20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 2 செப்டம்பர் 2014

இந்தியச்செய்திகள் : Latest India News

கேரள ஆளுநராகிறார் நீதிபதி சதாசிவம்

கேரள ஆளுநராக நியமிக்க, தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவத்தின் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

சில நாள்களுக்கு முன்னர் கேரள ஆளுநர் பதவியில் இருந்து ஷீலா தீட்ஷித் விலகினார். இதையடுத்து, கேரளத்தின் புதிய ஆளுநராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பெயரை, குடியரசுத் தலைவரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு  2 நாள் பயணமாகச் சென்றுள்ளார். அவர் தில்லி திரும்பியதும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. சதாசிவம்  2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மொத்தம் 9 மாதங்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். இப்பதவியை வகித்த முதல் தமிழர் சதாசிவம் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், காடப்பநல்லூர் என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர். 1949-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி பிறந்த இவர், மாணிக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். இவரது தந்தை பழனிசாமி கவுண்டர். தாய் நாச்சாயம்மாள். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்ற இவர், உயர்நிலைக் கல்வியை சிங்கம்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் பயின்றார். சிவகாசியில் உள்ள அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர், சென்னை சட்டக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினார். இவரின் நேர்மை, காலம் தவறாமையால் கடந்த 1996-இல் உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியானார். கடந்த 2007-இல் பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இவருக்கு மனைவி சரஸ்வதி, சீனிவாசன், செந்தில் என 2 மகன்கள் உள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2007-இல் பதவியேற்ற இவர், பதவி உயர்வு பெற்று 2013-இல் உச்சநீதிமன்றத்தின் 40-ஆவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். கடந்த ஏப்ரல் 26-ல் பணி ஓய்வு பெற்ற இவர், தனது சொந்தக் கிராமத்தில் விவசாயப் பணிகளைச் செய்து வந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிராகத் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது. ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நமது நாட்டில் உள்ள சொத்துகள் அனைத்தும் மக்களுக்குச் சொந்தமானது, அதை யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது எனத் தீர்ப்பளித்தது. ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையை 5 ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பு  வழங்கியது.

உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு, தேங்கியுள்ள வழக்குகளை குறைக்க நாடு முழுவதும் மக்கள் நீதிமன்றம் நடத்தி லட்சக்கணக்கான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில்,முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 146 அடியாக உயர்த்தலாம் என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தலைமை நீதிபதி சதாசிவம் உள்பட 4 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது.


Site Meter