Place Your Ads - Contact ads@Koodal.com Tamil Movie Special - News, Reviews, Previews, Gallery and more


2
Thu
Obama Sugarcoats Iraq War Realities - World News Headlines in Tamil ஈராக் போர் முடிந்தது; அடுத்த இலக்கு அல்-காய்தா: ஒபாமா பிரகடனம்
வாசிங்டன், செப். 2-

அமெரிக்க படைகளுக்கு ஈராக்கில் வெற்றி கிடைத்துள்ளது, இதற்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்குவதே முக்கியக் குறிக்கோள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதிபட தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நிகழ்த்திய உரையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். அவரது உரையின் சுருக்கம்:

ஈராக்கில் சர்வாதிகாரி சதாம் ஹுசைனின் ஆட்சியை ஒடுக்க அமெரிக்க ராணுவம் 7 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்து போராடி வெற்றி கண்டது. 'ஈராக் சுதந்திரம்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை அமெரிக்கா மட்டுமின்றி இராக் சரித்திரத்திலும் மிகவும் முக்கியமான காலமாகும்.

யுத்தம் முடிந்துவிட்டது. இப்போது ஈராக் மக்கள் நிம்மதியுடன் வாழ்கின்றனர். தங்கள் நாட்டைக் காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் ஒபாமா. ஜனநாயகக் கட்சி பிரதிநிதியான ஒபாமா, முன்னாள் அதிபர் புஷ் நிர்வாகம் ஈராக் மீது போர் தொடுத்தபோது அதை எதிர்த்தார்.

இதனால் அதிபராக பொறுப்பேற்ற உடனேயே ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அத்துடன் ஈராக் நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்தி அந்நாட்டு பாதுகாப்பை அவர்களிடமே விடச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இதன்படி ஈராக்கிலிருந்து ஒரு லட்சம் அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர்.

ஈராக்கில் போர் முடிவுக்கு வந்தது ஈராக்கின் நலனுக்கு மட்டுமல்ல அமெரிக்க நலன் சார்ந்தது. ஈராக் மக்களின் எதிர்காலம் கருதி அமெரிக்க எடுத்த நடவடிக்கைக்கு மிக அதிகம் செலவிட நேர்ந்துள்ளது. இதற்காக ஈராக்கில் நமது ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு தியாகங்களைச் செய்ய நேர்ந்தது. கடுமையான நிதி நெருக்கடியிலும் ஈராக்கிற்கு அதிகம் செலவிட வேண்டியதாயிற்று. இருப்பினும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களே இப்போது ஈராக்கில் உள்ளனர். ஈராக் ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது, ஈராக் ராணுவத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு இவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. ஈராக் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்க ராணுவம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முற்றிலுமாக வாபஸ் பெறப்படும்.

2003-ம் ஆண்டு ஈராக்கின் மீது அமெரிக்க ராணுவம் படையெடுத்ததிலிருந்து இதுவரை 4,400 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 2006-ம் ஆண்டு சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்டார்.

இப்போது அமெரிக்காவின் பொருளாதார சரிவு காரணமாக பல ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். இந்தப் பிரச்சினையை உடனடியாகக் கவனிக்க வேண்டியுள்ளது. இது தவிர, தற்போது அமெரிக்காவுக்கு சவாலாக உள்ள அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்கும் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான சதி வேளைகளில் ஈடுபடும் இத்தகைய தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ளனர்.

இவர்களை முற்றிலுமாக ஒழித்து ஆப்கானிஸ்தானை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. பயங்கரவாதிகளுக்கு தளமாக விளங்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து அல்-காய்தா அமைப்பினரை முற்றிலுமாக வெளியேற்றுவதே முக்கிய நோக்கம் என்றார் ஒபாமா.

இதனிடையே அமெரிக்க ராணுவம் திரும்புவதைக் கண்காணிக்க ஈராக்கிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் வந்துள்ளார். பாக்தாத்திலிருந்து 160 கிமீ தூரத்தில் அமைந்துள்ள அமெரிக்க விமான படைத்தளத்தில், கேட்ஸின் விமானம் செவ்வாய்க்கிழமை வந்திறங்கியது.  இப்போது 50 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஈராக்கில் உள்ளனர். போர் உச்சத்தில் இருந்தபோது 1.65 லட்சம் அமெரிக்க வீரர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 
PM laid foundation stone of Manavaram project - India News Headlines in Tamil மின்னுற்பத்தியை அதிகரிக்க பிரதமர் வலியுறுத்தல்
திருப்பதி, செப். 2-

