வார ராசிபலன் 27-Jul-2010 முதல் 2-Aug-2010 வரை
21/Mar - 19/Apr
மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைவு. சனியுடன் சம்பந்தம். பாக்கியாதிபதி குருவும் 12-ல் மறைவு. அத்துடன் வக்ரம். 9-ல் ராகு. அவருக்கு சனியுடன் சேர்ந்த செவ்வாய் பார்வை! எனவே என்னதான் யோகமான தசா புக்திகள் நடந்தாலும், லட்சம் லட்சமாக கோடி கோடியாகச் சம்பாதித்தாலும், வீடு, வாசல், கார், பங்களா என்று யோகத்தை அனுபவித்தாலும் மனதில் ஏதோ ஒருவகையில் சில சங்கடத்தைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைதான். மனைவி வகையில் பிரிவு அல்லது உயிருக்குயிராகப் பழகிய நண்பர்கள் வகையில் பிரிவு- நெருங்கிப் பழகிய உறவுக்குள் முறிவு அல்லது உயிர் பிழைக்க முடியாத அளவில் விபத்து, நோய், வைத்தியச் செலவு- இப்படி ஒரு கதவைத் திறந்துவிட்டு இன்னொரு கதவை மூடச் செய்யும். அதாவது ஜன்னல் கதவைத் திறந்து வைத்து விட்டு வாசல் கதவை மூடிவிடும். ஆக்கி வைத்த சோற்றை சூடாக ருசியாக சாப்பிட முடியாதபடி கவலைப்படச் செய்யும். இது ஒருவகை! இன்னொரு வகை, வேளா வேளைக்கு ருசியான சாப்பாடு, வெளியார் மதிக்குமளவு வாகன வசதி, ஏ.சி. பங்களா வாசம், நல்ல மனைவி மக்கள், நல்ல குடும்பம்- ஆனால் எந்தவொரு சிறு காரியமும் நடக்காமல் ஏமாற்றம், தடை, காலதாமதம், வெட்டி அலைச்சல், வீண் முயற்சி- இப்படி ஒரு நிலை. ஆக, இது இருந்தால் அது இல்லை; அது இருந்தால் இது இல்லை. எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தெய்வ நம்பிக்கையும் தைரியமும் உங்களை வழி நடத்தும்.
Go Top
20/Apr - 20/May
ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் கேந்திரத்தில் 2, 5-க்குடைய புதனுடன் சம்பந்தம். அவர்களுக்கு வீடு கொடுத்த சூரியன் 3-ல் நிற்க, அவரை லாபாதிபதி குரு 5-ஆம் பார்வை பார்க்கிறார். இதுவரை வேலை இல்லாமல் துவண்டு போயிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் செய்ய முடியாமல் முடங்கியிருந்தவர்களுக்கு சுயமாகத் தொழிலோ சொந்தமாக வியாபாரமோ அமையும். யாருடைய பணமாவது உங்கள் கையில் புரளும். அதை வைத்து தொழில் ஆரம்பித்து, பின் கொடுக்க வேண்டிய நபருக்கு பணத்தைப் புரட்டிக் கொடுத்து விடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பளம் உயரும். விரும்பிய இடப்பெயர்ச்சியும் அமையும். தொழில் நடத்துபவர்களுக்கும் ஆதாயம் ஏற்படும். உங்களுடைய தன்னம்பிக்கை, தனித்திறமை, முயற்சி, வேகம், கடமையுணர்வு, சிறப்பான செயலாற்றல், சம்பாத்தியம், முக்கியத்துவம், முன்னேற்றம் எல்லாம் நல்லபடியாக அமையும். இதுவரை கண்டும் காணாதது மாதிரி ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்தவர்கள் இனி தானாகத் தேடி வந்து ஒட்டி உறவாடுவார்கள். பணப் பொறுப்பில் உள்ளவர்கள், வங்கி அதிகாரிகள், நிதி உதவி செய்யும் நிறுவனத்தினர், பொருளாதார நிபுணர்கள் ஆகியவர்களுடைய ஒத்துழைப்பெல்லாம் அவசியத்துக்கேற்றபடி கைகூடும். நல்லவர்கள், பெரியவர்கள், பிரபலமானவர்கள், முக்கியப் புள்ளிகள், பண பலம் உள்ளவர்களுடைய தொடர்பு, பழக்கம் ஆகியவை ஏற்படும். பக்தி நிலை மேம்படும்.
