ரிஷபம் -

Taurus 2011 Tamil Predictions

ஜனவரி

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 11, 15, 19, 20, 24, 28, 29.

இந்த ஆங்கிலப் புத்தாண்டு குரு, பகவானின் அருளோடு ஆரம்பம் ஆவதால், பெண்களுக்கு பாடல் பெற்ற கோவில்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். ஆசிரியப் பணியில் இருப்பவர்கள் பாராட்டுக்களைப் பெற்று மகிழ்வர். 8, 9 இடங்களில் சூரியன் சுழல்வதால், எவ்வளவுதான் அலைந்து திரிந்தாலும், வியாபாரிகள் சிரமத்தின் நடுவே ஒப்பந்தங்களைத் தேட வேண்டி வரும். 9ல் செவ்வாய் இயந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக வேலை செய்வது அவசியம். 28ம் தேதி வரை சுக்ரன் 7ல் நிற்பதால் கலைஞர்கள் உரையாடல்களில், கிண்டல், கேலிப்பேச்சு ஆகியவை கலக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். புதன் முதல் வாரம் முதல் 29ம் தேதி வரை 8ம் வீட்டில். உறவுகளின் வருகையால் இல்லத்தில் கலகலப்பு நிறைந்திருக்கும். பிறகு அவர் 9ம் வீட்டுக்கு மாறுவதால், வியாபாரிகள் பங்குதாரர்களிடையே கருத்து மோதல் நிகழாதவாறு சாமர்த்தியமாய் செயலாற்றுதல் நல்லது.

பிப்ரவரி

அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23, 24.

சூரியன் மாத முன் பகுதியில், 9ம் வீட்டில். பகைமை கொண்டு விலகிய சொந்தம் மீண்டும் உங்களைத்தேடி வருகையில், ஏற்றுக்கொண்டால், பெண்கள் பெறும் ஆதாயம் அதிகமாகும். பிறகு சூரியன் 10ம் வீட்டுக்கு செல்கிறார். சுய தொழில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக்கட்டைகள் தானே விலகும். செவ்வாய் 15ம் தேதி முதல் 10ம் வீட்டில் நிற்பதால், பெண்கள் அக்கம்பக்கம் உள்ளவர்களால் மனச் சங்கடம் பட நேரிடும் வாய்ப்பிருப்பதால், விருந்து உபச்சாரம் என்று வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ளவும். புதன் 18ம் தேதி முதல் 10ம் இடத்துக்குப் போவதால், ஆசிரியர்களின் ஆதரவான மொழி மாணவர்களின் மனதை உற்சாகப்படுத்தும் விதமாக அமையும். 23ம் தேதிவரை சுக்ரன் அஷ்டம வீட்டிலும், பிறகு 9ம் வீட்டிலும் இருப்பதால், பெண்கள் பணிபுரியும் சூழல் மனதிற்கு உகந்ததாய் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களின் நடை உடை பாவனைகளில் நளினமும் அழகும் மிளிரும்.

மார்ச்

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 24, 28.

சூரியன் வளங்களை அள்ளித்தரும் 10, 11 இடங்களில் ஜொலிப்பதால், மாணவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் யாவும் தன்னால் விடுபடும். வெளியூரில் இருக்கிறோமே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல நண்பர்கள் அமைவார்கள். செவ்வாய் 25ம் தேதி முதல் 11ம் இடத்திற்கு போவதால், கலைஞர்கள் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும் வண்ணம் புதிய வாய்ப்புகள்ள பல வந்து சேரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உழைப்பிற்குரிய பலனை உரிய காலத்தில் பெறுவார்கள். புதன் 6ம் தேதியிலிருந்து 27ம் தேதிவரை 11ம் வீட்டில் நிற்பதால், சுய தொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப் பெறுவதோடு, வேண்டிய வாய்ப்புக்களும் கிடைக்கப் பெறுவார்கள். பிறகு புதன் 12ம் வீடு போவதால், பொது வாழ்வில் இருப்பவர்களின் உணவு, தூக்கம், ஓய்வு இவை மூன்றும் முறையாக இருந்தால், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும் பயணம் எளிதாகும். 22ம் தேதி முதல் சுக்ரன் 10ம் வீட்டில். பெண்கள் உறவுகளிடம் உள்ள நிறைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், நல்லவை நிறைய நடக்கும்.

ஏப்ரல்

அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 13, 15, 19, 28.

