சுகப்பிரசவத்திலும் பக்க விளைவு

டாக்டர் கார்த்திக் குணசேகரன் - 24 July, 2006
Normal delivery - Food Habits and Nutrition Guide in Tamil

சென்னையைச் சேர்ந்த டாக்டர் கார்த்திக் குணசேகரன், "சுகப்பிரசவத்தால் ஏற்படுகிற பக்கவிளைவுக்குப் பயந்து கொண்டு வெளிநாடுகளில் பல பெண்கள் சிஸேரியன் செய்து கொள்கிறார்கள்" என்கிறார். தி.நகரில் குணா அஸோஸியேட்ஸ் இன் யூரோ கைனகலாஜி அண்ட் ரிசர்ச் ஃபார் இன்கான்டினன்ஸ் என்ற மருத்துமனையை நடத்திவரும் இவர், வெளிநாட்டுக்குச் சென்று யூரோ கைனகலாஜி துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற இந்திய மருத்துவர்களில் ஒருவர். அவரைச் சந்தித்த போது...,

சுகப்பிரசவத்தால் அப்படியென்ன பக்கவிளைவு?

பெண்கள் பலருக்கு இருமும் போதும், தும்மும் போதும், சத்தமாகப் பேசும் போதும், சிரிக்கும் போதும் தன்னையறியாமலே சிறுநீர் வெளியாகிவிடும். அவர்களால் சிறுநீரை அடக்க முடியாது. சிலருக்குத் தூங்கும் போது சிறுநீர் போய் படுக்கையை நனைத்து விடுவார்கள். இதற்கு முக்கியக் காரணம் சுகப்பிரசவம்தான் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சுகப்பிரசவத்தின் போது குழந்தையின் தலை கொடுக்கும் அழுத்தம் இடுப்பெலும்பைச் சுற்றியுள்ள அடித்தளத் தசைகளைப் பலவீனப்படுத்துகிறது. அதனால் சிறுநீரை அடக்கமுடியாத பிரச்சினை எற்பட்டுவிடுகிறது.

குழந்தை பெறாத பெண்கள் சிலருக்கும் கூட இந்தப் பிரச்சினை இருக்கிறதே?

உண்மைதான். குனிந்து பளு தூக்குபவர்கள், உடல் பருமன் அதிகம் உடையவர்கள், ஆஸ்த்துமா போன்ற மூச்சுக்குழல் நோய் உள்ளவர்கள், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள், கர்ப்பப்பை அகற்றப்பட்டவர்கள் எல்லாருக்கும் இந்த சிறுநீரை அடக்கமுடியாத நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சில பெண்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்வார்கள். டென்னிஸ் ஆடுவார்கள். கராத்தே பயிற்சி செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மற்றவர்களைவிட அதிகம் இப்பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. எங்களிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களில் பலர் இப்படி கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள்தான்.

அப்படியானால் மனித குலம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகளாக பெண்கள் இப்பிரச்சினையை அனுபவித்து வருகிறார்களா?

இந்த சிறுநீர் அடக்க முடியாமைப் பிரச்சினைக்கு சுகப்பிரசவமும் ஒரு காரணம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதற்காக சுகப்பிரசவம் ஆன எல்லாப் பெண்களுக்கும் இப்பிரச்சினை வரவேண்டும் என்று கட்டாயமில்லை. அதே சமயம் இப்பிரச்சினையைப் பெண்கள் வெளியில் சொல்லக் கூச்சப்படுவார்கள். அதிகம் போனால் ஒரு பெண் தன் அம்மாவிடம்தான் இந்தப் பிரச்சினையைச் சொல்வாள். அம்மாவுக்கும் அதே பிரச்சினை என்கிறபோது இது எல்லாருக்கும் வரக்கூடிய இயல்பான பிரச்சினைதான் என்று நினைத்துக் கொள்வார்கள். வயதானால் வரும் என்று நினைத்துக் கொள்வார்கள். கிட்டத்தட்ட 60 சதவீதம் பெண்களுக்கு இப்பிரச்சினை இருக்கிறது என்பது அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்.