Go Top
21/May - 21/Jun
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் யோகாதிபதியான சுக்கிரனுடன் சேர்ந்து 3-ல் மறைந்தாலும் அவர்களுக்கு வீடு கொடுத்த சூரியனை குரு 5-ஆம் பார்வை பார்க்கிறார். 10-ல் குரு ஆட்சி- வக்ரம். வக்ரத்தில் உக்ர பலம்! குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். பணப் பற்றாக்குறை விலகும். மனதில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். அதனால் மன அமைதி குறைவாக இருக்கலாம். கொடுக்கல்- வாங்கல் மிகச் சிறப்பாக இருக்கும். குறித்த நேரத்தில் பண உதவி வந்து சேரும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம். ஒருசிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திருப்திகரமாக நடைபெறும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். எந்த ஒரு முயற்சியிலும் நிதானமாகச் செயல்படுவது நன்மையைத் தரும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் ஏற்படும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் வந்து சேரும். நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். சில நேரம் பிறரை நம்பி அதிக முயற்சியும் செலவுகளையும் செய்து நஷ்டம் ஏற்படும் வகையில் நிலைமை அமைந்துவிடும். தந்தை வழிச் சொத்துகளில் உள்ள பிரச்சினைகள் சாதகமாக அமையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும்.
Go Top
22/Jun - 22/Jul
கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 9-ல் குரு ஆட்சி பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பது ஒரு பிளஸ் பாயிண்டுதான். அத்துடன் 2-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் நிற்பதும் அவரையும் குரு பார்ப்பதுவும் அனுகூலம்தான். உறவினர்களால் செலவுகள் இருந்தாலும் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படும். வெளி வட்டாரப் பழக்கங்களாலும் நண்பர்களாலும் சிற்சில நன்மைகள் உண்டாகும். முயன்ற காரியத்தை பிறர் துணையுடன் முடிக்கலாம். கட்டுமானப் பணிகளில் முன்னேற்றமும் வாகன லாபமும் திருப்தியாகவே அமையும். சிலருக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் யோகம் ஏற்படலாம். வரவேண்டிய பணம் வந்து சேரும். பழைய கடன்கள் பைசலாகும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். புதிய நண்பர்கள் மூலம் எதிர்பாராத நன்மைகள் ஏற்படலாம். சகோதரர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பழைய வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த அனுகூலமும் ஆதாயமும் வெற்றியும் உண்டாகும். குடும்பத்தில் பொன், பொருள் வசதி திருப்திகரமாக அமையும். குழந்தைகளின் உடல்நலம் சிறப்பாக இருக்கும். கடன்கள் நெருக்கடியைத் தரும். புதிய கடனை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவீர்கள். செய்தொழிலில் லாபம் ஏற்படலாம். வியாபாரம் சிறப்பாக இருக்கும். பெற்றோர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகளும் ஆதரவும் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மனைவி வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
Go Top
23/Jul - 22/Aug