13ம் தேதி வரை 11ம் வீட்டில் நிற்கும் சூரியன் வியாபாரிகளின் கடன் தொல்லைகளை நிவர்த்தி செய்திடுவதுடன் எதிரிகளையும் பலமிழக்கச்செய்வார். பிறகு அவர் 12ம் இடம் போவதால், பெண்கள் முள்ளால் தீர்க்கக்கூடிய விஷயங்களுக்கு, கோடாலி கொண்டு செல்லாமல் இருந்தால், இழப்புகள் ஏற்படாமலிருக்கும். செவ்வாய் இந்த மாதம் முழுவதும் 11ம் வீட்டில். சிலருக்கு புதிய மனை மற்றும் இடம் வாங்கும் வாய்ப்பு கனிந்து வரும். பணியில் இருப்பவர்களை குறைவாக, எண்ணியவர்களே, கூடைகூடையாய் பாராட்டுகளைப் பொழியும் அளவிற்கு முன்னேற்றம் இருக்கும். மேலும் பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு நிம்மதி தரும். 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை வக்ரம் பெறும் புதனும் மாதம் முழுவதும் 11ம் வீட்டில் நிற்பதால், கலைஞர்களுக்கு விழாக்களில், பங்கேற்கும் வாய்ப்புகள் மூலம் இனிய அனுபவங்கள் கிட்டும். சுக்ரனும் 16ம் தேதி முதல் 12ம் இடத்துக்கு மாறுவதால், விருந்து உபசரிப்புகளினால், இல்லத்தில் கலகலப்பு கூடும்.

மே

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 16, 19, 24, 25, 28.

சூரியன் 12, 1 வீடுகளில் நிற்பதால், பணியிடங்களில் மனதில் பட்டதை சொல்லுவதை விட, மற்றவர்க்கு தேவையான செய்திகளை மட்டும் பரிமாறிக்கொள்வது நல்லது. செவ்வாய் 3ம் தேதி முதல் 12ம் இடத்தில். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம் கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது புத்திசாலித்தனம். சுக்ரன் 11ம் தேதி முதல் 12ம் வீட்டுக்கு அமருவதால், கலைப்பொருட்களை விற்கும் வியாபாரிகளுக்கு புதிய யுக்திகள் மூலம், சரக்குகள் தேங்காமல் விற்று விடும். பிள்ளைகளின் ஆதரவு மனதுக்கு இதமாய் இருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களின் பேச்சில் உள்ள மிடுக்கு பிறரின் மதிப்பை சம்பாதித்துத் தரும். புதன் 11ம் தேதி முதல் 12ம் வீட்டில் மாணவர்கள் வேற்று மொழி பேசுபவர்களிடம் எல்லைக்குட்பட்டு பழகுவது அவசியம். 7ம் தேதி முதல் குரு பகவான் 12ம் இடத்திற்கு செல்வதால், வியாபாரிகள், பணபரிமாற்றம் தொடர்பாக வங்கிகள் தரும் அறிக்கைகளை பத்திரமாக வைத்தால், அபராதத்தைத் தவிர்க்க முடியும்.

ஜூன்

அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 12, 14, 19, 21, 23, 28, 30.

சூரியன் 1, 2 வீடுகளில் நிற்பதால், பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடையே நிகழும் வாக்குவாதங்களிலிருந்து விலகி இருந்தால், வீண் வருத்தம் ஏற்படாமலிருக்கும். 12ம் தேதி முதல் செவ்வாய் உங்கள் ராசிக்கு மாறுகிறார். பொது வாழ்வில் இருப்பவர்கள் பேச்சிலும், செயலிலும் இணக்கம் காட்டினால், பிறர் மூலம் நல்ல பயனடைய முடியும். சகோதரர்களோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். புதன் இந்த மாதம் 1, 2, 3 வீடுகளில் சஞ்சரிப்பதால், மாணவர்கள் கடனாகப் பெற்ற பொருள்களை கருத்தாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். நண்பர்களுடன் கவனமாகப் பழகாவிட்டால், பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்தும் சூழல் உருவாகும். சுக்ரன் 4ம் தேதி முதல் உங்கள் ராசியில். கலைஞர்களுக்கு பழைய வாகனங்களை விற்று புதிய நவீன வாகனத்தை வாங்கும் யோகம் கிட்டும். 6ம் தேதி முதல் கேது 1ம் வீட்டுக்கும், ராகு 7ம் வீட்டுக்கும் மாறுவதால், பெண்களுக்கு சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகள் வந்து போகும்.

ஜூலை

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 19, 24, 28.