முன்னைப் போல பெண்கள் இப்போது வீட்டில் சமையல் மட்டும் செய்து கொண்டிருப்பதில்லை. படிப்பதற்காகவும் வேலைக்காகவும் வெளியில் செல்கிறார்கள். அவர்களுக்கு இப்பிரச்சினை மிகச் சிரமமான ஒன்றாக இருக்கிறது.

இப்போது பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் காலத்திலேயே சரியாகச் சாப்பிடுவதில்லை. அதனால் எலும்புகள் தேவையான அளவுக்கு வளராமல் போய் பிரசவத்தின் போது அழுத்தம் அதிகமாகி சிறுநீரை அடக்கமுடியாமைப் பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறதா?

நல்ல கேள்வி. அதுமட்டும் காரணமில்லை. பொதுவாக நமது வாழ்க்கை முறை மாறிவிட்டது. சிறு வயது முதற்கொண்டே ஓடியாடி விளையாடுவதில்லை. கீழே உட்கார்ந்து சப்பணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடக் கூடச் செய்வதில்லை. இதனால் எலும்புகளுக்கு நெகிழும் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. இதுவே பிரசவத்தின் போது குழந்தையின் தலை முட்டுவதால் அழுத்தம் ஏற்படவும் இடுப்புப் பகுதியின் அடித்தளத் தசைகள் - குறிப்பாகச் சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை போன்றவை பாதிக்கப்பட்டு தளர்வடைவதற்கும் காரணமாகிவிடுகிறது. இதனால் சிறுநீரை அடக்கமுடியாமல் போகிறது.

சிலருக்குத் தும்மும் போது, இருமும் போதெல்லாம் சிறுநீர் வருவதில்லை. ஆனால் சிறுநீர் கழிக்கும் உணர்ச்சியேற்பட்டால் அவர்களால் ஒரு நொடி கூட அடக்க முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்?

சிறுநீரை அடக்கமுடியாத இந்தப் பிரச்சினையை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம். இடுப்பெலும்பைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள அடித்தள தசைகள் தளர்வடைவதால் ஏற்படும் குறைபாடு. ஏற்கனவே சொன்னபடி தும்மும் போது சிறுநீர் வந்துவிடுவது. இது முதல் வகை. இப்போது நீங்கள் குறிப்பிட்ட சிறுநீர் கழிக்கும் உணர்ச்சியேற்பட்டால் அடக்கமுடியாமல் போவது. இது இரண்டாம் வகை. இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் மூளைக்கும் சிறுநீர்ப்பைக்கும் தகவல் தொடர்பு சரியில்லாமல் போவதே காரணம். அதாவது மூளையின் கட்டளையைச் சரிவர நிறைவேற்றமுடியாமல் சிறுநீர்ப் பை போய்விடுவதே இந்த அடக்கமுடியாத தன்மைக்குக் காரணம். இது ஆரம்பநிலையில் இருந்தால் மருந்து, மாத்திரை கொடுத்துச் சரிப்படுத்திவிடலாம். சிலருக்கு இந்த இரண்டும் கலந்த தன்மையும் இருக்கிறது.

பொதுவாக இம்மாதிரியான பிரச்சினைகள் வருபவர்களுக்கு உடலில் என்ன மாதிரியான குறைபாடுகள் ஏற்படுகின்றன?

இடுப்பெலும்பைச் சுற்றியுள்ள பகுதியில் அடித்தளத் தசைகள் தளர்வடைவதினால் அடியிறக்கம் ஏற்படுகிறது. இந்த அடித்தளத் தசைகள் தான் சிறுநீர்ப்பை, கருப்பை, மலக்குடல் ஆகியவற்றைத் தாங்கி நிறுத்துகின்றன. இந்தத் தசை தளர்வடைவதால் சிறுநீர்ப்பை சற்றுக் கீழிறங்கிவிடும். சிறுநீர்க்குழாயும் கீழிறங்கிவிடும். குனியும் போதும், தும்மும் போதும் இயல்பான நிலையைவிட சற்றுக் கீழிருக்கும் சிறுநீர்க் குழாயில் அழுத்தம் ஏற்பட்டு சிறுநீர் வந்து விடுகிறது.

இதற்கு மருத்துவம்தான் என்ன?

