குமரகுருபரர் உணர்த்தும் கல்வி சிந்தனைகள்

Kumaraguruparar unarthum kalvi sinthanaigal - Tamil Literature Ilakkiyam Papers

இடைக்காலத்தில் தோன்றிய நீதிநூல்களில் ஒன்று நீதிநெறி விளக்கம் ஆகும்.இந்நூலில் 102 பாடல்கள் உள்ளன.இந்நூலை இயற்றியவர் பதினேழாம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்ந்த குமரகுருபரர் எனும் சைவப் புலவர் ஆவார்.இவருடை தந்தையார் சண்முகக் கவிராயர் அன்னையார் .இவர் பிறந்து திருவருளால் பேசும் சக்தியைப் பெற்றவர் என்பவர்.மதுரை மன்னரான திருமலை நாயக்கரின் முருகன் திருவருளால் பேசும் சக்தியைப் பெற்றவர் என்பர்.இந்நூலில் அச்சம்,காமம்,குலம்,புகழ்,முயற்சி,இல்லறம்,செல்வம்,இனிய சொல்,அடக்கமுடைமை,ஈகை,பொருள் உடையவர்,ஒழுக்கம்,ஆணவம்,பணிவுடைமை,சான்றோர்,ஐம்புலன் அடக்கம்,புகழ்,அரசன், பணிவுடைமை,பெரியோர் துணை,பொய்மை,மானம்,அருள் உடைமை,கோபம் போன்ற செய்திகள் இடம்பெறுகின்றன.குமரகுருபரர் பல நூல் எழுதியிருப்பினும் நீதிநெறிவிளக்கத்தில் கல்விப் பற்றிய செய்திகளே அதிகமாக இடம்பெறுகின்றன.இந்நூலில் இடம்பெறும் கல்வி சிந்தனைகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்வி என்பதன் பொருள்

'கல்வி எனும் சொல்லுக்குப் பொருள் கூறும் போது கல்லுதல் தோண்டுதல்.கல் எனும் அடிச்சொல்லிலிருந்து கலப்பை என்ற கருவி பெயரும்,கல்வி என்ற தொழிற் பெயரும் வந்தன.நிலத்தைக் கிளறுவதற்குக் கலப்பை பயன்படுவது போல கல்வி கல்லுதல் என்பது மனத்தைக் கிளறித் திருத்திப் பண்படுத்துவதாகும்'என்கிறார் சித்பவானந்த.(நீதி நூல்களில் கல்வி,அ.சையத் ஜாகீர் ஹசன்,ப.2)

கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பை பிற்கால நீதி இலக்கியமான விவேகசிந்தாமணியும் குறிப்பிடுகிறது.இதனை,

'வெள்ளத்தே போகாது வெந்தணில் வேகாது
கொள்ளத்தான் போகாது கொடுத்தாலும் குறையாது
கள்ளருக்கும் எட்டாது காவலுக்குள் அமையாது
உள்ளத்தேபொருள்இருக்கஊரில்உழைத்துஉழல்வானே'(விவே,பா2;,பா.69)

என்ற பாடலில் கல்வியின் சிறப்பை எடுத்துரைக்கிறது.உவமைக் கவிஞர் சுரதா கல்வியின் சிறப்பினைப் பற்றிச் சுட்டும் போது,

கல்வி செழித்தால் கவிதை வரும்
கற்பவை கற்றால் திறமைவரும்
செல்வம் திரண்டால் செழிப்புவரும்
திறமை மிகுந்தால் புகழ்வளரும் (தேன்மழை,ப.261)

என்று எடுத்துரைக்கின்றனர்.கல்வி என்று சொல்லப்படுவது வாழ்க்கையோடு தொடர்புடையதாகவும்,நாட்டுக்கும் ஆன்மாவுக்கும் நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும்.கல்வி மாணவரின் மனத்தில் ஆன்மீகப் பண்புகளையும்,சமூக அறநெறிப் பண்புகளையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்கிறார் அரவிந்தர்.

நீதிநெறி விளக்கத்தில் கல்வி சிந்தனைகள்

கல்வியே சிறந்த துணை

  • கல்வியானது இப்பிறவிப் பயனாக அறம்,பொருள்,இன்பம், ஆகியவற்றையும் தரும்.
  • மறுபிறவிப் பயனாக மோட்சத்தையும் கொடுக்கும்.
  • உலகத்தில் குற்றம் இல்லாத புகழையும் நிலைநாட்டும்.
  • வருத்தம் வந்தவிடத்து கை கொடுத்து உதவி செய்வது கல்வி.

