எண்டோசல்பான் - உயிரை உறிஞ்சும் பூச்சிக்கொல்லி

(

Human killer Pesticide Endosulfan

)
Human killer Pesticide Endosulfan - Tamil Katturaikal - General Articles

கேரளாவின் என்மகஜே பஞ்சாயத்தில் உள்ள படர் கிராமத்தில் வசிப்பவர், நாராயண பட். அவரது தந்தை புற்றுநோயினால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். தாய் சிறுநீரகப் புற்றுநோயால் இறந்தார். 35 வயதான அவரது தங்கையும், 22 வயதான மருமகனும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இன்னொரு மருமகன் விஷ்ணுவுக்கு வலிப்பு நோயின் பாதிப்போடு மனநிலை பாதிப்பும் இருந்தது. விஷ்ணுவின் இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்த போது அவரது இரத்தத்தில், 108.0 பி.பி.எம். (Parts-Per-Million) அளவிற்கு என்டோசல்பான் (Endosulfan) என்கிற பூச்சிக் கொல்லி(?) மருந்து இருந்ததைப் பரிசோதனையில் கண்டறிந்தனர்.

2002 இல் ஆறு வயதான சிறுவன் பாலகிருஷ்ணன் மூளையில் கட்டி ஏற்பட்ட நிலையில் இறந்து போக, அவனைக் காப்பாற்றுவதற்கு வசதி, வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் விதியென அவனை அழுகையுடன் வழியனுப்புகின்றனர், அவனது ஏழைப் பெற்றோர்.

நாராயண பட், பாலகிருஷ்ணன் குடும்பத்தைப் போல இவர்களது இருப்பிடத்தைச் சுற்றி அமைந்துள்ள பல்வேறு கிராமங்களிலும் இதுபோன்ற கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. மனிதர்களுக்கு மட்டுமின்றி, அப்பகுதி மக்களால் வளர்க்கப்பட்டு வந்த கால்நடைகளுக்கும் உடற்கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்பட்டன. நரம்பு மண்டல பாதிப்புகளுடனும், மனநிலை பாதிப்புகளுடனும், உடல் ஊனமுற்ற நிலையிலும் குழந்தைகள் பிறந்தன. வயதானவர்களுக்கு தோல்நோய், புற்றுநோய் என பல்வேறு பாதிப்புகளும் உண்டாகின. இந்த அசாதாரண உடற்கோளாறுகளின் மூல காரணத்தைக் கண்டறிய யாரும் அவ்வளவு சிரமப்படவில்லை. அவர்கள் வாழும் பகுதி முழுவதிலும் கேரள அரசின் முந்திரித் தோப்பில் தெளிக்கப்பட்டு வந்த என்டோசல்பான் என்கிற பூச்சிக் கொல்லி மருந்தின் பாதிப்பே இது என்று கண்டு பிடிக்கப்பட்டது.

ஏறத்தாழ 1978லிருந்து கால் நூற்றாண்டாக அந்தப் பகுதியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள முந்திரித் தோப்புகளில் தெளிக்கப்பட்டு வந்த இப்பூச்சிக் கொல்லி மருந்தால் தான் அப்பகுதி முழுவதிலும் வாழும் மக்கள் பல்வேறு உடற்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

1990களில் இருந்தே இதன் பாதிப்புகள் பெரிய அளவில் வெளிப்பட்டு வந்த நிலையில், கேரள அரசும் இந்திய அரசும் இணைந்து இதுவரை 11 குழுக்கள் அமைத்து இது குறித்து விசாரணை நடத்தியிருக்கின்றன. ஆனால் நிரந்தரத் தீர்வு ஒன்றும் எட்டப்படவில்லை.

வெறும் பூச்சிக் கொல்லி மருந்து என அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த என்டோசல்பான், பூச்சிக் கொல்லி மருந்து மட்டுமல்ல மனித உயிர்களைக் காவு வாங்கும் உயிர்க்கொல்லியாகவும் அது செயல்பட்டு வந்ததை பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வந்தன.

முதியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி கருவில் இருந்த குழந்தைகளையும் பாதிப்படையச் செய்த இந்த பூச்சிக் கொல்லி மருந்து ஆண்டுக்கு 3 முறை என 1978லிருந்து 2001ஆம் ஆண்டு வரை கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள முந்திரிப் பயிர்களில் தெளிக்கப்பட்டு வந்ததாகக் கேரள அரசு இது குறித்து ஆராய்ந்து அளித்த தமது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. கேரள முதல்வர் அச்சுதானந்தன் இம் மருந்தை இந்திய அளவில் தடை செய்ய ஒருநாள் அடையாள உண்ணாநிலை மேற்கொண்டார். ஆனால், இந்திய காங்கிரஸ் அரசு இம்மருந்தை தடை செய்ய விரும்பவில்லை என அறிவித்தது.

என்டோசல்பானில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கில் கொண்டு, 2001ஆம் ஆண்டு திருமதி. லீலா குமாரி என்பவர் கேரளாவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில், என்டோசல்பான் தெளிப்பதற்கு இடைக்காலத் தடை ஆணையைப் பெற்றார். எனினும், பூச்சிக் கொல்லி மருந்து நிறுவனங்களின் தலையீட்டால் இந்தத் தடை தகர்க்கப்பட்டது. பின்னர், 2003இல் கேரள உயர்நீதி மன்றம் என்டோசல்பான் மருந்தைத் தெளிக்க தடை விதித்த மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி மீண்டும் தடைஉத்தரவு பிறப்பித்தது. தொழில் வழி சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனம் அளித்த அறிக்கையை முன்னிட்டு கேரள அரசு அம் மருந்தை நிரந்தரமாகத் தடை செய்தது.

அம்மருந்து கேரளாவில் மட்டுமின்றி, கர்நாடகத்திலும் தடை செய்யப்பட்டது. ஆனால், இந்தியா முழுவதிலும் உள்ள மற்ற மாநிலங்களில் இது பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் காங்கிரஸ் அரசு என்டோசல்பான் மருந்தைத் தடை செய்ய மறுத்து வரும் நிலையில், இந்திய அரசின் அம்முடிவுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகின்றது. உலகளவில் என்டோசல்பானை அதிகளவில் பயன்படுத்தும் முதன்மை நாடு இந்தியாவே என்பதும் கவனிக்கத்தக்கது.

உணவை உற்பத்தி செய்து உலகின் பசியாற்றும் உழவுத் தொழில் இன்றைக்கு உலகமயப் பொருளியல் வளர வளர நலிந்து போயுள்ளதை நாம் அறிவோம். ஆயினும், உணவு உற்பத்தியை தேவை அடிப்படையில் செய்யாமல், இலாபத்தின் அடிப்படையில் செய்திட பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்டவற்றை 'விஞ்ஞான வளர்ச்சி' என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் உழவர்களிடையே வலிந்துத் திணித்தது முதலாளியம்.

இரசாயன வேளாண்மை உழவர்களுக்கு இலாபம் தரவில்லை. மாறாக அவர்களைக் கடனாளி ஆக்கியது. ஆனால் பூச்சிக் கொல்லி நிறுவனங்கள் இலாபத்தில் கொழுத்தன.

பருவநிலை மாறுதலால் புதிய புதிய நோய்கள் உருவாகி பயிர்களை அழிப்பது ஒருபுறம் இருந்தாலும், இரசாயனப் பொருட்களாலும் மருந்துகளாலும், பயிர்களை குறைந்த காலத்தில் வேக வேகமாக வளர்த்திட புதிது புதிதான வேதி மருந்துகளும், புகுத்தப்பட்டன. புதிய புதிய பூச்சிகளும், நோய்களும் பயிர்களைத் தாக்கின. பின், புதிதாக வளர்ந்த பூச்சிகளைக் கொல்வதற்கென பூச்சிக் கொல்லி மருந்துகள் கண்டறியப்பட்டு, உழவர்களை அம்மருந்துகளின் மேல் மோகம் கொள்ள வைத்தன, மருந்து நிறுவனங்கள்.

