நாட்டுப்புறப் பாடல்களில் மெய்ப்பாடுகள்

Facts in Folksongs - Tamil Literature Ilakkiyam Papers

இலக்கியங்களை வாய்மொழி இலக்கியம் என்றும் ஏட்டிலக்கியம் என்றும் தமிழ்முன்னோர் பாகுபடுத்தியுள்ளனர். எழுத்துருவம் பெறாத வட்டார வழக்குச் சொற்களைக் கொண்டு படித்தோர் மற்றும் பாமரர்களால் படைக்கப்படும் இலக்கியங்களே இந்த வாய்மொழி இலக்கியங்கள். நாட்டுப்புற இலக்கியங்களும் இந்த வகையில் அடங்கும். இந்த நாட்டுப்புற இலக்கியங்களில் நம்மைப் பெரிதும் வசப்படுத்துவது நாட்டுப்புறப் பாடல்கள் என்றால் அது மிகையாகாது.

சமூகத்தில் அனைத்து தர மக்களின் மனங்களில் மறைந்துக்கிடக்கும் கருத்துப் புதையல்களை வெளிக்கொணரும் ஒரு கருவியே இந்த நாட்டுப்புறப் பாடல்கள். இந்த நாட்டுப்புறப் பாடல்கள் தொல்காப்பியரால் குறிப்பிடப்படும் எட்டு வகையான மெய்ப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பிறக்கின்றது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

மெய்ப்பாடு:-

உள்ளத்தில் தோன்றும் நிகழ்வுகளுக்கு ஏற்ப வெளியில் தோன்றும் மாறுபாடே மெய்ப்பாடு என்பர். இந்த மெய்ப்பாட்டைத் தொல்காப்பியர்,

"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப் பாடென்ப" (தொல். பொருள். நூ-1197)

என்று வகைப்படுத்துவர். இந்த எட்டு வகையான மெய்ப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டுப்புறப் பாடல்கள் பிறக்கின்றன.

நகை மெய்ப்பாடு:-

இறைவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பரிசு சிரிப்பாகும். இது ஒருவரை இகழ்வதினாலும் இளமைத் தன்மையாலும் அறியாமையாலும், அறிந்தும் அறியாதது போல் இருப்பதினாலும் வரும் என்பர் தொல்காப்பியர். நாட்டுப்புற நலுங்குப் பாடல்களில் இது மிகுதியாக கையாளப்பெறுகின்றது. திருமணமான மணமக்களை அருகருகே அமர வைத்து அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி எள்ளி நகையாடுவர்.

கறுப்பு கறுப்புன்னா காக்கா கறுப்புடி
எண்ணெய்க் குடத்திலேயும் தெரியுதடி உன் கறுப்பு
தண்ணிக் குடத்திலேயும் தளும்புதடி உன் கறுப்பு
பந்தலுக்கு மேலே பறக்குதடி உன் கறுப்பு

என மணமகள் கறுப்பாக இருப்பதை இவ்வாறு பாடும்போது சிரிப்பாகி மெய்ப்பாடு புலப்படுவதைக் காணலாம். மேலும்,

ஆணையின் மேல் ஏறி எங்கள் அண்ணன்
ஆற்றுக்குப் போகையிலே
ஆணைமணி ஒசைக் கேட்டு
அருகவந்த பெண்மணியோ?

இங்கு ஒரு தங்கை தன் அண்ணன் போன இடமெல்லாம் தன் அண்ணனுக்கு மனைவியாகிய இந்தப் பெண் போயிருப்பாள் என்று பாடும் போது நகை வெளிப்படுவதைக் காணலாம்.