எனவே சில வாழ்நாட்களையுடைய மக்கள் உயிர்க்குப் பொருந்திய துணையாக அக்கல்வியை விட வேறொன்று இவ்வுலகத்தில் இல்லை என்று பறைச்சாற்றுகிறார் குமரகுருபரர் இதனை,

அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும் -உறுங்கவலொன்று
உற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியின் ஊங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை (நீதி.நெறி.2)

என்ற பாடலடியால் அறியமுடிகிறது.

கல்வியால் உண்டாகும் இன்பம்

கல்வி தொடக்கத்தில் துன்பம் விளைப்பது போல் விளங்கிப் பின்பு இன்பத்தை விளைவிக்கும் இதனை,

'தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடங்கொன்று அறிவகற்றும் கல்வி'(3)

என்ற பாடலடியால் உணரமுடிகிறது.

கல்வியே சிறந்த செல்வம்

  • ஒருவருக்குத் தாம் கற்ற கல்வியே கற்புள்ள மனைவியாகும்.
  • அவர் இயற்றிய இனிய செய்யுளே அம்மனைவியரிடம் பெற்ற அரிய மைந்தனாகும்.
  • சொல்வன்மையே வளம் தரும் செல்வமாகும்.

அவ்வாறு விளங்குவதுடன் பெருமை மிக்க கற்றோர் அவையில் இடம் பெற்று அமர்ந்து அதை அழகுபெறச் செய்யும் தனிச்சிறப்பும் உண்டு.இவ்வாறு வாய்க்கப் பெற்றிருப்பது ஒரு சிலர்க்கே ஆகும்.இதனை,

கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே தீங்கவியாச் - சொல்வளம்
மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்தும்
செல்வமு முண்டு சிலர்க்கு (நீதி.நெறி.4)

என்ற பாடல் மூலம் மேற்கூறப்பட்ட கருத்துக்களின் வழி கல்வியின் பயனால் சிறப்புகளை அடையலாம் என்பது புலப்படுகிறது.

சொல்வன்மை பொன்மலர் நறுமணம் பெற்றது போன்றதாகும்

ஒருவர் கற்ற கல்வியினால்; ஆராய்ச்சி உணர்ச்சி இருத்தல் வேண்டும்.அங்ஙனம் இல்லையானால் கல்வியின் பயன் இல்லையாகும்.அங்ஙனம் ஆராய்ந்து பொருள் தெளிந்தும்,தாம் அறிந்த ஒன்றை மற்றவர் அறியும்படி எடுத்துரைக்கும் சொல்லாற்றல் இருப்பது பொன்னால் செய்யப்பட்ட மலர் நல்ல மணத்தையும் பெற்றது போன்றதாகும் என்கிறார்,

எத்துணைய வாயினும் கல்வி இடமறிந்து
உய்த்துணர்வு இல்லெனின் இல்லாகும் - உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை இன்றெனின் என்னாம் அஃதுண்டேல்
பொன்மலர் நாற்ற முடைத்து (நீதி.நெறி.5)

என்ற பாடல் மூலம் குறிப்பிடுகிறார்.

கல்வியறிவு உடையவர் அவையில் அஞ்சக் கூடாது

கற்றுவல்லவர் கூடியிருக்கும் அவையில் தாம் கற்றதை எடுத்துச் சொல்வதற்கு அஞ்சக் கூடாது. உடல் நடுங்குபவரின் கல்வியறிவும் கல்லாதவரின் அவைக்கு அஞ்சாத ஆரவாரப் பேச்சும் இருக்கக் கூடாது என்கிறார் குமரகுருபரா இதனை,  

அவையஞ்சி மெய்விதிர்ப்பர் கல்வியும் கல்லார்
அவையஞ்சா ஆகுலச் சொல்லும் - நவையஞ்சி (நீதி.நெறி.6)

என்ற பாடலடியால் அறியலாம்.மேலும் இக்கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வள்ளுவரும் அவைக்கு அஞ்ச மாட்டார்கள் என்கிறார் இதனை,

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்குசெலச் சொல்லா தார் (728)

என்ற குறளால் அறியலாம்.

