இனியவை நாற்பது உணர்த்தும் கல்வி நெறிகள்

Iniyavari Naarpathu Unnarthum Kalvi Neerigal - Tamil Literature Ilakkiyam Papers

அனைத்து செல்வங்களுள் முதன்மையான செல்வம் கல்வி.அத்தகைய கல்வியை கல்லாமல் இருக்க கூடாது.

முன்னுரை

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன.இதில் அறநூல்கள் பதினொன்றாகவும் ,அகநூல்கள் ஆறாகவும், புறநூல் ஓன்றாகவும் அமைந்துள்ளன.இந்நூல் அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது.இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார். இவர் சிவன்,திருமால்,பிரம்மன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் என்பதை அறிய முடிகிறது. இந்நூலில் அமைந்துள்ள நாற்பது பாடல்களில் நான்கு பாடல்கள் (1,3,4,5) நான்கு கருத்துக்களையும்,மீதமுள்ள முப்பத்தாறு பாடல்கள் மூன்று கருத்துக்களையும் வலியுறுத்தியுள்ளன.இப்பாடல்களை பொதுவாக நோக்கும் போது ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறநெறிகளை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ளதை நோக்கத்தக்கது.இந்நூலில் இடம்பெறும் கல்வி நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்விக்கு அகராதி தரும் விளக்கங்கள்

கல்வியைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான “எஜிகேஸன்” (EDUCATION) என்பதற்குத் தேர்ச்சி,படிப்பு,கல்விப்பயிற்சி, வித்தை,சிட்சை,பழக்கம் என 'வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி’ விளக்கமளிக்கிறது. (ப.420) சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி கல்வி என்பதற்கு கற்கை இகல்வியறிவு, வித்தைஇ பயிற்சி, நூல், என்று பொருள் விளக்கம் தருகிறது. சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில தமிழ் அகராதி “எஜிகேஸன்” என்பதற்கு கல்விப் பயிற்சியளித்தல்,கல்விப்பயிற்சி,மனப்பண்புப்பயிற்சி, விலங்குகளின் பயிற்றுவிப்பு,பழக்குவிப்பு என்று பொருள் கூறுகிறது. தமிழ் - தமிழ் அகரமுதலி கல்வி என்பதற்கு அறிவு,வித்தை,கற்கை, கற்கும் நூல்,பயிற்சி என்று பொருள் உரைக்கிறது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கல்வி என்பதற்கு படித்துப் பெறும் அறிவு,முறைப்படுத்தப்பட்ட அறிவு,“எஜிகேஸன்” என்று பொருள் கூறுகிறது.(ப.266) கௌராதமிழ்அகராதி அறிவு,கற்றல்,நூல்,வித்தை,கல்வியறிவு,கற்கை,பயிற்சி,உறுதி,ஊதியம்
ஓதி,கரணம்,கலை,கேள்வி,சால்பு,தேர்ச்சி,விஞ்சை என்று கல்விக்கு பொருள் கூறுகிறது.(ப.233)

கல்வியின் சிறப்புகள்

தனிமனித வாழ்வையும்,நாட்டின் முன்னேற்றத்தையும் உயர்த்துவது கல்வி.அத்தகைய கல்வி மனிதனின் உள்ளத்தில் மறைந்து கிடக்கும் அறியாமை இருளை அகற்றுகிறது.கல்விப் பற்றி அமுதன் அவர்கள் கூறும் போது கல்வி என்ற சொல்லுக்கு மனத்தைப் பண்படுத்தல் என்பதே பொருள்.கல் என்னும் அடிச்சொல்லிருந்தே கல்வி.கலை,கலாச்சாரம் முதலிய பண்பாடுகள் விளங்குகின்றன என்பார். (அறமெனப்படுவது, பக்.4-5)

கல்வி என்பது ஒரு சமூகம் தன்னுடைய தலைமுறையினருக்குத் தன்னுடைய மரபுகள், வழக்கங்கள்,விழுமியங்கள் முதலியவற்றைச் செலுத்த முயலும் செயற்பாங்காகும்.வேறுவகையில் சொன்னால் கல்வி என்பது ஒரு பண்பாடு, ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குச் செலுத்தப்படும் செயற்பாங்கு என்று குறிப்பிடுகிறார் சி.என்.நடராசன். (சமூகவியல்,ப.32)

கல்வி வல்லுநரான ஜேம்ஸ்ராய் அவர்கள் கல்வியானது மனிதனிடம் புதைந்து கிடக்கும் நன்மைகளையும்,திறமைகளையும்,சக்திகளையும் வெளிக்கொணர்ந்து ஆக்க சக்தியினை இயக்கச் சக்தியாகப் பரிமமிக்க உதவுகின்றது என்பார். (சையத் ஜாகீர் ஹசன்,நீதி நூல்களில் கல்வி,ப.52)

ப்ராய்டு கல்வித்தத்துவம் என்ற நூலில் கல்வியை பற்றி கூறும் போது கல்விச்செல்வம் மனித மனத்தை வளரச்செய்கிறது.கல்வி தன்னை உயர்த்துவதைக் காட்டிலும் தான் சார்ந்த சமூகத்தையும் நாட்டையும் பெருமையடையச் செய்கிறது என்பார். இத்தகைய கல்வியை எத்தகு நிலையிலும் கற்க வேண்டும் என்பதை,

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே (புறம்.183:1-2)

கூறுகிறது.கல்விச் செல்வத்தின் மேன்மையைப் பற்றி வள்ளுவரும் குறிப்பிட்டுள்ளார்.இதனை,

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை (குறள்.400)

என்ற குறளின் வழி அறியலாம்.

