முதல் பக்கம் » சினிமா » திரை விமர்சனம் » வானம் வசப்படும்

vanam vasapadum Movie Review

வானம் வசப்படும்

-

vanam vasapadum

Tamil Movie - vanam vasapadum Review -  Tamil Movie Actor, Actress

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கியிருக்கும் படம். அற்புதமான ஒளிப்பதிவில் மனசை கிரங்கடித்திருக்கிறார் பி.சி! நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தாலும் வானம் வசப்படும் மூலம் ரசிகர்களின் இதயத்தை தொட்டிருக்கிறார்.

கார்த்திக் குமார், பூங்கோதை சந்திரஹாசன் என்ற இரண்டு புதுமுகங்களை அறிமுகத்திலேயே நடிப்பில் கைதேர்ந்தவர்களாய் ஆக்கியிருக்கிறார்.

வாய் பேச இயலாத தந்தை நாசர், தாய் ரேவதி என ஒரு சிறிய அழகான குடும்பம் கார்த்திக்குடையது. பணக்கார வீட்டுப் பெண் பூங்கோதையை காதலித்துக் கரம் பிடிக்கிறார். திருமணமான முதல் நாளே ஆட்டோ ஓட்டும் இரண்டு இளைஞர்களால் பூங்கோதை பலாத்காரம் செய்யப்படுகிறாள். சமூகம் அவளைக் கேலி பேசுகிறது.

ஆனால் அவள் சமூகத்துடன் போராடத் தயாராகிறாள். நீதி கேட்டு நீதிமன்றம் வரை செல்கிறாள். கமர்ஷியல் சினிமா ஃபார்முலாப்படி அவள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். யதார்த்தமான கலைஞர் ஸ்ரீராமின் சினிமாவாயிற்றே.... அவள் தோற்கிறாள். அதன் பின் 5 நிமிடங்கள் ஓடும் அந்த க்ளைமாக்ஸ் தான், தோற்றது பூங்கோதை அல்ல இந்த சமூகம் என்பதை உணர்த்துகிறது.

படத்தின் ஆரம்பமே பரபரப்புடன் தொடங்குகிறது. ஒரு பக்கம் ஆட்டோ ஓட்டும் இளைஞர்களின் கதை ஓட, மறுபக்கம் கார்த்திக் - பூங்கோதையின் காதல் நகர இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு எனக் குழப்பம். தொடர்பு உண்டு என இடைவெளி நேரத்தில் இரண்டுக்கும் முடிச்சு போடும் இடத்தில், கற்பனையைக் கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியும் என நிருபிக்கிறார் கதாசிரியர் சுஜாதா.

கார்த்திக் - பூங்கோதைக்கு திருமணமானதும் அவர்களின் கார் பழுதடைய இரவு நேரத்தில் இருவரும் பஸ்ஸில் ஏறுகின்றனர். பஸ்ஸிலிருந்து ஒரு ஸ்டாப்பிங்கில் பெண் ஒருவள் இறங்க, அது பூங்கோதை என நினைத்து கார்த்திக்கும் இறங்குகிறார். ஆனால் அது பூங்கோதை இல்லை எனத் தெரிந்து திரும்பும்போது பஸ் பறந்துவிடுகிறது. அதுவரை சாதாரணமாய் படம் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அந்த காட்சியில் என்னவோ நடக்கப்போகுது என இதயம் பட படக்க ஆரம்பிக்கிறது.

பலாத்காரம் செய்யப்படும் பெண்ணின் சோகத்தை மட்டும் இதில் காட்டவில்லை. குற்றம் புரியும் அந்த இளைஞர்களின் சூழ்நிலையையும் சொல்வதன் மூலம் நமது சிந்தனைக்கு எப்போதும் எட்டாத ஒன்றை சிந்திக்கச் செய்திருக்கிறார்கள்.

மலர்களை கொடுத்து மங்கையை மயக்கும் கார்த்திக், கூல். பூங்கோதையின் அந்த புன்னகை போதும். மென்மையான கவிதை போல இளசுகளின் மனங்களைக் கவர. பலாத்காரம் செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் கிடக்கும்போது இவருக்கா இந்த நிலை என அனுதாபங்களை அள்ளிச் செல்கிறார்.

படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு நபர் நாசர். நடிப்புலகில் உள்ள பிதாமகன்களில் தானும் ஒருவர் என்பதை இப்படத்தில் மீண்டும் நிருபணம் செய்திருக்கிறார். கோவை சரளா பாத்திரம், இத்தனை காலம் நகைச்சுவை பண்ணிக் கொண்டிருந்த கோவை சரளா, யாரும் ஏற்க துணியாத வேசி பாத்திரம் ஏற்றிருக்கிறார். பிள்ளை கொலை கேசில் லாக்கப்பில், அம்மா பிராத்தல் கேசில் அதே ஸ்டேஷனில்! அடுத்த நாள் கோவை சரளாவின் முடிவு பயங்கரம்!

மகேஷின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக உள்ளது. ஆனால் படத்தின் போக்கினை திசை திருப்பிவிடும் வகையில் தேவையற்ற இடங்களில் அதிகப் பாடல்கள் திணிக்கப்பட்டுள்ளன. அந்த இளைஞர்கள் கொலை செய்வதை சட்டம் தான் மறந்துவிடுகிறது என்றால், ஸ்ரீராம் கூட மறந்துவிட்டது ஏற்க முடியாதது.

ஒளிப்பதிவு ஓவியரின் கேமிரா, இயற்கையை ரசிக்க வைத்ததில் ஆச்சரியமில்லை. சென்னையை கூட ரசிக்க வைத்ததுதான் ஆச்சரியம்.

சமூகத்தின் அழுக்குகளைப் போக்குவதில் திரைப்பட இயக்குநர்களுக்கும் பங்குண்டு எனக் காட்டிய ஸ்ரீராமுக்கு சல்யூட் அடிக்கலாம்.

நடிப்பு : கார்த்திக்குமார், பூங்கோதை, நாசர், ரேவதி, கோவை சரளா, மற்றும் பலர்
இசை : மகேஷன்
இயக்கம் : பி.சி. ஸ்ரீராம்
Your Ad Here
Site Meter