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் மறைந்தாலும் 5, 8-க்குடைய குரு பார்வையைப் பெறுவது ஒரு வகையில் அனுகூலம்தான். 10-க்குடைய சுக்கிரனும் 11-க்குடைய புதனும் ஜென்ம ராசியில் நிற்பதால் உங்களுடைய தொழில் துறையில் முன்னேற்றமும் வரவு- செலவுகளில் லாபகரமான சூழ்நிலையும் இடம் பெறும். விரும்பிய காரியங்கள் மனம்போல் நிறைவேறும். திட்டங்கள் வெற்றியடையும். வாரப் பிற்பகுதியில் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கேட்கும் உதவிகளும் சகாயங்களும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பொருளாதாரத்தில் சரளமான வரவு- செலவுகளும் கொடுக்கல்- வாங்கலில் ஏமாற்றமில்லாத சூழ்நிலையும் ஏற்படும். நண்பர்கள் வகையிலும் சகோதரர்கள் அல்லது சகோதரிகள் வகையிலும் தவிர்க்க முடியாத எதிர்பாராத செலவுகளும் வரும். குரு 8-ல் இருப்பதும் ஏழரைச் சனி நடப்பதும் செவ்வாய்,சனி சேர்க்கை இருப்பதும்தான் விரயத்தையும் செலவுகளையும் ஏற்படுத்துகிறது. சிலருக்கு வெளியூர் பயணங்களும் சொந்தக்காரர்கள் வகையில் செய்முறைச் செலவுகளும் உண்டாகும். தொழில், வருமானம் கைகொடுப்பதால் மற்ற பிரச்சினைகள் எல்லாம் சர்வ சாதாரண பிரச்சினைகள்போல் ஆகிவிடும். அதேசமயம் சரியான சமயத்தில் வேலைக்காரர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. அதாவது நல்ல வேலைக்காரர்கள் உடம்புக்கு முடியாமல் லீவு போடலாம். அல்லது விசேஷம் என்று வெளியூர் போய் விடலாம். இந்த மாதிரி தொல்லைகளை அனுபவிக்க நேரும். ஏழரைச் சனியின் தாக்கம்தான் காரணம்.
Go Top
23/Aug - 22/Sep
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த சூரியன் அதற்கு 12-ல் மறைவு. 2, 9-க்குடைய சுக்கிரனும் 12-ல் மறைவு. ஏழரைச் சனியோடு ஜென்ம ராசியில் செவ்வாயின் சஞ்சாரம். செவ்வாய், சனி சேர்க்கை. ஏதேதோ எண்ணுகிறீர்கள்; திட்டமிடுகிறீர்கள். ஆனால் என்னென்னவோ நடக்கிறது. நினைப்பது ஒன்று, நிகழ்வது ஒன்று. ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்; அன்றி அது வரினும் வந்தெய்தும்; ஒன்று நினையாமல் முன் வந்து நிற்கும்; எனையாளும் ஈசன் செயல் என்று பழம்பாடல் ஒன்று உண்டு. அதுதான் இப்போது உங்கள் வாழ்க்கையில் நடக்கிறது. ஒருசிலருக்கு நினைத்த மாதிரியே நடந்து விட்டாலும் அதில் மனநிறைவு அடைய முடியாதபடி புதுச்சிக்கல் ஏற்பட்டு விடும். ஒரு காவல் துறை அதிகாரி குடும்பம் ஓரிடம், தான் ஓரிடமாக இருந்து அவதிப்பட்டார். பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து குடும்பம் இருக்கும் இடத்துக்கே டிரான்ஸ்பர் வாங்கிப் போய் விட்டார். குடும்பத்தாருக்கு ரொம்ப மகிழ்ச்சி! ஆனால் அதை இந்த கிரகங்கள் நீடிக்க விடவில்லை. ஒரு மாதத்திலேயே புதுப் பிரச்சினை வெடித்துவிட்டது. அந்த ஊர் அரசியல் பிரமுகருக்கும் சொந்த மைத்துனருக்கும் தகராறு. அரசியல் பிரமுகர் மைத்துனரை ஆள் வைத்து வெட்டிப் போட்டார். ஆனால் அரசியல் பிரமுகர்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை; மேலிடத்துச் செல்வாக்கு! சொந்த பந்தத்தையும் சமாதானப்படுத்த முடியவில்லை. நடந்த நிகழ்ச்சியையும் சகித்துக்கொள்ள முடியவில்லை. தர்மசங்கடமான சூழ்நிலை- இதுதான் ஏழரைச் சனி படுத்தும் பாடு.
