அற இலக்கியம் நாற்பது உணர்த்தும் இல்லற நெறிகள்

Forty literature reflects the moral principles of conjugal - Tamil Literature Ilakkiyam Papers

இல்லற வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒத்து வாழ வேண்டும். கற்பு, அடக்கம், அன்பு முதலிய குணங்களே பெண்ணிற்குச் சிறப்பு சேர்ப்பவை. இல்லற வாழ்க்கையில் சுற்றத்தார் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

முன்னுரை

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் என பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம், என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று, அகநூல் ஆறு, புறநூல் ஒன்று என்ற முறையில்அமைந்துள்ளன. இந்நூல்கள் பதினொன்றில் நாற்பது என்று முடியும் இரண்டு நூல்களாக இனியவை நாற்பதும், இன்னா நாற்பதும் விளங்குகின்றன. இந்நூல்களின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார், கபிலர் ஆவார். இவர்களின் கடவுள் வாழ்த்து செய்யுள் சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரைப் பாடியிருப்பதால் சமயப்பொது நோக்குடையவர் என்பதை அறியமுடிகிறது. இந்நூல்களில் காணப்படும் இல்லற நெறிகளை ஆராய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இல்லறம் என்பதன் விளக்கம்

இல்லறம் என்பது அறத்திற்கு அடிப்படையாக விளங்குவதாகும். இல்வாழ்க்கை என்பது ஆணுக்கு மட்டுமோ அல்லது பெண்ணுக்கு மட்டுமோ உரியது அல்ல.இல்லறம் இருபாலருக்கும் அறம் வளர்க்கும் களமாகும். இல்லறம் என்பதற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கணவன்,மனைவி சேர்ந்து நடத்தும் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை, LIFE OF A HOUSE HOLDER என்று பொருள் விளக்கம் தருகிறது. (ப.108) கௌரா தமிழ் அகராதி இல்லறம் என்பதற்கு இல்வாழ்க்கை என்று பொருள் உரைக்கிறது. (ப.102) தமிழ் - தமிழ் அகர முதலி இல்லறம் என்பதற்கு இல்வாழ்க்கை, இல்லத்தில் மனையாளோடு கூடி வாழும் ஒழுக்கம், இல்வாழ்வார் கடமை என விளக்கமளிக்கிறது.

இல்லறம் என்பதற்கு தொல்காப்பியர் தரும் விளக்கம்

ஒரு நாட்டின் அடிப்படைப் பண்பாக விளங்குவது இல்லறம். இவ்வில்லறம் சிறப்பாக அமையும். தலைவனும், தலைவியும் பலர் அறிய திருமணம் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துதல் இல்லறமாகும். தொல்காப்பியர் கற்பு என்ற பெயரில் இல்லறவொழுக்கத்தை குறிப்பிட்டுள்ளார். இதனை,

மறைவெளிப்படுதலும் தமரிற்பெறுதலும்
இவைமுதலாகிய இயல்நெறி பிழையாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவோடு புணர்ந்து கற்பெனப் படுமே (தொல். பொருள்.1443)

என்ற நூற்பாவின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.

இல்லறம் விளக்கம்

இல்லறம் என்ற சொல்லை இல் - அறம் என்று பிரிக்கலாம். அறங்களைப் பேணுதற்குரியோரின் வாழ்க்கை நெறிகளைக் (LIFES PROPER METHOD OR WAY)—பின்பற்றுவதற்கு வகுக்கப்பட்ட வழி) கூறுவது இல்லறமாகும். இது மணவாழ்கை என்று வழங்கப்படுகிறது. அறம் என்ற சொல்லிற்கு நேரான பொருள் வழியை உண்டாக்குவது என்பதால் மக்களின் நலத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் இல்லறம் துறவறம் என்று அமைவதற்கு வழியை உண்டாக்கித் தருகிறது. எதிலும் இன்பம் காண்பதே எல்லா உயிர்களின் இயல்பு. மனித வாழ்விலும் இன்பம் காணும் இல்லறம் முதலிடமாக அமைந்துள்ளன.

உலகவாழ்க்கைக்கு முதல் அடிப்படை இல்லறம் கணவனும், மனைவியும், உடலாலும்உள்ளத்தாலும் இரண்டறக் கலந்து உலக இன்ப நெறியோடு ஒழுகி வாழ்தலே இல்லறம் ஆகும்.

