20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 31 சனவரி 2015

இந்தியச்செய்திகள் : Latest India News

வீரமரணம் அடைந்த கர்னல் எம்.என்.ராயின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்

டெல்லி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த ராணுவ அதிகாரி கர்னல் எம்.என்.ராயின் உடல், ராணுவ மரியாதையுடன் தில்லியில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

தில்லியில் உள்ள ராணுவக் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், அவரது உடலுக்கு ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த செவ்வாயன்று, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில், எம்.என்.ராய் வீரமரணம் அடைந்தார்.

கடந்த திங்களன்று நடந்த குடியரசு தின விழாவில், எம்.என்.ராய்க்கு யுத்தசேவை விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ராணுவ துணை தளபதி சுப்ரதா சாஹா கூறியதாவது:
தீவிரவாதிகள் குறித்து, ராணுவத்துக்கு கிடைத்த உளவுத் தகவலின் பேரில், தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் வீடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆபரேஷனின்போது படையை கர்னல் ராய் வழிநடத்தி சென்றார். தீவிரவாதிகள் மறைந்துள்ள வீடு, ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது, 2 தீவிரவாதிகளில் ஒருவரது உறவினர், வீட்டுக்கு வெளியே வந்து, தீவிரவாதிகள் இருவரும் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார். இயல்பிலேயே மனித நேயமும், நல்ல குணமும் உடையவரான கர்னல் ராய், தீவிரவாதிகள் சரணடைவதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கினார். ஆனால், அதனைப் பயன்படுத்தி அவர்கள் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதில் கர்னல் ராய் வீர மரணம் அடைந்தார். இந்த சம்பத்தில் தலைமை காவலர் சஞ்சீவ் குமார் என்பவரும் வீர மரணம் அடைந்தார். ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

தில்லி பரார் சதுக்கத்தில் ராணுவ மரியாதையுடன் இன்று இறுதி சடங்கு நடந்தது. இதில் உறவினர்கள், ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.


Site Meter