காய்ச்சல் குணமாக துளசி!

கூடல் - 27 December, 2006
Siddha Medicine : Tulsi - Food Habits and Nutrition Guide in Tamil

கற்பூர மணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையுமுடைய சிறுசெடி துளசி. உடலிலிருந்து பாக்டீரியா, நச்சு கழிவுகளை நீக்குகிறது. நுரையீரல் தொடர்பான நோய்கள், சளி, இருமல், இரத்த அழுத்தம், கருப்பை கோளாறுகள், செரிமான சிக்கல் இவற்றை நீக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இதிலுள்ள இயற்கை "மெர்குரி" உடலிலுள்ள ரசாயனங்களை கட்டுப்பாட்டில் வைக்கிறது. துளசி அனல் தன்மை கொண்டது. மூளை நரம்புகளில் ஏற்படும் தடையை நீக்க வல்லது. இதன் இலை, பூ, விதை ஆகியவை மருத்துவப் பயன் உடையது.

இதன் வகைகள் : வெண்துளசி (அற்கம், சிவதுளசி), கருந்துளசி, (கிருட்டின துளசி), சுக்ல துளசி, கந்ததுளசி (விச்சுவதுளசி, நாய்துளசி, பில்வதுளசி, விசுவகந்ததுளசி), காட்டுத்துளசி (பூதுளசி, பூததுளசி), நல்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி).

இதன் மருத்துவக் குணங்கள்: துளிசியின் இலைகளை பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறை எடுத்து 5 மில்லி இருவேளைச் சாப்பிட்டு வர, பசியை அதிகரிக்கும். இருதயம், கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும் சளியை அகற்றும் தாய்ப்பாலை மிகுதியாக்கும்.

வெண்துளசி இலை எடுத்து சாறு பிழிந்து 50 மில்லி எடுத்து கொதிக்க வைத்து பின்னர் சம அளவு தேன்கலந்து உட்கொண்டால், கபத்தினால் தோன்றிய இருமல் குணமாகும்.

துளசிஇலை 20, தோல் நீக்கிய இஞ்சி 2 கிராம் சிதைத்து 200 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மில்லி வீதம் குடித்து வர, பித்த சீதளகாய்ச்சல் 3 நாளில் நீங்கும்.

வெண்துளசி இலைசாறு பிழிந்து கொதிக்க வைத்து, சம அளவு தேன் கலந்து கண்களில் மைபோல இட்டால், கண்பொங்குதல் தனியும்.

ஒரு கைபிடி அளவு இதன் இலையை சிதைத்து, அரைலிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகும் வரை வற்ற வைத்து, வடிகட்டி 15 கிராம் கற்கண்டு, 2 தேக்கரண்டி தேனும் கலந்து தினம் 4 வேளையாக 50 மில்லி வீதம் குடித்து வர, மார்பு நோய், காசநோய், காய்ச்சல் குணமாகும்.

இதன் இலைச்சாறு 2 சொட்டு, வெள்ளைபூண்டு அரைத்தசாறு 2 சொட்டு கலந்து காதில் விட்டால் சீழ் வடிதல் குணமாகும்.

துளசி இலை 50 கிராம் மிளகு 50 கிராம் அரைத்து மாத்திரை ஆக்கி, இரண்டு வேளை வெந்நீரில் இழைத்துக் கொடுக்க சகலவிதமான காய்ச்சல் குணமாகும்.

துளசி வேர் சுக்கு வகைக்கு சம அளவாக எடுத்து அரைத்து, நாள்தோறும் காலையில் வெந்நீரில் சுண்டக்காய் அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் குட்டம் குணமாகும்.

துளசி விதை 10 கிராம், அரசவிதை 10 கிராம் சேர்த்து அரைத்து சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக்கி 2 வேளை 1 மாத்திரை வீதம் பாலில் கலந்து சாப்பிட கணச்சூடு நீங்கும்.

துளசி இலையை கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் 1 பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

இதன் இலைச்சாறு 1 மில்லி, தேன் 5 மில்லி, வெந்நீர் 50 மில்லி கலந்து இரு வேளை நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இதயநோய் சாந்தமாகும்.

இதன் இலைச்சாறு ஒரு பங்கு இஞ்சி இரண்டு பங்கு கலந்து கசாயம் செய்து நான்கு வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

கருந்துளசி இலை 25, செம்பரத்தம் பூ2, அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிக்கட்டி 2 மணிக்கு ஒருமுறை 50 மில்லி வீதம் 10 நாட்கள்குடித்து வர இருதயத்தில் குத்து வலி, பிடிப்புவலி குணமாகும்.

துளசி இலைச்சாறு 100 மில்லி எடுத்து கொதிக்க வைத்து சிறிது மிளகு தூள் சேர்த்து காலையில் குடித்தால் உடனே காய்ச்சல் குணமாகும்.

கருந்துளசி ஒரு கைப்பிடி அளவு, மருதம்பட்டை 40 கிராம் சிதைத்துப் போட்டு 1 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 தேக்கரண்டி தேன்கலந்து 50 மில்லி வீதம் 1 நாளைக்கு 6 வேளை 20 நாட்கள் சாப்பிட்டு வர சீரற்ற இதயத்துடிப்பும், இதயத்தைக் கட்டிப்போட்டது போன்ற வலியும் குணமாகும்.

இதன் இலை 10, மிளகு 10 இவ்விரண்டையும் நன்கு மென்று தின்றால் மலேரியாக்காய்ச்சல் குணமாகும்.

இதன் இலை 1 கைபிடி, இஞ்சி 1 துண்டு, தாமரை வேர் 40 கிராம் சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் பற்றுப்போட்டு வர, விலாவலி குணமாகும்.


பாட்டி வைத்தியம்