இல்வாழ்கையின் சிறப்பு

கணவன்,மனைவி இவர்களிடையில் ஒற்றுமை மலர்ந்து இவர்கள் குழந்தைகளுடன் ஒற்றுமையாக வாழ்வதே இல்வாழ்க்கை ஆகும்.
இல்வாழ்க்கை வாழும் மனையாளுக்கு சிறப்பு தருவது மக்கட்பேறு ஆகும். இதனை,

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு (60)

என்ற குறளின் வழி அறியமுடிகிறது.
இல்லறத்தின் சிறப்பை பற்றி திரு. வி.க,

மனைமாட்சி ஞாயிறு போன்றது – மற்ற
மாட்சிகள் கோள்கள் போன்றன
ஞாயிறு இல்லா விடத்து கோள்களுக்கு
ஒளி ஏது? அவைகள் இருந்து இல்லாதன
போலாகு மல்லவோ? வாழ்க்கையில் எல்லா
மாட்சிகள் இருந்தும் அதன்கண் மனை
மாட்சி ஒன்றில்லையாயின் அம்மாட்சிகளான்
விளையும் பயிர் என்ன? அவைகள்
பிணங்களை ஒத்தே கிடக்கும் (திருக்குறள்விளக்கவுரை. ப.491)

மேலும் ஒளவையாரும் இல்லறத்தை நல்லறம் என்று கூறுகின்றார். இதனை,

இல்லற மல்லது நல்லறமன்று (கொ. வே.3)

என்ற பாடல் வரியால் உணரமுடிகிறது.

இனியவை நாற்பதில் இல்லறம்

இனியவை நாற்பதில் இல்லறம் பற்றிய செய்திகள் மூன்று பாடல்களில் (3,11,6) அமைந்துள்ளன.
கணவனும் மனைவியும் ஒத்து வாழ்வது இல்லறத்தின் சிறப்பாகும். இதிலிருந்து மாறுபட்டு வாழக்கூடாது என்பதை,

ஒப்ப முடித்தால் மனைவாழ்க்கை முன் இனிது (இனி. 3:2)

என்ற பாடலடி மூலம் அறியலாம். இக்கருத்தையே நன்னெறியும்,

காதல் மனையாளும் காதலனும் மாறு இன்றி
தீதில் ஒரு கருமம் செய்பவே (6:1-2)

என்று கூறுகிறது.

கற்பு

பெண்கள் கற்புடன் வாழ்வதே சிறந்தது ஆகும். கற்பு, காமம், நல்லொழுக்கம், பொறை, நிறை, விருந்து புறந்தருதல், சுற்றம் ஓம்பல் ஆகிய பண்புகளாக தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.(தொல்.பொருள்.கற்.இளம்.நூ.150) இவற்றுள் முதன்மையாக இடம்பெறுவது கற்பெனும் பண்பே. மேலும் மகளிர்க்கு உயிரினும் சிறந்ததாக நாணத்தையும்,நாணத்திலும் சிறந்ததாகக் கற்பையும் தொல்காப்பியர் வலியுறுத்தியுள்ளார்.( தொல்.பொருள்.கற்.இளம்.நூ.1)
இல்லறப் பெண் கற்பு நெறியுடன் வாழ வேண்டும் என்று ஒரு பாடலில் பூதஞ்சேந்தனார் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு கற்பு நெறி தவறி வாழும் பெண்ணை நீங்கி வாழ்வது நல்லது என்பதை,

நிறைமாண்டில் பெண்டிரை நீக்கல் இனிது (இனி. 11:2)

என்ற பாடலடியில் ஓழுக்கம் இல்லாத பெண்ணை நீங்கி வாழ்ந்த வழக்கம் இருந்ததை அறியமுடிகிறது.

இல்லறப்பெண்ணை நோக்காமை

இல்லறப்பெண்ணை ஓருவன் நோக்காமல் இருப்பதே சிறந்தது. பிறரின் மனைவியை விரும்பாமல் இருப்பது ஒழுக்கங்களுள் தலையானதாகும். அறத்தையே இலட்சியமாகக் கொண்டவர்கள் பிறன்மனைவியை விரும்பும் அறவீனச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள். பிறரின் மனைவியை நோக்க கூடாது என்பதை வள்ளுவரும் குறிப்பிட்டுள்ளார்.இதனை,

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (148)

என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.
பிறர்மனையை நோக்கக் கூடாது என்பதை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் இதனை,

பிறன்மனை பின்னோக்காப் பீடினி(து) ஆற்ற (இனி. 16:1)

என்ற பாடலடி உணர்த்துகிறது.

இன்னா நாற்பதில் இல்லறம்

இன்னா நாற்பதில் இல்லறம் குறித்த செய்திகளை எழு பாடல்களில் (1,2,3,11,13,14,38) கபிலர் கூறியுள்ளார்.