இரந்து கல்வி கல்

இனியவை நாற்பதில் கல்வி பற்றிய செய்திகள் ஏழு பாடல்களில் (1,3,12,20,16,32,40) இடம்பெற்றுள்ளன.
பிச்சை எடுத்தாயினும் கல்வி கற்க வேண்டும் இதனை,

பிச்சை புக் காயினும் கற்றல் மிக இனிதே (இனி.1:1)

என்ற பாடலடி மூலம் அறியலாம்.மேலும் இக்கருத்தையே அதிவீரராம பாண்டியரும்,

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே (வெற்.பா.35)

என்ற பாடலின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

சபையில் நற்கருத்து சொல்

கற்றோர்கள் கூடும் சபையில் நற்கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை,

நற்சபையில் கைகொடுத்தல் சாலவும் முன்னிதே (இனி.1:2)

என்ற பாடலடி புலப்படுத்துகிறது.

கற்றவருடன் சேர்

கற்றறிந்த மேன்மக்களோடு கூடி வாழ வேண்டும்

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.(இனி.1:3-4)

என்ற பாடலடி உணர்த்துகிறது.மேலும் மற்றொரு பாடலில் கற்றறிந்த அறிவின் மிக்கவருடன் பழகு என்கிறது.இதனை

மிக்காரைச் சேர்தல் மிக மாணமுன் இனிதே (இனி.16:1)

என்ற பாடலடி சுட்டுகிறது.

நாள்தோறும் நூலை கல்

குற்றங்கள் இன்றி நாள்தோறும் கல்வியை கற்றல் வேண்டும்.

நாளும் நவைபோகான் கற்றல் மிக இனிதே (இனி.3:2)

என்ற பாடலடி சுட்டுகிறது.மேலும் இக்கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பிற்கால நீதி இலக்கியங்களுல் ஒன்றான உலக நீதியும் இக்கருத்தையே தெரிவிக்கின்றன.இதனை,

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் (1:1)

என்ற பாடலடி உணர்த்துகிறது.

கல்வியை அச்சமில்லாமல் வெளிப்படுத்து

அறிஞர் சபையில் அச்சமில்லாமல் கல்வியை வெளிப்படுத்த வேண்டும்.இதனை,

கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே (இனி.12:2)

என்ற பாடலடி உணர்த்துகிறது.

உரைகளைப் போற்று

கற்றறிந்த பெருமக்களின் உரைகளைப் போற்றி ஒழுக வேண்டும் என்பதை,

புலவர் தம் வாய்மொழி போற்றல் இனிதே (இனி.20:2)

என்ற பாடலடி உணர்த்துகிறது.

கற்றவருடன் கல்வியை உரை

கற்றவருடன் ஒருவர் கல்வியறிவைப் பற்றி உரைத்தல் வேண்டும் என்பதை,

கற்றார்முன் கல்வி உரைத்தல்மிக இனிதே (இனி.16:1)

என்ற பாடலடி குறிப்பிடுகிறது.

கற்றோரின் செயல்

கற்றோரான சான்றோரின் செயல் தன்மை இனிமை உடையது என்பதை,

கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே (இனி.32.1)

என்ற பாடலடி மூலம் அறியலாம்.

பழுதின்றி பல நூல் கல்

பல நாளும் பழுதின்றி நன்மை தரும் நூல்களைக் கற்க வேண்டும் என்பதை,

பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலில் காழினிது இல் (இனி.40:3-4)

என்ற பாடலடி உணர்த்துகிறது. இக்கருத்தையே ஆத்திசூடியும்,

நூல் பல கல் (ஆத்தி.70)

ஏன்று.கூறுகிறது. நூலைக் குற்றம் இல்லாமல் கற்க வேண்டும்,என்ற செய்தியை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.இதனை,

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள்.391)

என்ற குறளின் வழி அறியலாம். மேலும் ஏலாதியும் இக்கருத்தையே நுவலுகிறது.இதனை,

உணராமை யால்குற்றம் ஒத்தான் வினையாம்
உணரான் வினைப்பிறப்புச் செய்யும் -உணராத
தொண்டுஇருந் துன்பம் தொடரும் பிறப்பினால்
மண்டிலமும் ஆகும் மதி (பா.72)

என்ற பாடலால் அறியமுடிகிறது.

முடிவுரை

அனைத்து செல்வங்களுள் முதன்மையான செல்வம் கல்வி.அத்தகைய கல்வியை கல்லாமல் இருக்க கூடாது. வறுமை காலத்திலும் இரந்தாவது கற்க வேண்டும் என்றும்,பல நூலைக் குற்றமில்லாமல் கற்க வேண்டும் என்றும்,கற்றவருடன் சேர வேண்டும் என்றும் கற்றவருடன் கல்வியை உரைக்க வேண்டும் என்றும் அவைக்கு சிறப்பு கல்வி கற்ற சான்றோர்கள் என்றும் கற்றவரின் நிலைக் குறித்தும்,,கல்வியினை பயன் பற்றியும்,கல்லாமையால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் இனியவை நாற்பதின் வழி அறியமுடிகிறது.

சு.ஜெனிபர்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழியல் துறை
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சி -24

துணை நூற்பட்டியல்

  • இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ), பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1, செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001, முதற்பதிப்பு -2009
  • இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ) , பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3, செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001, முதற்பதிப்பு -1999
  • பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம், கொற்றவை வெளியீடு, சென்னை -600017, முதற்பதிப்பு -2014
  • பாலசுந்தரம் ,ச திருக்குறள் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை -600017 , பதிப்பு -2000
  • அகராதி வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி
  • சென்னைப்பல்கலைக்கழகதமிழ்ப்பேரகராதி
  • க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
  • கௌராதமிழ்அகராதி
Site Meter