கற்றவர் சிறப்பு

கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆகும்.இதனை,

கலைமகள் வாழ்க்கை முகந்த தெனினும்
மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் -மலரவன் செய்
வெற்றுடம்பு மாய்வன போல் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு (நீதி.நெறி.7) 

என்ற பாடல் ஆனது கலைக் கடவுளான நாமகளின் வாழ்விடம் நான்முகன்,புலவர் ஆகியவரின் வாயினிடத்தே உள்ளதாயினும், தாமரை மலரில் வீற்றிருக்கும் இயல்புடைய அந்த நான்முகன்,வளம் உடைய தமிழ்ப் புலவர்க்கு ஒப்பாக மாட்டான்.காரணம் என்னவென்றால் நான்முகன் படைக்கின்ற பயன் இல்லாத உடல்கள் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும் என்று குறிப்பிடுகிறது.

கல்வியின் சிறப்பில் சொல்வன்மை

கல்வியின் மூலம் ஒருவருக்கு சொல்வன்மை வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.இதனை,

நெடும்பகல் கற்ற அவையத் துதவாது
உடைந்துளா ருட்குவரும் கல்வி –கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே
தீதென்று நீர்பரி தால் (நீதி.நெறி.8)

என்ற பாடல் பல நாள்களாக வருந்திக் கற்ற நூல்கள் கற்றவர் கூடிய அவையில் விளக்கிச் சொல்ல உதவாமல் உள்ளம் உடைத்திருப்பவரின் அச்சப்படத்தக்க கல்வியானது.நண்பகலில் அயலானுடன் கூடியிருக்கக் கண்ட மனைவியைவிடத் தீயதாகும்.ஏனென்றால் அந்தக் தீய ஒழுக்கமுடைய மனைவியைத் தீயவள் என நீக்கி விடுவதைப் போன்று தீமையுடையது எனக் கல்வியை நீக்கிவிடுவது அரிதாகும்.

மறவாமை வேண்டும்

ஒருவர் நெடுங்காலமாக உழைத்து உழைத்துத் தாம் கற்றுணர்ந்த பொருள்களை மறவாமல் போற்றிக் காத்தல் வேண்டும் அவ்வாறின்றி மீண்டும் விரும்பி வேறு பல நூல்களைக் கற்கத் தொடங்குதல், கையில் உள்ள பெருஞ்செல்வத்தை மதியாமல் கொண்டு போய் எறிந்து விட்டுப் பின்பு அதனை அரிப்பு அரித்து உடல் தளர்ந்து மீண்டும் பொருள் சேர்ப்பதைப் போன்றதாகும் என்கிறார் இதனை,

வருந்தித்தாம் கற்றன ஓம்பாது மற்றும்
பரிந்துசில கற்பான் தொடங்கல் - கருந்தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்கு
எய்த்துப் பொருள்செய் திடல் (நீதி.நெறி.9)

என்ற பாடலால் அறியமுடிகிறது.

கல்வி அழகே சிறந்தது

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோ ரணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக் கழகுசெய் வார் (நீதி.நெறி.13)

என்ற பாடலில் கற்க வேண்டியவற்றைக் கற்ற பெரியோர்க்கு அந்தக் கல்வியால் அடைந்த அறிவே சிறந்த அணியாகும்.அந்த அணியையே அல்லாமல் மற்றோர் அணி அவர்க்கு வேண்டியதில்லை.முற்றும் மணிகளால் ஆன ஓர் அணிக்கு மற்றும் ஓர் அணி வேண்டியதில்லை யார் தாம் அழகுக்கு வேறோர் அழகு செய்வார் அழகு செய்வார் ?எவரும் இல்லை.இக்கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நாலடியார்,

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையாற்
கல்வி அழகே அழகு (131)

என்ற பாடலால் அறியமுடிகிறது.

கல்வி செருக்கு கூடாது

ஒருவன்சமுதாயத்தில்தன்னுடையகல்வியறிவையும்,குடிப்பிறப்பினையும்,எடுத்துக்கூறி,தற்பெருமை கொள்ளக் கூடாது.கற்ற கல்வியையும்,இடமகன்ற ஒளியினையும்,குடிப்பிறப்பினையும் அயலிருந்தார் புகழ வேண்டும்.அயலிருந்தார் புகழ்வதால் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தினைப் பெறமுடிகிறது.ஒருவன் தானே தன்னுடைய புகழை எடு;ததுரைத்தானாயின் அவன் தன்னை நகை செய்யும் மைத்துனர் பல்கி,ஒரு மருந்தாலும் தனியாத பித்தன் இவன் என்று எள்ளப்படுவர் என்பதை,

கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும், தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும் (நாலடி.340)

என்ற பாடலால் அறியலாம்.

தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க – தம்மினும்
கற்றோரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே இவர்க்குநாம் என்று (நீதி.நெறி.15)

என்ற பாடல் ஆனது கனத்த காதணிகளை அணிந்த பெண்ணே யாவற்றையும் கற்றணர்ந்தவர் எவரும் இல்லை ஆதலால் எல்லாவற்றையும் கற்றுணர்ந்து விட்டோம் என்று எண்ணி ஒருவன் செருக்குக் கொள்வது கூடாது சிறிய வடிவுடைய உளியால் பெரிய வடிவுடைய மலைகளும் உடைந்து விடும் ஆனால் கொல்லனின் உலைக்களத்தில் உள்ள பெரிய வடிவுடைய சம்மட்டியால் அம்மலைகள் உடைபடா இதன் மூலம் கல்வியில் மட்டும் ஆணவம் கொள்ளக் கூடாது என்ற கருத்து புலப்படுகிறது.

கற்றோரை நோக்கிக் கருத்தழிய வேண்டும் தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிய கற்றதெல்லாம் (நீதி.நெறி.9)

என்ற பாடல் மூலம் தம்மை விட அதிகமாய்ப் படித்தவரைத் தம்முடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் கற்றவை எல்லாம் இவர் கற்றதற்கு எவ்வளவு தாழ்ந்தவை என்று எண்ணி வருந்திச் செருக்கைக் கைவிட வேண்டும் என்று கூறுகிறது.

கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் நிகரானதே.

பணிதல் நன்று

கல்வி செல்வமே ஒருவருக்கு தலையாய செல்வம் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.கல்வி செல்வம் ஒருவர் பெற்றுவிட்டால் மற்ற செல்வங்கள் யாவும் அவரை நாடி வரும் என்பதில் ஐயமில்லை ஆகவே தான்,

பொன்பெறுங் கற்றான் பொருள் பெறும் நற்கவி (சிறுபஞ்ச.54)

என்று சுட்டுகிறார் காரியாசன் கற்ற மகனைக் கண்டு தாயும் தந்தையும் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.குமரகுருபரர் கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் நிகரானதே என்று சுட்டி கல்வி பணிவால் சிறப்படைவதை 16 ஆம் பாடலில் எடுத்துரைகிறார்.இதனை,

கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
செல்வமுஞ் செல்வ மெனபப்டும் -இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும்
தலைவணங்கித் தாழப் பெறின்.(நீதி.நெறி.16)

என்ற பாடலில் கல்விச் செல்வம் பொருட்செல்வம் என்ற இரண்டும் இல்லாதவர் அவற்றை வேண்டித் தமக்கு முன்னால் தாழ்ந்து நிற்பது போல் அந்த இரு செல்வங்களும் படைத்த தாங்களும் தலையினால் வணங்கிப் பணியப்பெற்றால் கல்வியுடைமை செல்வம் உடைமை என்னும் இரண்டும் உண்மைச் செல்வங்கள் ஆகும் என்று சான்றோரால் பாராட்டப்படும்.கல்வியும் பொருளுடைமையும் பணிவால் சிறப்பு அடையும் என்பது கருத்து என்று நீதிநெறிவிளக்க ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

சான்றோர் பணிவர்

சமுதாயத்தில் பணிந்து செயல்படும் போது மேலும் மேலும் பெருமை உண்டாகும் என்று வள்ளுவர் கூறும் கருத்து இங்கு சிந்திக்க தக்க ஒன்றாகும் இதனை,

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து (குறள்.978)

என்ற குறள் தெளிவுப்படுத்துகிறது.
இந்நூலும் சான்றோர் பணிவர் என்ற கருத்தை எடுத்துரைக்கிறது.17 ஆம் பாடலில் இக்கருத்தை ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார் இதனை,

ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட
மீச்செலவு காணின் நனிதாழ்ப – செல்ல
மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல
வலிதன்றே தாழுந் துலைக்கு

என்ற பாடலானது தூக்கிப் பிடித்தால் துலாக்கோலில் எடைகுறைவாய் உள்ள தட்டானது மேலும் மேலும் எழுவதற்கு உயரும் போதேல்லாம் கனம் மிகுதியாய் உள்ள தட்டானது தாழும் அது போன்றே கல்வி,பொருள் என்ற இரண்டினாலும் மிகுந்தவர்கள் அந்த இருவகைச் செல்வமும் குறைவானவரிடம் உண்டான எல்லை மீறி நடக்கும் நடையைக் கண்டால் மிகவும் தாழ்ந்து போவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் தாழ்ந்;து போகும் குணம் இருப்பது சிறந்தது என்பது புலப்படுகிறது.