அழுகை மெய்ப்பாடு:-

உற்றார் உறவினர் இறக்கும் போதும் கணவன் மனைவியைக் கொடுமைப்படுத்தும் போதும் மற்றும் துன்பப்படும் போதெல்லாம் அவர்களின் மனதில் உள்ள துக்கம் அப்படியே வெளிவர பாடுவார்கள். தந்தை இறந்து விட்டார் மகள் அழுது புலம்புகிறாள்,

கடலிலே வாள் இருக்கு - என்னபெத்த ஐயா
கவலையில்ல என்றிருந்தோம்
கடல்வாள் சாஞ்சவுடனே - எனக்கு
கஷ்டமா தோணுதய்யா

கணவன் இறந்ததும்,

ஆத்துக்கு அந்தப்புறம் ஆகாசத் தந்திமரம்
அண்ட நிழலுமில்ல ஆதரிப்பார் யாருமில்ல

கணவன் மனைவியை அடித்ததும்,

தக்காளி பூப்பூக்கும்
தரந்தரமா காய்காய்க்கும் - என்ன பெத்த ஐயா
தரங்கெட்டார் வாசலுல - என்ன
தள்ளிக்கொண்டு மாலையிட்டார்

இவ்வாறு இழிவு, இழிப்பு, தளர்ச்சி, வறுமை என்ற காரணங்களினால் இத்தகைய மெய்ப்பாடு வெளிப்படுவதைக் காணலாம்.

இளிவரல் என்பது ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தல். அதாவது, அவமானப்படுத்தல். இது முதுமை, நோய், துன்பம், எளிமை என்ற காரணங்களால் தோன்றும். ஒரு பெண் தனக்கு எதிராக தன் வாழ்க்கையைப் பங்கு போட வரும் சக்களத்தியைப் பழித்துப் பாடும்போது,

கெண்டைக்காலு பெருத்தவளாம் கிளையிலேயும் ஆகாதும்பா
மொன்னமூஞ்சி சக்களத்தி முத்தத்துக்கு ஆகாதடி
பனங்கா மூஞ்சி சக்களத்தி பந்தலுக்கு ஆகாதடி
அன்னநடை நடக்காதடி ஆம்பளைக்கு மோசம்வரும்.

என்று பாடுகின்றாள். இதில் இவள் தன் சக்களத்தியின் மீது கொண்டிருந்த வெறுப்பையும் அதனால் அவளைப் பழித்துப் பாடுவதையும் காணலாம்.

மருட்கை:-

வியப்பு காரணமாக மெய்ப்பாடு தோன்றும். காணாததைக் கண்ட போதும், பெருமையிலும், சிறுமையிலும் ஒன்று வேறொன்றாகும் போதும் இத்தகைய மெய்ப்பாடு வெளிப்படும். ஒரு காதலன் காதலியை வியந்துப் பாடுகின்றான்.

பொட்டுமேல பொட்டுவச்சு பொட்டலிலே போறதங்கம்
பொட்டலிலே பெய்தமழை - உன் பொட்டழிய பெய்யிலேயே
பாலத்திலே நானிருக்க பால்போல் நிலவடிக்க
மின்னிட்டாம் பூச்சிபோல மின்னுதடி மேல்மூக்கு
சிவி நல்லாசினுக்கிக் கிட்டு சிங்கார கொண்டையிட்டு
ஆத்தாடி இந்தக் கொண்டை ஆருககுடிய கெடுக்குமோடி

என்ற பாடலில் தலைவன் தன் காதலியின் அழகை வியந்து பாடுவதிலிருந்து அறிந்துக் கொள்ளலாம்.

அச்சம்:-

கொடிய தெய்வத்தைப் பார்க்கும் போதும், கொடிய விலங்கினைக் காணும்போதும் கள்வர், அரசர் இவர்களைக் காணும்போதும் இந்த அச்சமாகிய மெய்ப்பாடு தோன்றும். இந்த மெய்ப்பாட்டை நாட்டுப்புற மக்களிடம் அதிகம் காணலாம்.