இல்லறத்தில் சுற்றம் இருக்க வேண்டும்

சுற்றம் என்பதற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உறவு சொந்தம் RELATION KITH AND KIN என்று பொருள் விளக்கம் தருகிறது. (ப.461). சுற்றத்தார்க்கு அழகாவது நலந்தீங்குகளில் சூழ வந்திருப்பதாகும். வாழ்கையில் கணவன், மனைவி ஆகியோர்க்கு நன்மை தீமைகளைப் பகுத்து கூறுபவர்கள் சுற்றத்தார். கபிலர் சுற்றத்தார் இல்லாத இல்வாழ்க்கை பெருமை தராது என்று குறிப்பிடுகிறார். இதனை,

பங்கமில்லாத மனையின் வனப் பின்னா (இனி. 1:1)

என்ற பாடலடி உணர்த்துகிறது. இதன் மூலம் இல்வாழ்கையில் சுற்றத்தார் முக்கிய பங்கு வகுக்கின்றனர் என்பது புலப்படுகிறது.கொன்றை வேந்தனும் இக்கருத்தையே கூறுகிறது.இதனை,

சுற்றத்திற் கழகு சூழ விருத்தல் (30)

என்ற பாடலடியில் அறியலாம். மேலும் திரிகடுகமும் பிறர் குணமறிந்து நடப்பவர் சுற்றத்தினர் என்கிறது கிடைத்தற்கரிய அருமையானவர் என்பவர் என்று குறிப்பிடுகிறது இதனை,

சீலம் அறிவான் இளங்கிளை (திரி. 13:1)

என்ற பாடலடியில் உணர்த்துகிறது.

மனைவி அடக்கமுடைவளாக இருக்க வேண்டும்

கணவன் விரும்பும் குணங்களில் ஒன்று மனைவியின் அடக்கம். குடும்பத்தில் கணவனுக்கு அடங்காத மனைவி துன்பம் தருபவாள் என்பதை,

ஆர்த்த மனைவி அடங்காமை நன்கின்னா (இன். 2:2)

என்ற பாடலடி சுட்டுகிறது. இதன் மூலம் ஒர் இல்லறப் பெண் என்பவள் அடக்கமுடைவளாக இருப்பது சிறந்தது என்பது புலப்படுகிறது. இக்கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக காரியாசன் கணவனைக் கவரும் ஐந்துகளில் ஒன்று அடக்கம் எனக் குறிப்பிடுகிறார்.

மக்கள் பெறுதல், மடன் உடமை, மாது உடமை,
ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவு - தொக்க
அலவலை அல்லாமை பெண் மகளிர்க்கு - ஐந்தும்
தலைமகனைத் தாழ்க்கும் மருந்து (சிறு. 53.1)

என்ற பாடலடியால் அறியலாம்.
மேலும் எதிர்த்து பேசாமல் அடக்கம் உடையவளாக இருப்பவளே நல்ல பெண்ணுக்கு அழகாகும். இதனை,

பெண்டிருக்கு அழகு எதிர் பேசாது இருத்தல் (வெ. வே.11)

என்ற பாடலடி உணர்த்துகிறது.

மனைவி அன்புடையவளாக இருக்க வேண்டும்

மனைவி என்பவள் அன்புடையவளாக இருக்க வேண்டும். அதிலும் கணவன் பால் மிகுந்த அன்புடையவளாக இருக்க வேண்டும்.அப்போது தான் கணவன் இன்பம் அடைவான். இல்லையென்றால் அவன் பெறுவது துன்பமே என்கிறார் கபிலர். இதனை,

உடம்பாடில்லா மனைவிதோள் இன்னா (இன். 11:1)

என்ற பாடலடி குறிப்பிடுகிறது. இல்வாழ்க்கையில் அன்பு முக்கியம் என்பதை வள்ளுவரும் குறிப்பிடுகிறார்.இதனை,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (45)

என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.

இல்லறவாழ்வில் மனத்தடுமாற்றம் கூடாது

மனத்தடுமாற்றத்தோடு வாழ்க்கை நடந்தது உயிர்க்குத் துன்பம் தரும் என்பதை,

கொடும் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா
கடுமொழியாளர் தொடர்பு இன்னா இன்னா
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு(இன். 3:3-4)

என்ற பாடலடி மூலம் அறியலாம். இதன் மூலம் இல்லறவாழ்கையில் மனத்தடுமாற்றம்கூடாது என்ற கருத்து புலப்படுகிறது. பிற்கால நீதி இலக்கியமான ஆத்திசூடியும் கூறுகிறது. இதனை,

மனம் தடுமாறேல் (88)

என்ற பாடல் குறிப்பிடுகிறது.