சுக்ரன் 2, 3, வீடுகளில் தங்கும் சுக்ரன் இந்த மாதம் நீங்கள் பங்குகொள்ளும் சுபநிகழ்ச்சிகளின் பட்டியலை அதிகமாக்குவார். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு விசேஷ சலுகைகள் கிடைக்கும். 1ம் தேதி வரை 2ல் இருக்கும் சூரியன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறு உபாதைகளை அளிப்பார். எனினும் 17ம் தேதி முதல் அவர் 3ம் இடத்திற்கு மாறுவதால், மீண்டும் ஆரோக்கியம் பொலிவு பெற்று விடும். 25ம் தேதி முதல் செவ்வாய் 2ம் இடத்தில் சிறு தொழில் புரிபவர்கள் தேவையில்லாமல் பணம் கைமாற்றாய் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்த்து விட்டால், மனத் தாங்கல் தோன்றாது. பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண் வம்பு தும்புக்கு வேலை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். புதன் 3, 4 வீடுகளைத் தாண்டிச் செல்வதால், கலைஞர்கள் பொது இடங்களில் சமயோசித புத்தியுடன் செயல்படுவது அவசியம். வியாபாரிகளுக்கு வழக்கு வியாஜ்ஜியங்கள் மந்த கதியில் நகரும். மாணவர்கள் தான் உண்டு தன் வேலையுண்டு என்பதை கடைபிடிப்பது அவசியமாகும். மாணவர்கள் சொல்லும் கருத்துக்களில் தெளிவாக இருப்பது நல்லது.

ஆகஸ்ட்

அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 14, 15, 19, 23, 24, 28.

சூரியன் முன் பாதி 3ம் இடத்தில் இருப்பதால், சுய தொழில் புரிபவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பிறகு அவர் 4ம் இடம் போவதால், பண விவகாரங்களில் வாக்கை காப்பாற்றாமல் இழுத்தடிப்பவர்களின் சகவாசத்தை ஒதுக்குதல் மூலம் வியாபாரிகள் நஷ்டத்தைக் குறைத்துக்கொள்ள முடியும். தேடி வரும் சலுகைகளை நல்ல விதமாகப் பயன்படுத்திக்கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. செவ்வாய் இந்த மாதமும் 2ல். பணியில் இருப்பவர்கள் உயர்மட்டக் குழு விவாதங்களையும், ரகசியங்களையும் பிறரிடம் வெளியிடாமல் இருந்தால், உங்களின் நற்பெயருக்கு எந்த பங்கமும் வராது. 4ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரை வக்ர கதியில் இருக்கும் புதன் 3ம் வீட்டில் நிற்பதால், சில சமயம் பிள்ளைகளின் போக்கு புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும். சுக்ரன் 17ம் தேதி முதல் 4ம் வீட்டுக்குப் போவதால், கலைஞர்களுக்கு புதியவர்களின் அறிமுகம் மூலம் ஆதாயம் கிடைக்கும். அத்துடன் சுக்ரன் இளம் வயதினரின் மனதுக்கு பிடித்த ஆபரணங்களை அள்ளித்தந்து அழகுக்கு அழகு சேர்ப்பார்.

செப்டம்பர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 9, 10, 15, 18, 19, 24, 27, 28.

சூரியன் 4, 5 வீடுகளில் வலம் வருவதால், மாணவர்கள் சில சமயங்களில், அடுத்தவர்களுக்காக, அதிகம் உழைத்தாலும், நல்ல பெயர் என்பது இருக்காது. செப்டம்பர் 9 முதல் செவ்வாய் 3ல். பெண்களுக்கு தெளிவான சிந்தனையையும், பிறர்க்கு உதவும் மனப்பான்மையையும் தருவார். பணியில் இருப்பவர்கள் பல நாட்களாக எதிர்பார்த்திருந்த பணவரவு, தகுந்த சமயத்தில் கிடைக்கும். புதன் 4ம் தேதி முதல் 4, 5 வீடுகளில். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் பிடிவாதத்தை சற்று குறைத்துக்கொண்டால், வெற்றி உங்கள் அருகில் நிற்கும். வியாபாரிகள் ஆடம்பர செலவுகளுக்கும், பதற்றத்திற்கும் விடை கொடுப்பது நல்லது. சுக்ரன் 10ம் தேதி முதல் பஞ்சம வீட்டுக்குப் போவதால், பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகள் நடுநிலைமையாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல உள்ளங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைப்பதால், மகிழ்வுடன் விளங்குவார்கள். சுய தொழில் புரிபவர்கள் நினைத்த காரியத்தில், விருப்பந்தக்க மாற்றங்கள் உருவாகும்.

அக்டோபர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 2, 6, 10, 11, 15, 19, 20, 24, 28, 29.