காரஞ்செடி கல்கோட்ட
கண்ணுக்கெட்டா சிமையிலே
காரஞ்செடி குத்தறதும்
கண்டசனம் பேசறதும் - என்னபெத்த அம்மா
தரிக்கமுடி கூடலியே

ஒரு பெண் தன் வீட்டில் செல்வசெழிப்புடன் வாழ்ந்து, பின் வாக்கப்பட்டு சிமைக்குச் செல்கிறாள். அங்கு மாமியார், கணவர், நாத்தனார் கொடுமை தாங்கமுடியாமல் அவர்களைக் கண்டு அஞ்சி தாயை நினைத்துப் பாடுகின்றாள். அவ்வாறு பாடும்போது அங்கு அச்சமாகிய மெய்ப்பாடு புலப்படுவதைக் காணலாம்.

பெருமிதம்:-

பெருமிதம் என்பது மேம்பாடு. இது கல்வியாலும் அஞ்சாமையாலும் நன்னடையாலும் வள்ளல் தன்மையாலும் வரும்.

இங்கீலிஸ்துரை முன்னாலே - உங்கள் அம்மான்
எதிரநின்னு பேசயிலே
ஐக்கோட்டார் முன்னாலே - உங்களம்மான்
அருகே நின்னு பேசயிலே
வக்கீலுக்கும் வாக்குரைக்கும் வாழ்கருணர்
உங்களம்மான்
கேசை செயித்துவரும் கெவர்னர்துரை உங்களம்மான்.

இந்த தாலாட்டுப்பாடலில் ஒரு தாய் தன் குழந்தையைத் தாலாட்டும் போது தன் சகோதரனின் அருமை புலப்பட பெருமிதப்பட்டு பாடுவதிலிருந்து இத்தகைய மெய்ப்பாடு வெளிப்படுவதைக் காணலாம்.

வெகுளி:-

வெகுளி என்பது சினத்தைக் குறிக்கும். உறுப்புக்களை அறுப்பதினாலும், மக்களைத் துன்புறுத்துவதினாலும், அடிப்பதினாலும் அறிவாற்றல், புகழ், முதலியவற்றைக் கொன்றுரைப்பதினாலும் ஒருவருக்கு இந்த வெறுக்கத்தக்க சினமானது தோன்றும்.

நாட்டுப்புறத்தில் கணவனோடு ஒரு பெண் சண்டை இடுகின்றாள். அதன் விளைவாக அவளது கோபவுணர்ச்சி பாடலாக பொங்கி வழிகின்றது.

கருநாகம் மலையோரம் கன்னி குடியிருந்தோம்
கனகாபூத்திருந்தோம் கலராத ராசனோடு
கலந்துப்பூ முடித்தோம்
கன்னி குறுகுதனே கனகாமரம் வாடுதனே
திருநாறு மலையோரம் தேவிகுடியிருந்தோம்
செவ்வந்திப்பூவா பூத்திருந்தோம் சேராத ராசனோடு சேர்ந்து பூமுடிச்சோம்.

இப்பாடலில் தமக்கு பொருந்தாத கணவனோடு சேர்ந்து வாழமுடியாததைச் சினமுற்று வெகுண்டு பாடுவதிலிருந்து அறியலாம்.

உவகை:-

உவகை என்பது மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி செல்வ நுகர்ச்சியாலும் அறிவு முதிர்ச்சியாலும் உள்ளங்கள் இனைவதாலும் கூடி ஆடுவதாலும் வெளிப்படும். இங்கே ஒரு பெண் குழந்தைக்குக் தாலாட்டுகின்றாள். இத்தாலாட்டில் தன் சகோதரனின் சிறப்பை மகிழ்ச்சிப்பொங்க பாடலில் வடிக்கின்றாள்.

சிமையோ பட்டணமோ சிவப்புவச்ச மோதிரமோ
சிறப்போட வந்திறங்கும் கண்ணே செல்வதியோ உங்களம்மான்
மதுரையோ பட்டணமோ என் - கண்ணே மருதாணி மோதிரமோ
மதிப்போட வந்திறங்கும் மந்திரியோ உங்களம்மான்

இத்தாலாட்டில் உவகையாகிய மெய்ப்பாடு வெளிப்படுவதைக் காணலாம்.

நன்றி: வேர்களைத் தேடி

Site Meter