20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 7 ஆகஸ்ட் 2011

இந்தியச்செய்திகள் : Latest India News

நாட்டில் 2-வது பசுமை புரட்சி ஏற்பட வேண்டும்: பிரதிபா பாட்டீல்

பெங்களூர், ஆக. 7-

நமது நாட்டில் 2-வது பசுமை புரட்சி ஏற்பட வேண்டும் என்று பெங்களூர் விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசினார்.

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் பெங்களூர் வந்தார். நேற்று பெங்களூர் ஹெப்பால் அருகே உள்ள விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு கவர்னர் பரத்வாஜ் தலைமை தாங்கினார். பட்டமளிப்பு விழாவில் 34 மாணவ- மாணவியருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தங்கபதக்கம் வழங்கினார். விழாவில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசியதாவது:-

உணவு பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழித்தல் ஆகியவை நமது நாட்டின் முக்கிய பொறுப்பாக உள்ளது. இதற்காக 2-வது பசுமை புரட்சி நாட்டில் ஏற்பட வேண்டும். மீண்டும் பசுமை புரட்சி ஏற்படுவதற்காக விவசாயத்துக்கு உதவுவதற்கான இடைவெளிகள் நீங்க வேண்டும். வறட்சி நில விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக விவசாயத்தை மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து அழைத்து செல்ல வேண்டும். தொழில் மற்றும் சேவை துறைகளின் செயல்பாடுகள் விவசாயத்துடன் நெருங்கி இருக்க வேண்டும். விவசாய பல்கலைக்கழகங்கள் தொழில் மாதிரியான கல்வியை கற்று கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். விவசாய பல்கலைக்கழகங்கள் கூட்டுறவு துறைகளுடன் ஒன்றிணைந்து பணி செய்ய வேண்டும்.

மொத்த உணவு உற்பத்தியில் 45 சதவீதம் வறட்சி நில விவசாயத்தில் இருந்து செய்யப்படுகிறது. 80 சதவீத தானிய வகை மற்றும் விதைகள் வறட்சி நில விவசாயம் மூலமே விளைகிறது. வறண்ட நில விவசாயத்தில் மத்திய-மாநில அரசுகள் தங்களது கொள்கையை மாற்றியமைத்து ஊக்கமளிக்க வேண்டும். இந்த விவசாய முறையில் அதிக உற்பத்தி மற்றும் லாபத்தை பெற விவசாயிகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

நமது நாட்டில் உணவு தானியங்களை சேமித்து வைக்க போதிய கிடங்கி வசதி இல்லை. இவ்வாறு கிடங்கி வசதி இல்லாததை சகித்து கொள்ளவும் முடியாது. இந்த பிரச்னைகளை களைய புதிய அறிவியல் சார்ந்த முறையை விவசாய பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்க வேண்டும். தற்போது அரசிடம் 62 மில்லியன் டன் உணவு தானியங்களை சேமித்து வைக்க கிடங்கி வசதி உள்ளது. ஆனால் கொள்ளளவை மீறி கிடங்கிகளில் 65 மில்லியன் டன் உணவு தானியங்கள் வைக்கப்பட்டு உள்ளன. நமது நாடு உணவு பாதுகாப்பில் இன்னும் சாதனை படைக்கவில்லை. இந்த நிலையில் உணவு தானியங்களை சேமித்து வைக்க தகுந்த நடவடிக்கைகள் இல்லாததை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.


Site Meter