சூரியன் மாத முன் பகுதியில் 5ல் இருப்பதால், பொதுவாழ்வில் இருப்பவர்கள் பேச்சில் நிதானமும், சமயோசிதமும் இருந்தால், எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. பின் அவர் 6ம் இடம் செல்வதால், பணியில் உள்ளவர்களின் மனதில் இருந்த குழப்பம் விலகி, தைரியமாய் செயலாற்றும் திறன் பெருகும். செவ்வாய் 29ம் தேதி வரை 3ல். உறவினர்கள் பெண்களின் பெருமையை உணர்ந்து கொள்வதுடன், பாராட்டியும் மகிழ்வார்கள். பின் செவ்வாய் 4ம் வீடு போவதால், மன உளைச்சலால், மாணவர்கள் இயல்பு வாழ்க்கை சற்றே மாறிப்போகலாம். 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை புதன் 6ல். பங்குதாரர்கள் காட்டும் ஆதரவால், வியாபாரம் முன்னைக் காட்டிலும் சுறுசுறுப்பாக நடக்கும். பிறகு புதன் 7ம் வீட்டில். கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டவில்லை என்ற நிலையை மாற்ற கலைஞர்கள் கடினமாக உழைக்க நேரிடும். சுக்ரன் 4ம் தேதி முதல் 6, 7 வீடுகளுக்குப் போவதால், பொறுப்புக்களை வகிப்பவர்கள் சட்டம் தொடர்பான பிரச்சினைகளில் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டால், மன உளைச்சல் இராது.

நவம்பர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23, 24.

சூரியன் 15ம் தேதி வரை 6ல் வேலையில் இருப்பவர்கள் இதுவரை அனுபவித்த பாராமுகம், எதிர்ப்புகள் எல்லாம் பிசுபிசுத்து விடும். பிறகு சூரியன் 7ம் வீட்டுக்குப் போவதால், சுயதொழில் புரிபவர்கள் கடனுக்குரிய தொகையை குறித்த கெடுவிற்குள் செலுத்துதல் நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக்கொண்டல், தேக நலம் žராக இருக்கும். செவ்வாய் இந்த மாதம் 4ல் தங்குவதால், வியாபாரிகள் செலவு என்னும் பட்டியலில் கவனம் செலுத்தி வந்தால், வரவிற்கும் வாழ்வது என்பது எளிதாகும். பிற பணியாளர்களிடம், உங்கள் கோபத்தை வெளிக்காட்டாமலிருந்தால், அலுவலக சூழல் அனுசரணையால் திகழும். 7ம் வீட்டில் நிற்கும் புதன் 9ம் தேதியிலிருந்து வக்ரம் பெறுவதால், கலைஞர்கள், எந்த சூழலிலும், சலனங்களுக்கு இடம் கொடாமல் மன உறுதியுடன் இருப்பது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியம் நலம் பெற, தகுந்த யோகாசனப் பயிற்சிகளை செய்து வருதல் முக்கியம். 21ம் தேதி அஷ்டம இடத்திற்கு செல்லும் சுக்ரன், சுய தொழில் புரிபவர்களின் மனதில் புதுமையான எண்ணங்களைத் தூவி வாழ்க்கையை வளமாக்குவார். சனி 14ம் தேதி முதல் 6ம் இடத்திற்கு செல்கிறார். ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்கு உரிய முயற்சிகள் சிறந்த முறையில் வடிவாக்கம் பெறும்.

டிசம்பர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 27, 28.

சூரியன் 7, 8 வீடுகளில் நிற்பதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பெண்கள் காரசாரமான பேச்சுக்கு இடம் தராமலிருந்தால், குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். இந்த மாதமும் செவ்வாய் 4ல். மாணவர்கள் நண்பர்களுடன் பொருட்களைப் பரிமாறிக்கொள்வதில் மாணவர்கள் கவனமாக இருந்தால், வீண் தொல்லைகள் வராமலிருக்கும். குடும்பத்தில் முக்கிய விஷயங்களை மூத்தோரின் ஆலோசனை கேட்டு செய்தால், பிரச்சினைகள் புதிதாய் முளைக்காமலிருக்கும். 14ம் தேதி வக்ர நிவர்த்தி பெறும் புதன் இந்த மாதமும் 7ம் வீட்டில் சுழலுவதால், பொது வாழ்வில் உள்ளவர்கள் முக்கியமான விஷயங்களில் உங்கள் நேரடி கவனம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி விடலாம். சுய தொழில் புரிபவர்கள் சோர்வு, சோம்பலின்றி செயல்பட்டு வந்தால், பணிகள் தேங்காது. சுக்ரன் 8, 9 வீடுகளில் உலா வருவதால், கலைஞர்களுக்கு இழுபறியாய் இருந்த பல காரியங்களில் சடுதியில் முடிவதால் மகிழ்வுடன் விளங்குவார்கள்.

Site Meter