மனைவி நோயாக இருக்க கூடாது

கணவனை நோய் போல் பிணித்து வாழும் மனைவி துன்பத்தை தரும் இயல்புடையவள் என்பதை,

மணி இலா குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா
துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா
பணியாத மன்னர் பணிவு இன்னா இன்னா
பிணியன்னார் வாழும் மனை (இன். 13:3-4)

என்ற பாடலடி உணர்த்துகிறது. இதன் மூலம் கணவனை அன்பு செய்யும் மனைவியாக இருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.

மனைவி வஞ்சித்து ஒழுகுதல் கூடாது

கணவனை வஞ்சித்து ஒழுகும் பெண்ணாக இருப்பது அவனுக்கு துன்பத்தை விளைவிக்கும் என்பதை,

வணர்ஒலி ஐம்பாலர் வஞ்சித்தல் இன்னா (இன். 14:1)

என்ற பாடலடியின் மூலம் அறியலாம்.

இல்லறப்பெண்ணை நோக்க கூடாது

பிறரின் மனைவியை விரும்பி நாடுவது துன்பமாகும். இதனை,

பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை இன்னா (இன். 38:1)

என்ற பாடலடி மூலம் அறியலாம். இக்கருத்தையே பிறரின் மனைவியை விரும்பாமல் இருப்பது சிறந்தது என்கிறது கொன்றை வேந்தன்,

பிறன்மனை புகாமை அறம் எனத் தகும் (61)

என்ற பாடல் விளக்குகிறது.

இல்லறப் பெண் ஒத்த குலமாக இருக்க வேண்டும்

தனக்கு ஒவ்வாத குலத்தில் பெண் கொண்டு மணம் செய்தல் துன்பம் என்பதை,

குலத்து பிறந்தவன் கல்லாமை இன்னா
நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா
நலத்தகையார் நாணாமை இன்னா ஆங்கு இன்னா
கலத்தல் குலம் இல் வழி (இன். 19.3-4)

என்ற பாடலடி மூலம் அறியலாம்.

முடிவுரை

இல்லற வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒத்து வாழ வேண்டும் என்பதை அறியமுடிகிறது.

கற்பு, அடக்கம்,அன்பு முதலிய குணங்களே பெண்ணிற்குச் சிறப்பு சேர்ப்பவை என்ற கருத்துக் காணப்பட்டிருப்பதை அறியமுடிகிறது.

இல்லற வாழ்க்கையில் சுற்றத்தார் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்பதையும் உணரமுடிகிறது.

இல்லற வாழ்க்கையில் ஈடுப்படுத்தப்படும் பெண் ஒத்த குலமாக இருப்பது சிறந்தது என்ற கருத்து புலப்படுகிறது.

சு.ஜெனிபர்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழியல் துறை
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சி -24

துணை நூற்பட்டியல்

  • இராமசுப்பிரமணியம்,எம். ஏ (உ.ஆ): பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1, செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001, முதற்பதிப்பு -2009.
  • இராமசுப்பிரமணியம்,எம். ஏ (உ.ஆ): பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3, செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001, முதற்பதிப்பு -2009.
  • மணிக்கவாசகன், ஞா: சிறுபஞ்சமூலம், உமா பதிப்பகம், சென்னை -600017, முதற்பதிப்பு -2009.
  • மாணிக்கம், அ: திருக்குறள், தென்றல் நிலையம், சிதம்பரம் -608001, முதற்பதிப்பு -1999.
  • நாராயண வேலுப்பிள்ளை,எம்: முதுமொழிக்காஞ்சி, கலைஞன் பதிப்பகம், சென்னை -600017, பதிப்பு -1989.
  • மாணிக்க வாசகன், ஞா: நாலடியார், உமா பதிப்பகம், சென்னை -600001, முதற்பதிப்பு -1993.
  • பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ. ஆ): நீதி நூல் களஞ்சியம், கொற்றவை வெளியீடு, சென்னை -600017, முதற்பதிப்பு -2014.
  • முத்துராமன், ஆ: வாழ்வியல் சிந்தனைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை -600017, பதிப்பு -2006.
  • அகராதிகள்: கழக அகராதி, தமிழ் -தமிழ் அகர முதலி, மதுரை தமிழ் அகராதி
  • வேங்கடசாமி நாட்டார்(உ. ஆ) ஆத்திசூடி,கொன்றை வேந்தன், உலகநீதி,மூதுரை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை -600014, முதற் பதிப்பு -2005
Site Meter