Go Top
23/Sep - 22/Oct
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 11-ல் இருக்கிறார். அவருடன் 9-க்குடைய புதனும் சம்பந்தமாக இருக்கிறார். புதன் 12-க்கும் உடையவர். சுக்கிரன் சுய சாரத்திலும் பிறகு சூரியன் சாரத்திலும் இருப்பதால் உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். அதன் மூலமாக நீங்கள் நினைத்ததை நிறைவேற்றலாம். ஒரு மலையை அண்டி வாழ வேண்டும் அல்லது ஒரு மனிதனை நம்பி வாழ வேண்டும் என்று சொல்லுவார்கள். மலை என்பது தெய்வமும் மனிதன் என்பது குருவும் ஆகும். வெறும் பண பலம் மட்டும் அல்லது பதவி பலம் மட்டும் இருந்தால் போதாது. பண பலமும் பதவி பலமும் இருந்தும் பலர் செயலிழந்து சிறையில் வாடி இருக்கிறார்கள். சில நேரங்களில் அவப்பெயர்களையும் கௌரவ பங்கத்தையும் சிலர் சந்திக்க நேரலாம். அதனால் கவலைகள் ஏற்படலாம். போட்டியாளர்களின்- மறைமுக சத்ருக்களின் சதிவேலைகளாலும் இந்தச் சங்கடங்கள் ஏற்படலாம். ஆனாலும் சத்ரு ஜெயம் ஏற்படவும் இடமுண்டு. துலா ராசிக்கு யோகாதிபதியான சனி 12-ல் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் மேற்கண்ட பலனைச் சந்திக்க நேரும். தொழிலும் வருமானமும் உங்களுக்கு கைகொடுக்கும். ஆகையால் மற்ற பிரச்சினைகளை சந்தித்து சமாளித்து விடலாம். மனைவி வகை உறவினரால் சகாயமும் ஆதாயமும் ஏற்படும். தெய்வப் பிரார்த்தனை ஒன்று பாக்கி இருப்பதால் அதை நிறைவேற்றுவது நல்லது. (குரு 6-ல் மறைவு, வக்ரத்தின் பலன் இது).
Go Top
23/Oct - 21/Nov
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 11-ல் இருந்தாலும் சனியுடன் சம்பந்தப்படுவது பிரச்சினைதான் என்றாலும், 2, 5-க்குடைய குரு ஆட்சி பெற்று அவர்களைப் பார்ப்பதால் நீங்கள் வழிபட்ட தெய்வம் கைவிடாது. கஷ்ட காலத்திற்கு விடிவு விமோசனம் தெரியும். பணத்திற்கு கஷ்டப்பட்டு பரிதவித்த நிலை மாறி நல்ல காலம் தென்படும். இனிமேல் கை நிறைய பணம் வந்து புழங்கும். நகை நட்டுகளை மீட்டுக் கொள்ளலாம். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழலாம். சௌகர்யங்களை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். மசமசப்பும் கசகசப்பும் மாறும். தூசி துடைத்து தீபம் ஏற்றிய குத்துவிளக்கு போல் சுடர் விடுவீர்கள். கல்யாண முயற்சிகளில் இழுபறி, அலைக்கழிப்பு அதிகமானாலும் எப்படியாவது விவாக சுப காரியம் கைகூடும். ஏற்கெனவே திருமணமானவர்கள் கருத்து வேறுபாடுகளைச் சந்திக்க நேரிடும். எனவே அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுக் கொடுத்து நல்லிணக்கம் காண வேண்டும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு இனிமேல் குழந்தை பாக்கியம் ஏற்படும். மாணவ- மாணவிகளுக்கு மந்தத் தன்மையும் மறதி, தாழ்வு மனப்பான்மை, சோம்பல் போன்ற தேவையில்லாத சிந்தனைகளும் ஏற்படும். கடின முயற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். வியாபாரிகளுக்கு மோசமான நிலை கிடையாது. வரவுக்கேற்ற செலவு ஏற்படும். வங்கிகளில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை சீர் செய்யலாம்.
