கவிதையின் கவிஞர்-சுரதா

Poet Suratha - Tamil Literature Ilakkiyam Papers

கடந்த நூற்றாண்டின், முதல் ஐம்பதுகளில், பாரதிதாசன் கவிதை ஆளுமை அவருக்கென்று ஒரு பெரிய பரம்பரையை உருவாக்கி வைத்தது. பாரதி பரம்பரையில் பாரதிதாசன் ஒருவருக்கு மட்டுமே அப்படிப்பட்ட வரலாற்றின் தொடர்ச்சி வாய்த்தது. அவருடைய தமிழ் உணர்வு, சமூகப்பார்வை, அரசியல் சாய்வு பாரதிதாசன் பரம்பரை என்று முத்திரை பதித்த கவிஞர்களிடமும் தொடர்தன. கவிதையாக்க நெறிமுறைகளும் நியமங்களும்கூட பாரதிதாசத் தளத்தின் அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் தலைமையிலேயே அவர்களிடம் பதிவாகி இருந்தன. பாரதிதாசனின், பரம்பரையில் ஒருவர் சுரதா.

சுரதா தனக்கென ஒரு பரம்பரையைக் கண்ட பெருமையும் சுரதாவுக்கு உண்டு. நீலமணி, பொன்னிவளவன், பனப்பாக்கம் சிதா, நன்னியூர் நாவரசன், முருகுசுந்தரம் என்று தொடரும் பட்டியல் இவ்வரலாற்று உண்மைக்குச் சான்று. மேலும் மீரா, அப்துல் ரகுமான், காமராசன் முதலிய பலருக்கும் கவிதைக் குருவாக அவர் இருந்திருக்கிறார் என்பதை அவர்களே வெளிப்படுத்தியும் இருக்கின்றனர். கவிதையாக்க நெறிமுறைகளில் வேறுபட்ட உத்திகள், வெளிப்பாட்டுப் பாங்குகள் எனத் தனித்துவம் உள்ளவராகத் தன்னை வளர்த்து, தனக்கென ஓர் ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர் சுரதா. ஆனால் பாரதிதாசனுக்குப் பிறகான தமிழ்க் கவிதை உலகில் அவர் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியபோதிலும், தொடர்ந்து கவிதைத் தளத்தில் தன் பரிமாணங்களை வளர்த்துக் கொண்டவர் என்றோ, புதிய எல்லைகளைத் தொட்டவர் என்றோ சொல்லமுடியாதபடி, தன் வளர்ச்சியின் ஒரு காலகட்ட வலுவைக் கொண்டே தன்னை நிறுவி, கவிதைச் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டார் சுரதா.

திரைப்படக் கதை வசன ஆசிரியர், பாடல் ஆசிரியர், கவிதை இதழ் ஆசிரியர், கவியரங்கத் தலைவர் எஞ்சிய பன்முகச் செயல்பாடுகள் கொண்டவர் சுரதா. தன் மனத்திருப்பத்தை மேடைகளில், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பேசுவார். உவப்பான உரையாடலாளர் என்கிற தன்மைகளையும் கொண்டிருந்தார். எதார்த்த நிபந்தனைகளை ஏற்று தன்னைத் தகவமைத்துக் கொள்ளும், சமரசம் என்னும் பெயரிலான சரிவுக்குச் சரியென்று ஒத்துப்போகாதவர்; போயிருந்தால் விளம்பரமும் பணமும் குவிந்திருக்கக் கூடும். இன்று அவர் மேல் பொழியப்படும் புகழ், மரணத்தை அடுத்து எப்படிப்பட்டவர் மேலும் சடங்கு நிலையினதாகக் கற்பிதம் செய்யப்படும் புனைவுத்தன்மை உள்ளதாக இல்லாமல் இருப்பதற்குக் காரணமே, அவருடைய - அவரே அமைத்துக் கொண்ட வாழ்க்கைக் கட்டமைப்புதான். அவரது வாழ்வில் அவ்வப்போது காணப்பட்ட திசை மாற்றங்கள்கூட, ஒரு கவிஞனுக்குரிய உணர்வு முனைப்பின், விடுதலைப் போக்கின் வெளிப்பாடுகளே அல்லாமல், தர்க்கப்படுத்தலுக்கு உள்ளடங்கும் காரணகாரிய மூலக்கூறுகளை உடையன அல்ல. கருத்தியலில் திராவிட இயக்கச் சார்பு இருந்ததெனினும், அவர் கவிதைகளில் இயக்கச் சார்பு அதிக அளவிலும், அழுத்தமான கொள்கை பரப்புப் போக்கிலும் இருந்ததில்லை. சுரதாவின் உளவியல், கவிதை ஆக்க நெறிமுறைகளில் தொழிற்பட்ட முறை வேறுவகையாகவே இருந்தது. இதுவே, அவரை பாரதிதாசனிடமிருந்து பிரித்துக்காட்டியது என்றும் சொல்லலாம். கொள்கைக் கவிஞர் என்பதினும் பார்க்க, கவிதையின் கவிஞர் என்னும் படிவமே அவரைப்ற்றி மேலோங்கி நின்றதற்கும் இதுவே காரணம் என்றும் சொல்லலாம்.

