங்களும் பேறு பெற்றவை. எஞ்சிய எல்லாப் பக்கங்களும் எழுத்து, சொல், தொடர், பொருள், கருத்து எனக் குறைவில்லாத அளவு பிழைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன. சங்க இலக்கியங்களைத் தேடி அலைந்து தொகுத்த உ.பே. சாவின் முன்னுரைகளை மட்டும் படிப்பவர்கள் கூட இந்தப் பதிப்பினை மன்னிக்கமாட்டார்கள்.
"மள்" என்னும் சொல், சுஜாதாவின் உரையிலே மிகச் சாதாரணமாக "மல்" லாகி விடுகின்றது. சுஜாதாவிற்குக் கல்லும் கள்ளும் ஒன்றாகலாம்; புள்ளும் புல்லும் ஒன்றாகலாம். மூலபாடத்தில் அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் பிழைகள் படைப்பாளிக்குச் செய்யப்படும அப்பட்டமான துரோகம்.
அச்சுப் பிழைகள் என்று கவசம் தேடும் பிழைகளைப் பெரிய மனதோடு ஒதுக்கி விட்ட பிறகும் பொருளையே புரட்டிப் போடும் மூலபாடப் பிழைகளில் சில இதோ :
பாடல் எண்
27 - வல்லாய் (வல்லார் - படர்க்கை இங்கு முன்னிலையானது)
33 - தனிமகள் (தனி மகன்)
45 - மலைந்தோன் (மிலைந்தோன்)
மலைதல் - போரிடல், மிலைதல் - தலையில் சூடல்
55 - புகழ் (புகல் - போர்)
84 - நாய்க்கன் (நாய்கன் - ஊர்த் தலைவன்)
"ஆர்" என்பது சோழர்களின் அடையாளப் பூ. இதனை "ஆத்தி" என்றும் கூறுவர். மூன்று இடங்களில் "ஆத்தி"யை "அத்தி" என்று சுஜாதா உரையெழுதியிருக்கிறார். அத்தி தமிழ் மரப்புப்படி பூக்காத தாவரம். ஆர் என்னும் பூவை ஏ.கே. ராமானுஜம் labar num என்று குறிக்க. "சங்க இலக்கியத் தாவரங்கள்" நூல் (கு. சினிவாசன்) "பாகினியா பர்பூரியா" என்று விளக்குகிறது. நிகழ் காலப் பெயர் "மந்தாரம்", நிலம் பற்றிய புரிதலில் சுஜாதா மற்றுமொரு சாதனையினைச் செய்திருக்கிறார். "கழி" என்றால் உப்பங்கழி. மண் நீரும் கடல் நீரும் சந்திக்கும் இடம். இக்காலத்தில் "காயல்" என்பார்கள். இந்த இடத்தில் மலரும் பூ நெய்தல். "கழியிலே மலர்ந்த நெய்தல்" என்பதனைக் "கழிவு நீரில் மலர்ந்த நெய்தல்" (பாடல் எண் 48) என்பது வாசகன் பற்றிய அலட்சிய மனோபாவம் மட்டுமல்ல; புறநானூறு என்னும் செவ்விலக்கியம் ஒரு நாவல் அளவுதான் என்று கருதும் பேதைத் தனமும் கூட.
கணிச்சி (பாடல் 42) என்றால் மழு. தொன்மங்களின் படி எமன் கையில் ஆயுதம். பரசுராமனுக்கும் "மழுவாள் நெடியோன்" என்று பெயர் உண்டு. எமன் கையிலுள்ள மழுவைப் பிடுங்கி எறிந்துவிட்டு பலராமன் கைக் கலப்பையைக் "கணிச்சி" என்று சொல்லி எமனுடைய தோளில் ஏற்றியிருக்கிறார் உரையாசிரியர்.
அச்சம் தரத்தக்க பறவையின் குரல் (பாடல் 41) என்பதற்குப் பதிலாக "அஞ்சுகிற பறவையின் குரல்" என்கிறார். சாயல் என்றால் அழகின் அசைவு என்று தெரியாமல் "சாய் இன்று" (பாடல் 127) என்பதற்குச் "சாய்ந்தது" என்று எழுதிப் போகிறார். தலைகீழ் உரை விளக்கங்களும் போதுமான அளவுக்கு உள்ளன.