Go Top
22/Nov - 21/Dec
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் 4-ல் ஆட்சி- வக்ரம். ஜென்ம ராகு- சப்தம கேது என்றாலும், குரு பலத்தாலும் பாக்கியாதிபதி குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவினங்கள் நீங்கி குடும்பத்தார் அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நலமுடன் இருப்பார்கள். குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். அனைவரும் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். பண வரவும் அதிகரிக்கும். கையில் தாராளமாகப் பணப் புழக்கம் இருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். உங்களிடம் உதவி பெற்று உங்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு, வெளியே போனவுடன் உங்களை எப்படிக் கவிழ்க்கலாம் என்று சதித்திட்டம் போடுகிறவர்களை பகவான் சரியானபடி தண்டித்து விடுவார். நீங்கள் உயர்நிலையை அடையும்போது உண்மையானவர்கள் மட்டுமே உங்களருகில் இருப்பார்கள். உங்களுக்குத் துரோகம் செய்தவர்கள் உங்கள் நிழலைக்கூட காண முடியாதபடி ஒதுங்கிப் போய் விடுவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சிலருக்கு கேட்ட இடத்தில் இடமாற்றமும் அமையும். தொழில் அல்லது வேலையில் அலைச்சல் இருக்கலாம். அலைச்சலுக்குத் தகுந்த ஆதாயமும் இருக்கும். அப்படி அலைச்சல் இருந்தால் அதுவும் ஒரு நன்மைக்கே என்று கருத வேண்டும். உங்களுடைய நீண்டகால கனவுத் திட்டங்கள் ஒவ்வொன்றாக வெற்றியடையும்.
Go Top
22/Dec - 19/Jan
மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 9-ல் இருப்பதோடு செவ்வாயுடன் சேர்க்கை. அவர்களுக்கு குரு பார்வை. குரு தைரிய ஸ்தானத்தில் ஆட்சி- வக்ரம்! எதிர்பார்த்த முக்கியமான காரியங்கள் அனுகூலம் தரும். வியாபாரம், தொழில்துறைகளில் திட்டமிட்டபடி உற்சாகத்துடன் செயல்பட்டால் போதிய வருமானம் ஏற்படும். உத்தியோகத் துறையில் சிலருக்கு பதவி உயரும். தம்முடைய தொழில் அபிவிருத்தியை முன்னிட்டுச் செய்யும் புதிய முயற்சிகளில் திறமைசாலிகள் தானாக உதவி செய்ய முன் வருவதால் எதிர்பாராத நற்பலன் கிட்டும். உதவி செய்வதாக நினைத்து எவருக்கேனும் கூட்டு முயற்சியில் கையொப்பம் இடுதல் முடிவில் வருத்தத்தை ஏற்படுத்தும். பொதுப்பணிகள், தர்மப் பணிகள் போன்ற வகையில் திருப்தி ஏற்படும். தேக ஆரோக்கியம், கௌரவம் நன்றாக இருந்து வரும். கலை, இலக்கியத் துறைகள் லாபகரம் தரும். சில விஷயங்களில் மனதில் குழப்பம் இருந்து வரும். பிறரிடத்தில் கூற முடியாத மன வேதனை ஏற்படும். பூமி, வீடு, நிலம் போன்ற இனங்கள் வருமானத்தைக் கொடுக்கும். முக்கியமான காரியங்களில் பிரபலஸ்தர்களின் சகாயத்தால் சுலபமாக நன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தோன்றும். பெண்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். எல்லா வகையிலும் சூழ்நிலை திருப்தி தரும். சிலருக்குத் தொழில் வகையில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.