கற்றவாறு நடத்தல் வேண்டும்


பிற்கால நீதி இலக்கிய ஆசிரியரான ஒளவையாரும் கல்வியைக் கல் என்று குறிப்பிடுகிறார்.இதனை,
இளமையில் கல் (29) என்றும் நூல் பல கல் (70)என்றும் குறிப்பிடுகிறார்
பல நூல்களையும் கற்றுக் கற்றவாறு ஒழுக வேண்டும் என்றும்,பயனற்ற சொற்களைப் பேசக் கூடாது என்றும் மற்றவர் இகழ்ந்துரைக்கும் படி நடந்தக் கொள்ளக் கூடாது என்றும் எடுத்துரைக்கிறார் குமரகுருபரர் இதனை,

கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படும்
வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை – சொற்றநீர்
நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன்
வலிதன்றே தாழுந் துலைக்கு (நீதி.நெறி.21)

என்ற பாடலால் அறியலாம்.

கல்லாதவரின் அடக்கம் இன்மை
கற்பன ஊழற்றார் கல்விக் கழகத்தாங்கு
ஒற்கமின் றூத்தைவாய் அங்காத்தல் - மற்றுத்தாம்
வல்லுரு அஞ்சன்மின் என்பவே மாபறவை
புல்லரு அஞ்சுவ போல் (நீதி.23)

என்ற பாடலனது கற்கத் தக்க நூல்களைக் கற்பதற்குரிய நல்வினை இல்லாதவர்கள் கல்வி பயில்கின்ற இடத்தில் (புலவர்கள் கூடியுள்ள அவையில்)அடக்கம் இல்லாது தங்கள் அழுக்குப்படிந்த வாயைத் திறந்து பேசுதல் முதலியவை அவையாரே எம்முடைய வலிய உருவத்தைக் கண்டு அஞ்சாதீர் என்று கூறுவனவேயாகும் அல்லாது அஞ்சினால் அஃது எதைப் போன்றதென்றால் கொல்லைப் புனத்தில் வைக்கப்பட்டுள்ள புல்லால் ஆன உருவைக் கண்டு விலங்களும் பறவைகளும் அஞ்சுவது போலாகும்.

கல்வியை விற்பவர் நரகத்துக்குச் செல்வர்

பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார்
தமக்குப் பயன்வே றுடையார் -திறப்படூஉம்
தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார்
கோவினை வேலை கொளல் (நீதி.நெறி.22)

உரியவர் அல்லாதவர்க்குத் தாம் வருந்திக் கற்ற கல்விப் பொருள்களை விலைக்கு விற்பவர்களை தமக்கு வேறொரு பயனை உடையவர் ஆவார்கள்.அது பலவகையான கொடிய செயலைச் செய்வதற்கு அஞ்சாத ஆற்றல் உடைய தென்புலத்தார்க்குத் தலைவனான இயமனைத் தங்களை நரகத்தில் இட்டுத் தண்டிக்கும்படி வேலை வாங்குதலாகும்.கல்வியை விற்பவர் நரகத்திற்கு செல்வர் என்பது கருத்து.மேலும் இக்காலக்கட்டத்திலும் கல்வியை விற்கிறார்கள் என்ற கருத்தை கவிஞர் ஜெரி அவர்கள் குறிப்பிடுகின்றார் இதனை,

"காலை எழுந்தவுடன் டியூசன் - பின்பு
கழுத்தை அறுக்கும் அந்த ஸ்கூல்
மாலை வந்தவுடன் ஹோம் வொர்க் - எனது
மனதில் மகிழ்ச்சி இல்லை தாத்தா"(நெருப்புப் பூக்கள்,ப.37)

என்ற கவிதையில் தன் தாத்தாவிடம் தனது மனநிலையை ஒரு குழந்தை சொல்லுவது போல் அமைந்துள்ளதை நோக்கும் போது டியூசன் போகும் நிலை இன்று வியாபாரமாக உள்ளது என்பது அறியமுடிகிறது.