உழவுத் தொழிலில் மட்டும் 2001ஆம் ஆண்டு உலகெங்கும் பயன்படுத்தப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு 5.05 பில்லியன் பவுண்டுகள் (5005 கோடி பவுண்டு) என சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (Environmental Protection Agency - EPA) அமைப்பு கணக்கிட்டது. சற்றொப்ப 31.8 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பூச்சிக் கொல்லி மருந்துகள் அவ்வாண்டு பயன்பாட்டில் இருந்ததையும் அது அறிவித்தது. இவை அனைத்தும் நம் பூமிப்பந்தின் மீது நடத்திய இரசாயனத் தாக்குதலால் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என்று எண்ணும்போது அதிர்ச்சியே மேலிடுகின்றது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள், அவை எதை அழிக்க பயன்படுத்தப்படுகின்றனவோ அதைத் தவிர 98 விழுக்காட்டுப் பொருட்கள் மீதே பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1950களில் கண்டுபிடிக்கப்பட்ட என்டோசல்பான் எனப்படுகின்ற இப்பூச்சிக் கொல்லி  மருந்து, உலகெங்கும் தொட பயன்படுத்தப்பட்டு வந்ததன் விளைவாக பல்வேறு நாடுகள் இதனால் பாதிப்பைச் சந்தித்தன. பல்வேறு நாடுகளில் என்டோசல்பான் தெளிக்கப்பட்ட நீரைப் பருகிய கால்நடைகளும், மீன்களும் இறந்து போயின. இதனைத் தொடர்ந்து பயன்படுத்திய உழவர்கள் மடிந்தனர் அல்லது நோய்வாய்ப்பட்டனர். 2002ஆம் ஆண்டு இம்மருந்து நீரில் நச்சுத்தன்மையை பாய்ச்சுவதாகக் கூறி வடஅமெரிக்க மீன் மற்றும் வனத்துறையினர் இம் மருந்தைத் தடை செய்ய பரிந்துரைத்தனர். இவ்வாண்டு வரை ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட நாடுகள் என்டோசல்பான் மருந்துகளை தடை செய்துள்ளன.

1995ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme - UNEP) மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தியது. இதன் விளைவாக மே 2001இல் ஸ்டாக்ஹோம்மில் முடிவு எட்டப்பட்டு மனித இனத்திற்கு கேடு விளைவிக்கும் பல்வேறு வேதிப்பொருட்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. 2009ஆம் ஆண்டு இப்பட்டியலில் என்டோசல்பானை சேர்க்கவும் அவ்வமைப்பு ஒப்புக் கொண்டது.

இப்பட்டியலில் என்டோசல்பானை சேர்த்தால், உலகளவில் அப்பொருளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும். இதனால் இதனை உற்பத்தி செய்யும் தனியார் பெருநிறுவனங்கள் நட்டமடையும். உலகளவில் அதிகமாக பயன்படுத்தும் நாடாக விளங்கும் இந்திய அரசு, உலகமயப் பெருமுதலாளிகளுக்கு ஏற்படும் இந்த நட்டத்தை தடுக்கவே, இம் மருந்தை தடை செய்ய விரும்பவில்லை. ஸ்டாக்ஹோம் ஒப்பந்தத்தில் இம்மருந்தை இணைக்கவும் இந்தியா எதிர்க்கிறது.

என்டோசல்பான் மருந்திற்கு பதிலாக, மனித இனத்திற்கு கேடு விளைவிக்காத மற்றொரு பூச்சிக்கொல்லி மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இது தீர்வல்ல. மனித இனத்திற்கு கேடு விளைவிக்காத செயற்கையான வேதிப்பொருட்கள் என ஒன்றும் இருக்க முடியாது. என்டோசல்பான் போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் மட்டுமின்றி, உழவர்களின் உயிரைப் பறிக்கும் அனைத்து விதமான பூச்சிக் கொல்லிகளையும் நாம் முற்றிலும் புறக்கணித்தே ஆக வேண்டும்.

நன்மை தரும் பூச்சிகளையும், பறவைகளையும் கொண்டு தீமையான பூச்சிகளை பூச்சி விரட்டிக் கலவைகளை உருவாக்கித் தெளிப்பது ஆகியவையேவது, அல்லது கொல்வது மரபு வகை வேளாண்மையில் இருக்கும் உத்தியாகும். இதுவே இச்சிக்கலுக்குத் தீர்வாகும். என்டோசல்பானை இந்திய அரசு தடை செய்ய வேண்டும்.


நன்றி: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்

Site Meter