தேவைக்கேற்ப மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

திருமலை அருகே மன்னாவரம் எனுமிடத்தில் ரூ. 6,000 கோடி முதலீட்டிலான மின்னுற்பத்தி நிலைய உதிரி பாக தயாரிப்பு ஆலைக்கான அடிக்கல்லை புதன்கிழமை நாட்டி அவர் பேசியது: நாட்டில் மின்னுற்பத்தி தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும். ஸ்திரமான பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில் மின்சாரம் அவசியமாகும். அதை தேவைக்கு ஏற்ப சப்ளை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வேளாண் துறை மற்றும் தொழில்துறைக்கு கட்டுபடியாகும் விலையில் மின்சாரம் கிடைக்கச் செய்வது மிகவும் முக்கியமானது. தேவைக்கேற்ப மின்சாரம் கிடைக்கச் செய்வதுதான் பொருளாதார வளர்ச்சிக்கு நீண்ட கால அடிப்படையில் பயன் தரும். இந்தியாவில் தற்போது 1.62 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இருப்பினும் மின் பற்றாக்குறை 14 சதவீத அளவுக்கு உள்ளது. இதைப் போக்க 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 78 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இங்கு உருவாக உள்ள ஆலை என்டிபிசி மற்றும் பிஹெச்இஎல் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அமைந்துள்ளது. இந்த ஆலை 2014-15-ம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கும். இதன் மூலம் 5 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்திக்குத் தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யும். இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்படும் ஒருங்கிணைந்த மின்னுற்பத்தி ஆலையாகும் இது. இங்கு டர்பைன்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் பாய்லர்கள் தயாரிக்கப்படும்.

11-வது மற்றும் 12-வது திட்ட காலத்தில் மின்னுற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்குரிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் அரசுத் துறை நிறுவனங்களே மின் உபகரண தயாரிப்பு ஆலையைத் தொடங்க உள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆலை மூலம் 6,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புக் கிடைக்கும். அத்துடன் 25 ஆயிரம் பேர் மறைமுக வேலை வாய்ப்பைப் பெறுவர்.

இத்தகைய ஆலையைத் தொடங்க ஆந்திர மாநில அரசு முன்வந்தது அதன் தொலை நோக்கு பார்வையை வெளிப்படுத்துகிறது. இந்த ஆலையைச் சுற்றிலும் மின்னுற்பத்தி ஆலைகள் சார்ந்த உதிரிபாக ஆலைகள் உருவாகும். மிகவும் பின் தங்கிய பகுதியில் அமைய உள்ள இந்த ஆலை மூலம் இப்பகுதி மேம்பாடு அடையும் என்றார் மன்மோகன் சிங்.

இந்த விழாவில் உடல் சுகவீனம் காரணமாக முதல்வர் கே. ரோசய்யா பங்கேற்கவில்லை.

திருப்பதி வேங்கடேச பெருமாளை பிரதமர் மன்மோகன் சிங் வழிபட்டார். முன்னதாக அவரை கோயிலின் தலைமை பட்டாச்சார்யர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார். கோயிலில் பிரதமர் 10 நிமிடம் இருந்தார். அவருக்கு கோயிலின் வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் விளக்கிக் கூறப்பட்டன. புறப்படும் முன் கோயில் உண்டியலில் மன்மோகன் காணிக்கை செலுத்தினார்.

ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் ஜி. வெங்கடா ரெட்டி, பிரதமருக்கு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் கோயில் பிரசாதமான லட்டு ஆகியவற்றை வழங்கினார்.
திருப்பதிக்கு மன்மோகன் வருவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் 2000-வது ஆண்டில் அவர் இங்கு வந்திருந்தார். ஆந்திர மாநிலத்துக்கு வந்திருந்த பிரதமரை மாநில ஆளுநர் எஸ்எஸ்எல் நரசிம்மன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

பிரமதருடன் மத்திய அமைச்சர்கள் விலாஸ் ராவ் தேஷ்முக், சுசீல் குமார் ஷிண்டே, பிரஃபுல் படேல், வீரப்ப மொய்லி, பனபாக லட்சுமி ஆகியோர் வந்திருந்தனர்.

பிரதமர் வருகையை ஒட்டி இப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாகன அணிவகுப்பில் குறுக்கீடு செய்ய முயற்சி: பிரதமர் செல்லும் வாகன அணி வகுப்பில் குறுக்கீடு செய்ய எம்ஆர்பிஎஸ் என்ற குழுவினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அதை போலீசார் தடுத்துவிட்டனர். திருமலையிலிருந்து பத்மாவதி ஓய்வில்லத்திற்கு பிரதமர் செல்லும்போது இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மடிகா ஒதுக்கீடு போராட்ட சமிதி என்ற அழைக்கப்படும் இந்த அமைப்பினர்,  தங்களது சமூகத்தை தாழ்த்தப்பட்ட பிரிவில் சேர்க்கக் கோரி போராடி வருகின்றனர்.


தலைப்புச் செய்திகள் (

Top Stories in Tamil

)

மேலும் செய்திகள் (More)