கல்வி சேரும் இடம்

போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி
மீக்கொள் நகையினார் வாய்ச்சேரா –தாக்கணங்கும்
ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம்
பேடு கொளப்படுவ தில் (நீதி.நெறி.24)

ஒருத்தி தாக்கி வருத்துகின்ற இயல்புடைய ஆடவர் விரும்பும் பெண்மைத் தன்மை உடையவள் என்றாலும், அப்பெண்ணின் இன்பத்தைப் பேடுகள் கொள்வதில்லை.அது போன்று குற்றம் இல்லாத கல்வி அறிவில் சிறந்தவரிடத்தல்லாமல் விளையாட்டுத் தன்மையை மேற்கொண்டிருப்பவரிடத்தல்லாமல் விளையாட்டுத் தன்மையை மேற்கொண்டிருப்பவரிடத்துச் சேராது.

கல்வியறிவில்லா மூடரை நோவதில் பயனில்லை

இன்றைய உலகில் கல்வி ஒன்று தான் சமுதாய முன்னேற்றத்திற்குக் காரணமாய் அமைகின்றது.கல்வியைக் கற்காத சமுதாயம் வெற்றியைப் பார்க்க முடியாது.இன்றை நிலையில் எல்லா நாடுகளும்,

இல்லை என்பது கல்வி இல்லாமையே
உடையவர் என்பவர் கல்வி உடையவரே (குடும்ப விளக்கு,ப.48)

என்ற பாரதிதாசன் அடிகளை ஒட்டி கல்வி பரப்பும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆனால் அக்காலக் கட்டத்தில் கல்வியறிவு அற்ற மூடர்களுக்கு கல்வி அறிவு புகட்டுதலால் என்ன பயனும் இல்லை என்று எடுத்துரைக்கிறது.இதனை,

கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம்
குற்றம் தமதே பிறிதன்று – முற்றுணர்ந்தும்
தாமவர் தனமை யுணராதார் தம்முணரா
ஏதிலரை நோவ தெவன் (நீதி.நெறி.26)

என்ற பாடல் சுட்டுகிறது.

கல்வி சிறந்த இன்பம்

இன்றைக்கு உலக அளவில் மக்கள் ஒன்று சேர்ந்து உரையாடும் போது மகிழ்வுடன் இருக்கச் செய்வது கல்வியே கல்வியறிவில்லா ஒருவன் பலர் முன்னிலையில் எதையும் சிந்தித்துப் பார்த்து உரையாட மாட்டான். கற்றறிந்தவர் எப்போதும் அனைவரும் மகிழும்படி மற்றவர்களுடன் கூடிப் பழகி நற்கருத்துக்களை எடுத்துரைப்பர்.தாம் சொல்லும் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் பிறர் எப்போதும் நினைத்துப் பார்க்கும் வண்ணம் கூறிப் பிரிவார்கள்.இதனை,

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் (குறள்.394)

என்ற குறட்பாவால் அறியலாம்.நீதிநெறிவிளக்கமும் ஒருவருக்கு சிறந்த இன்பம் தருவது தாம் கற்ற கல்வி கெட்டு போகாமல் இருத்தலே ஆகும். இதனைப் பற்றி இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார் .இதனை,

... கல்வி கெடாமே
நன்னலம் துய்த்தல் நலம் (நீதி.நெறி.78)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.

முடிவுரை

கல்வி என்பதன் பொருள் பற்றி அறியமுடிகிறது.பிறநூல்களில் இடம் பெறும் கல்வியின் சிறப்புகளை அறியமுடிகிறது. நீதிநெறி விளக்கத்தில் கல்வி சிந்தனைகளாக இடம்பெறும்கல்வியே சிறந்த துணை, கல்வியால் உண்டாகும் இன்பம், கல்வி செருக்கு கூடாது, கல்வியறிவு உடையவர் அவையில் அஞ்சக் கூடாது, கல்வி சிறந்த இன்பம், கல்வியறிவில்லா மூடரை நோவதில் பயனில்லை, கல்வி சேரும் இடம், கல்வியை விற்பவர் நரகத்துக்குச் செல்வர், கல்லாதவரின் அடக்கம் இன்மை, கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் நிகரானதேபணிதல் நன்று, கல்வி அழகே சிறந்தது,கல்வியால் மறவாமை வேண்டும் என்றும் கல்வியின் மூலம் ஏற்படும் சொல்வன்மை ஆகியவற்றைப் பற்றியும் இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.

சு.ஜெனிபர்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழியல் துறை
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சி -24

துணைநூற்பட்டியல்

  • மெய்யப்பன்.ச, நீதிநூல் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 600108. முதற் பதிப்பு 2006
  • பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம், கொற்றவை வெளியீடு, சென்னை -600017. முதற்பதிப்பு -2014

Site Meter