பாடல் எண் 35. படரினும் - செல்லாவிட்டாலும் (சென்றாலும்)
159. அறம் பழியா - விதியைப் பழி சொல்லி (விதியைப் பழி சொல்லாத)
72. புரப்போர் - செல்வந்தர் (ஆதரிக்கப்படும் வறியவர்)
பாடலுக்கு உரை என்பது பாடலைப் புரிந்து கொண்டவர்களாலே எழுதப்படுவது என்பது வாசகர் நம்பிக்கை இல்லை என்கிறார் சுஜாதா.
எளிய அறிமுகம் என்பதால் சில இடங்களில் "அறஞ்செய விரும்பு" நடையில் உரை அமைந்திருக்கிறது. அது போர் என்னும் (89) என்பதை "அது போர் என்னும்" என்றும் "நீரினும் இனிய" (102) என்பதை "நீரினும் இனியவன்" என்றும் சொல்கிறார். உண்மையில் "அது போர் என்னும்" என்பதற்குப் "போர் வந்துவிட்டதென ஆர்ப்பரிப்பான்" என்பதே பொருள். புறப்பாட்டின் காலமும் சூழலும் உரையாசிரியரால் உள்வாங்கப்படவில்லை என்பதால் இவ்வாறான நெருடல்கள் நூலில் பல இடங்களில் எதிர்ப்படுகின்றன.
"மருந்து கொள் மரத்தின் வாள்வடு" (பாடல் எண் 180) என்றால் "மருந்து போட்ட தழும்புகள்" என்று எழுதுகிறவர் "மருந்தாகித் தப்பா மரம்" என்ற குறளுக்கு எப்படி உரை எழுதினார்? மருந்தாகவும் பயன்படும் மரம் உடல் முழுக்க வடுக்களைச் சுமந்து நிற்கும். அது அடுத்தாரைக் காக்கும் பண்பிற்கு உவமை. இருந்துவிட்டுப் போகட்டும். "மருந்து போட்ட தழும்புகள்" என்ற சொற்சேர்க்கைக்கு என்ன பொருள்? தழும்பான பின்பு மருந்து போடும் வழக்கம் எங்கிருக்கிறது? "உற்றுழி உதவியும்" எனத் தொடங்கும் (183) பாடலின் கடைசி அடிகளுக்குச் சுஜாதா தரும் பொருள், "கீழ் சாதியைச் சேர்ந்த படித்தவன் மேல் சாதியைச் சேர்ந்தவனுக்குச் சமமாக மதிக்கப்படுவான்" இதென்ன ஆரியக்கூத்து!
இந்த உரை நூலின் ஆபத்தான பகுதி சுஜாதா தந்திருக்கிற முன்னுரை. அதிலே வெளிப்படுகிற வன்முறை உணர்வு அலட்சிய மனோபாவமும் கிண்டலும் நிறைந்தது. புறநானூற்றை எளிய அறிமுகம் செய்ய வந்தவருக்கு அவர் உதிர்க்கின்ற ஆங்கிலப் பெயர்கள் அனாவசியமானவை. வாசகனை ஏமாற்றுபவை. புரியாத தமிழ், வருணனைத் தோரணங்கள், பொருத்தமில்லாத படி வருணனைகள் - இவையெல்லாம் புறநானூற்றில் மண்டிக் கிடப்பதாக சுஜாதா கண்டுபிடித்திருக்கிறார். ஆழ்வார்களின் பாசுரங்களை ஒழுங்காகப் படித்தவர்கள் கூட இப்படிச் சொல்லமாட்டார்கள். காலத்தின் மொழிநடையினை உள்வாங்கத் தெரியாதவர்கள் அந்தக் காலத்து இலக்கியங்களை படிக்க முயன்று ஒதுக்கி வைத்துவிடலாம். உரை எழுதக் கூடாது. புரியாத தமிழ். பொருத்தமில்லாத வருணனை என்றெழுதுவது சிறுபிள்ளைத்தனம். கலைஞர்களுக்கும் அவர்களை ஆதரித்த வள்ளல்களுக்கும் இடையில் நிலவிய உறவினையே புறநானூறு முதன்மைப்படுத்துகிறது. அந்த நோக்கமே அந்தத் தொகுப்பின் அடிப்படை என்பதைப் புரிந்துகொண்டே புறநானூற்றுப் பாடல்களை அணுக வேண்டும். "பொருத்தமில்லாத வருணனை" என்கிற சுஜாதாவின் அளவுகோலை (கத்தரிக்கோலை)ப் பயன்படுத்தினால் பாரதி, பாரதிதாசன் வகையில் ஆன தமிழ்க் கவிதையின் பெரும் பகுதியைக் கிழித்துப் போட்டுவிடலாம். அதற்கும் சுஜாதா மகிழ்க்சியோடு சம்மதமளிப்பார்.