20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 31 ஜுலை 2014

இந்தியச்செய்திகள் : Latest India News

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜுடன் அமெரிக்க மந்திரி பேச்சுவார்த்தை

புதுடெல்லி

மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை அமெரிக்க மந்திரி ஜான் கெர்ரி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை
உலகம் முழுவதும் தடையற்ற சரக்கு போக்குவரத்துக்காக சுங்க விதிமுறைகளை தளர்த்தும் நோக்கத்தில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக வர்த்தக அமைப்பு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இப்பேச்சுவார்த்தை நேற்று முடிவடைந்தது.

வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்குவதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம். சரிந்து கிடக்கும் தனது பொருளாதாரத்தை நிமிரச் செய்வதற்காக, அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை திணிக்க முயன்று வருகிறது.

இந்தியா எதிர்ப்பு
ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது, வளர்ந்த நாடுகளுக்கு சாதகமானது என்று கூறி வருகிறது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஏழைகளின் உணவு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தால்தான், ஒப்பந்தத்தை ஆதரிப்போம் என்று நிபந்தனை விதித்து வருகிறது.

இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்க வர்த்தக மந்திரி பென்னி பிரிட்ஸ்கர் ஏற்கனவே ஏமாற்றம் தெரிவித்தார்.

அருண் ஜெட்லி
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி இந்தியா வந்துள்ளார். அவரும், அமெரிக்க வர்த்தக மந்திரி பென்னி பிரிட்ஸ்கரும் நேற்று மத்திய நிதி மற்றும் ராணுவ மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்தனர்.

அப்போது, உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அருண் ஜெட்லியுடன் விவாதித்தனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஓர் அதிகாரி கூறுகையில், ‘பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது. இந்தியா மிகப்பெரிய சந்தை. உலக வர்த்தக அமைப்பு தொடர்பான விஷயங்கள் குறித்தும் விவாதித்தோம்’ என்றார்.

சுஷ்மா சுவராஜ்
பின்னர், மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி சந்தித்து பேசினார். இது, இந்திய–அமெரிக்க ராணுவ உறவு தொடர்பான பேச்சுவார்த்தை ஆகும். பாதுகாப்பு, எரிசக்தி போன்ற முக்கிய விவகாரங்கள் பற்றியும் விவாதித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க உள்ள நிலையில், இப்பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.


கச்சத்தீவில் நுழைய முயன்றால் கைது: தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவம் எச்சரிக்கை

கச்சத்தீவு பகுதிக்குள் நுழைய முயற்சிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில், நாளை மறுதினம் கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், கச்சத்தீவு பகுதிக்குள் நுழைய முயற்சிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய முயற்சிக்கும் தமிழக மீனவர்களின் போராட்டம் தடுத்து நிறுத்தப்படும். இதற்காக இலங்கை வீரர்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் கச்சத்தீவை முற்றுகையிடுவது தொடர்பாக எச்சரிப்பது புதியதில்லை. நாள்தோறும் சர்வதேச கடல் எல்லையை மீறுவது இந்திய மீனவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.


Site Meter