ஆரோக்கியமான வாழ்விற்கு...

டாக்டர் ரெசாரியோ ஜோர்ஜ் - 25 March, 2008
Healthy Foods - Food Habits and Nutrition Guide in Tamil

ஆரோக்கியமான வாழ்க்கை வாழத்தான் நாம் அன்றாடம் உணவு உண்கிறோம். உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அடிப்படைத் தேவையாகும். வயிறு பசி ஆற மட்டும் உண்டால் போதும் என்ற கணக்கெல்லாம் செய்து கொள்ளாமல், நல்ல சாப்பாடு சாப்பிடத்தான் வாழ்கிறோம் என்று எண்ணினால், நோய் நொடியற்ற வாழ்க்கை வாழலாம். நல்ல உணவு முறையைப் பின்பற்றினால், தோல் நோய், கறுத்த சருமம், சொறி, அரிப்பு, உலர் சருமம் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கலாம்.

இப்போது எதற்கெல்லாமோ "ரெடிமேட்" வந்துவிட்டது. குழந்தைகளின் "பிரேக்ஃபாஸ்ட்" என்ற பெயரில் ரெடிமேட் வகையறாக்கள், குழம்பு பேஸ்ட், புளியோதரை மிக்ஸ், ரெடிமேட் இட்லி, தோசை, உப்புமா மற்றும் இனிப்பு வகையறாக்கள், அவ்வளவு ஏன் புளியோதரை, எலுமிச்சை, வத்தக்குழம்புகூட ரெடிமேட் பேக்கில் விற்கப்படுகிறது. இவற்றைப் பதப்படுத்த ரசாயனம் கலக்கப்படுகிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், வெறும் ரெடிமேட் உணவு வகைகளையே சாப்பிட்டு உடலை வளர்த்தால் உடல் கோளாறு ஏற்படாமல் தவிர்க்க என்ன முயற்சி செய்தாலும் முடியாது. அளவுக்கதிகமான தானியங்கள், பால்பொருட்கள் ஆகியவற்றை உண்டால் உடல் என்னாவது? பழங்களையும் காய்கறிகளையும் முக்கியமாக கீரை வகைகளையும் அன்றாட உணவு வகைகளாக சேர்க்காமல் ஒதுக்கினால், அதைவிட தீங்கு வேறு ஏதும் இல்லை என்பதோடு உடலுக்கு அத்தியாவசிய தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்காமல் போய்விடும்.

பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் அளவான தானிய வகைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் உடல் உபாதைகள், பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், மகப்பேறு பாதுகாப்பு, உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வது போன்ற பல ஆரோக்கியமான வழிவகைகளைப் பெறமுடியும்.

நீங்கள் பின்வருவனவற்றைப் பின்பற்றினாலே போதும்....

தினமும் நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தண்ணீர் மிக மிக அவசியம். வைட்டமின் ஏ நிறைந்த பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவையும் பூசணிக்காய், பரங்கிக்காய், பாகற்காய் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சை, புளி, மோர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவேனும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாம்பார், ரசம் போன்றவற்றில் இவற்றைச் சேர்ப்பதாலும் அல்லது கூட்டு, பொரியல் செய்தோ சாப்பிடுவது சிறந்து பலனை அளிக்கும்.

அதேபோல், தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். முளைக்கீரை, அரைக்கீரை பசலைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை ஆகியவற்றில் கூட்டோ, பொரியலோ செய்து சாப்பிடலாம் அதுபோன்றே தினமும் அருகம்புல் ஜூஸ், தேன் மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை கிடைக்காத பட்சத்தில் கறிவேப்பிலை கொத்தமல்லி, புதினா துவையல் செய்து சாப்பிடலாம். மதிய நேரங்களில் உலர் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு, வேக வைத்த பயிறு வகைகள், சோயா பால் மிகவும் உகந்ததாகும்.

இரவு நேரங்களில் படுக்கப்போவதற்கு அரை மணி முன்பாக ஒரு டம்ளர் பாலில் பனங்கற்கண்டு, தேன் சேர்த்து சாப்பிடுவது இரவு நல்ல நித்திரையளிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது ஆகும். அதுபோன்றே காலை, மாலை என இருவேளை நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் சுத்தமான காற்றை சுவாசித்து இரத்த ஓட்டத்தை சீராக்கிக் கொள்வதோடு இப்பயிற்சிகளை தினமும் அனுசரிப்பது நமது இதயத்திற்கு மிகவும் பலத்தை அளிக்கும். அன்றாடம் குளிப்பதற்குக்கூட அதிகமாக சோப்பை பயன்படுத்தாமல் கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளித்தல் மற்றும் வாரம் ஒரு தடவை எண்ணெய்க் குளியலும் உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்ததாகும்.

வெயில் காலங்களில் பருத்தி ஆடைகளை அணிவதும் உடல் உஷ்ணத்திற்கு ஏற்றமானதாகும். இவ்வாறாக, உடலைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கை உணவை நாம் தினமும் பழக்கப்படுத்திக் கொள்வதோடு கூடுமான வரை மனதில் கவலைகளுக்கு இடம் கொடுக்காமல் பிரார்த்தனை, தியானம், மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள், யோகா போன்றவற்றை அனுசரிப்பதாலும் மனதில் எப்போதும் குதூகலமும் அமைதியும் ஏற்படும். மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அதற்கு உணவே மருந்தாக இறைவன் அளித்துள்ளான். சிறந்த உணவு வகைகளை உண்டு ஆரோக்கியமாக வாழ முற்படுங்கள்.


உணவு பழக்கம்