Go Top
20/Jan - 18/Feb
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
ராசிநாதன் 8-ல் மறைவதும் அவருடன் செவ்வாய் சேர்வதும் குற்றம்தான். இருந்தாலும் குரு பார்ப்பது ஒரு ஆறுதல். குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருப்பினும், மன நிலையில் ஏதோவொரு தயக்கமும் பீதியும் ஏற்படும். எதிர்பாராத வகையில் பண வரவுகள் உண்டாகும். ஆனாலும் வாங்கிய கடனுக்காக வட்டி கட்டும் சூழ்நிலை உருவாகும். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்கும் நிலையும் ஏற்படலாம். போட்டி, பந்தயங்களில் எதிர்பாராத ஆதாயங்கள் கிட்டும். அரசியல் செல்வாக்கினால் அரசு ஒப்பந்தக்காரர்கள் ஆதாயமடைவார்கள். பூர்வீகச் சொத்துகளில் ஏற்படும் இடையூறுகள் நீங்கும். குடும்பத்தில் சுபச் செலவுகளும் அவற்றின் மூலம் திருப்தியும் ஏற்படும். சிலர் பழைய வாகனத்தைப் புதுப்பித்துக்கொள்ளவும் சிலர் குடியிருப்பு மாற்றம், வசதிகளை மாற்றிக்கொள்ளவும் நேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை அதிகமாகும். உடன்பிறந்தவர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் நடக்க வேண்டிய சில முக்கிய நல்ல காரியங்களைத் தள்ளி வைக்க நேரிடும். அனாவசியமான பேச்சுகளையும் வீண் வம்புகளையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத் துறையில் ஆண், பெண்களுக்கு இடமாற்றம், இலாகா மாற்றம் வந்தால் ஏற்றுக் கொள்ளலாம். சிலருக்கு வேலை மாறலாம்.
Go Top
19/Feb - 20/Mar
மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு ஆட்சி- வக்ரம்! 9, 10-க்குடையவர்களின் பார்வை. (செவ்வாய், குரு பார்வை). 9-க்குடையவர் 10-ஆம் இடத்துக்கும் பார்வை. எனவே, இந்த வாரம் எதிர்பாராத லாபங்கள், ஆதாயங்கள் கிடைக்கும். வியாபாரத்திலிருந்து விலகிய பங்குதாரர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். சகோதரர்களால் வீண் செலவுகளும் விரயமும் ஏற்படும். குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுப காரியங்கள் எளிதில் நிறைவேறும். செய்தொழில் முயற்சிகள் முன்னேற்றம் அடையும். வாங்கிய கடன்கள் படிப்படியாகக் குறைய வாய்ப்புகள் தென்படும். இயந்திரத் தொழில்கள் நடத்துவோருக்கு எதிர்பாராத ஆதாயம் உண்டு. அதேசமயம் செலவினங்களும் ஏற்படும். நிலபுலன் வாங்கவும், வீடு கட்டவும் அல்லது மாடி வீடு கட்டும் பணிகளும் நிறைவேறும். குடும்பப் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றிருப்பதோடு சௌகரியம், சந்தோஷம் தருவதாகவும் அமையும். பூர்வீகச் சொத்துகளை மாற்றி அமைக்க நேரிடும். தூரதேச உறவினர்களின் தொடர்பால் தனச் சேர்க்கையும் புதிய வர்த்தகத் தொழில் துவக்கமும் ஏற்படும். குடும்பத்தில் சுபச் செலவுகளும் ஏற்படும். அந்நியர்களால் ஏமாற்றமும் கொடுக்கல்- வாங்கலில் காலதாமதமும் ஏற்படும். பிள்ளைகளைப் பற்றிய கவலைதான் மனதை வருத்தும். அவர்களுக்கு சரிவர வேலை அமையவில்லையே, வருமானம் வரவில்லையே என்ற கவலை சற்று மனதை வாட்டும். விரைவில் அவர்களுக்கு ஏற்படும் நன்மையினால் அந்தக் கவலையும் மாறும்.
Go Top