"நுண்புலக் கவிதை வகை" (Metaphysical Poetry) அடையாளங்களோடு தமிழ்க் கவிதையை வளர்த்தெடுத்த பெருமை சுரதாவுக்கு உண்டு. மானுடத்திற்கும் பிரபஞ்சத்திற்குமான தொடர்வை மெய்யில் பார்வையோடு காணும் நெறியே மெட்டாஃபிசிக்கல் என்பது. தாந்தே, மில்டன் ஆகியோரது படைப்புகளில் செயல்பட்ட தத்துவார்த்தம் இது. நுண்புலக்கவிதை, உணர்ச்சியின் கட்டற்ற வெள்ளப் பெருக்காக இல்லாமல், அறிவுத்திறனின் ஆற்றல் வெளிப்பாடாக இருப்பது பொருளோடு, வழக்கமாகப் பொருத்திப் பார்க்கும் உவமைகளைப் புறந்தள்ளிவிட்டு, எங்கோ வெகுதொலையில் உள்ளவற்றைக் கொண்டு வந்து உவமைகளாக்கிக் கவிதைகளில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துவது, அத்துடன் வரலாற்றிலும் வாழ்க்கை அனுபவத்திலும் சந்தித்த அரிதான தகவல்களையும் நிகழ்வுகளையும் கவிதைகளில் கொண்டு வந்து திறமையோடு கலந்து வைத்தனர் இந்த கவிஞர்கள். கற்பனைகள் வேட்டையாடிக் கொண்டு வருவதை இக்கவிதைப் போக்கு விரும்பவில்லை என்றே சொல்ல வேண்டும். 1660 ஆம் ஆண்டுக்குப்பின் இத்தகைய நுண்புலக் கவிதைகள் வெறுத்து ஒதுக்கித் தள்ளப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான டி.எஸ். எலியட் இக்கவிதைகள் பற்றி எழுதியதன் விளைவாக, மீண்டும் நுண்புலக் கவிதைப் போக்கு புத்துயிர்த்தெழுந்தது. புதுக்கவிதை வளர்ச்சியில் தன் சாயலைப் படிய வைத்தது.

அவைகளைத் "தண்ணீரின் ஏப்பம்" என்றும், மாநிறம் என்பது "கறுப்பின் இளமை" என்றும், பல்லியைப் "போலி உடும்பு" என்றும், அழுகையைக் "கண்மீனின் பிரசவம்" என்றும் உவமைப்படுத்தும் சுரதா கவிதைகள், தமிழில் முதன் முறையாக நுண்புலக் கவிதைத் தன்மையாகிய அறிவுநுட்பத்தைக் கொண்டு வந்து சேர்த்தன என்று சொல்லலாம். தமிழ்க் கவிதைகளில் தொடர்ந்துவரும் பொதுத்தன்மைகளை உள்வாங்கிக் கொண்டு, அவற்றோடு சேர்த்துத் தனது படைப்புத் திறனின் பங்காக வெளிப்படுத்தியுள்ள கவிதைத் தொழில் நுட்பம் இது. அவர் கவிதைக் கற்பனைகளை ஆதரிக்காதவர் என்றபோதும், இப்படிப்பட்ட தொழில் நுட்பத்தில் கற்பனைத்திறன், கைவிடமுடியாதபடி அவருடைய அறிவுநுட்பத்தின் அங்கமாக அடையாளப்பட்டு விடுகின்றது.

சுரதா, வெள்ளமாகக் கவிதையை ஒருபோதும் கொட்டிவிடுவதில்லை. ஒரு கவிதை அவரிடமிருந்து கிடைக்கப் பலமணிநேரம், ஏன் பல நாட்கள், பல மாதங்கள் கூட ஆகலாம். அவருக்குக் கவிதை என்பது ஒரு தச்சு வேலை போலத்தான். இக்காரணத்தாலேகூட, அவர் படைப்புகளை அதிகமாகச் செய்யாமல் போயிருக்கலாம். தொடர்ந்து இருந்துவரும் சிந்தனைத் தடத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு, தனக்கான புதுச்சிந்தனையைத் தேடிப்போய்விடுவார் சுரதா. திரும்பி வரும்போது நமக்குத் திகைப்பூட்டும் கவிதை மின்னல்கள் கிடைக்கும். நிலவைப் பற்றிச் சொல்ல, பளிங்கு நிலா, பால்நிலா, வெள்ளிநிலா, தங்கநிலா, முத்துநிலா என்று ஏற்கனவே கவிதைக் களத்தில் உள்ளனவற்றையெல்லாம் தவிர்த்துத் தாண்டிப்போய் அவர் உழைக்க முற்பட்டுவிடுவார். வெண்மைக்கு வேறுவேறு மூலங்களை நோக்கிப் போய், வேறு என்ன வார்த்தை கிடைக்கும் என்று தேடுவார். முடிவில் துணி வெளுக்கப்பட்டதும் சலவைத் துணி என்று சொல்லப்படும் சொல்வழக்கு அவர் கவித்துவ இயக்கத்தின் எல்லைக்குள் வந்து சேரும். எவரும் எதிர்பார்க்காதபடி பளிச்சென்று வந்து விழும் சலவைநிலா என்னும் புதிய வார்ப்பு. இது சுரதாவின் கவிதைத் தொழில் நுட்பப் கூறுகளில் முக்கியமான ஒன்றாக அமைந்து, அவருக்கே உரிய தனித்துவச் சிறப்பானதோடு, அவரைப்பின்பற்றி எழுதுகிறவர்களுக்கும் அப்படி எழுத வேண்டும் என்னும் ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டிவிட்டது.

நதியின் அலை நுரைகளையும் அவற்றில் தோன்றும் குமுழிகளையும் நரைத்த நுரை முட்டையிட்டுக்கொண்டிருந்த நதி நீட்டம் என்று வித்தியாசமாகச் சொன்ன சுரதா, கால நதியில் கலந்துவிட்டாலும், காலத்தை வெல்லும் உவமைகளாலும், புதிய வார்த்தை வார்ப்படங்களாலும், மிடுக்கான நடையின் ஓசைச் சிலிர்ப்புகளாலும் தொடர்ந்து வாழ்வார்.

நன்றி: தீராநதி

Site Meter