சிறுநீர்ப்பை, யோனிக்குழாய், மலக்குடல் ஆகிய மூன்றிலும் ஏற்படும் சிக்கல்களை ஒருங்கிணைத்து சிகிச்சை செய்யும் யூரோகைனகாலஜி மருத்துவம்தான் இப்பிரச்சினைக்கு மிகச் சிறந்த மருத்துவமுறை. வெளிநாடுகளில் இந்த முறை நீண்ட நாட்களாக உள்ளது. இந்தியாவில் நான்கு ஐந்து மருத்துவ மனைகளில்தான் இம்மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தச் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு முத#ல் சிறுநீர்ப் பரிசோதனை செய்கிறோம். கிருமிகள் உள்ளனவா என்ற பரிசோதனை செய்கிறோம். ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறோம். யூரோடைமிக்ஸ் சோதனையில் சிறுநீர்ப்பைக்குள் தண்ணீரைச் செலுத்தி கம்ப்யூட்டர் மூலம் சிறுநீர்ப்பையின் அனைத்துத் தன்மைகளையும் பரிசோதித்துவிடுகிறோம். சிறுநீர்ப்பை கொள்ளும் சிறுநீரின் அளவு, அதில் உள்ள அழுத்தம் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். பிறகு தேவைக்கேற்ப சிகிச்சை வேறுபடுகிறது.

இடுப்பெலும்பைச் சுற்றியுள்ள அடித்தளத் தசைத் தளர்வினால் சற்றுக் கீழிறங்கிய சிறுநீர்ப்பையைச் சற்று உயர்த்திக் கட்டும் லேபராஸ்கோபிக் பர்ச் என்கிற சிகிச்சை; இன்னொன்று, சிறுநீர்க்குழாயின் அடியில் சிறிய நாடா போன்ற பொருளைப் பொருத்தி அதைத் தாங்கிப் பிடிக்கும் (Sling operation) என்ற சிகிச்சை, இப்பிரச்சினை ஆரம்ப நிலையில் இருந்தால் இடுப்பின் அடித்தளத் தசைகளுக்கான உடற்பயிற்சி, மின்தூண்டல், மாத்திரைகள் மூலம் குணப்படுத்தும் சிகிச்சை ஆகிய மூன்றில் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் ரத்தக் கசிவு இருக்காது; வலி இருக்காது. எனவே ஓரே நாளில் குணமாகி வீட்டுக்குச் செல்லமுடியும்.

சிறுநீரை அடக்கமுடியாமை என்கிற பிரச்சினை பெண்களுக்கு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது?

இப்பிரச்சினை பெண்களை உடல்ரீதியாக பாதிப்பதை விட மனரீதியாகத்தான் அதிகம் பாதிக்கிறது. அவர்கள் வெளியில் வருவதற்கு மிகவும் யோசிக்கிறார்கள். வேலை செய்யும் பெண்கள் வேலை தொடர்பாக வெளியே செல்லவும் கூட யோசிப்பார்கள். இது அவர்களுடைய வேலையில் முன்னேற்றத்தைப் பாதிக்கிறது. சிறுநீர்க் கசிவால் ஏற்படும் நாற்றம், உடை ஈரமாகிவிடுதலை பிறர் பார்த்து விடுவார்கள் என்கிற பயம், போன்றவை அவர்களைப் ஃப்ரீயாகப் பழகுவதில் இருந்து தடுத்துவிடுகிறது. பெண்களின் சமூக நடவடிக்கை குறைந்து விடுகிறது.

வீட்டிலேயே உள்ள பெண்கள் சிறுநீர் வரும்போது உடனே கழித்து விடுவார்கள். எனவே அவர்கள் இந்தப் பிரச்சினையைப் பெரிய பாதிப்பாகக் கருதுவதில்லை. அவர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் சூழ்நிலை வரும்போது கொஞ்சம் யோசிக்கிறார்கள்.

எவ்வளவு செலவு ஆகும்?

இந்த சிகிச்சைக்கான சில பொருட்களை வெளிநாட்டிலிருந்து வரவழைப்பதால் சற்று அதிகம் செலவாகும். என்றாலும் அதிக அளவில் சிகிச்சை நடைபெறும் போது செலவு குறைய வாய்ப்புண்டு.


பேட்டி