20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 25 மே 2016

இந்தியச்செய்திகள் : Latest India News

அரசு அலுவலக வளாகங்களில் பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம்

டெல்லி

மத்திய அரசு அலுவலக வளாகங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கு இனி அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது, அதனால் சேரும் கட்டட கழிவுகள் குறித்த நேரத்தில் அகற்றப்படாமல் விட்டாலும், கட்டுமான ஒப்பந்ததாரருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான "தூய்மை இந்தியா" திட்டத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இதுதொடர்பாக மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • மத்திய அரசு அலுவலகங்களின் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சேரும் குப்பைகள், கழிவுகள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்றி அங்கு ஆரோக்கியமான பணிசூழல் நிலவுவதை உறுதி செய்வது அந்தந்த துறை நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
  • அலுவலகங்களில் பயன்பாடற்ற நிலையில் உள்ள வன்பொருள்கள் (ஹார்டுவேர்), மரச்சாமான்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துவதற்கு வசதியாக குறைந்தபட்சம் 2 மாதத்துக்கு ஒருமுறை, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் பங்கேற்க வேண்டும்.
  • இதேபோன்று அலுவலகங்களில் உள்ள பல்வேறு பதிவேடுகள் 6 மாதத்துக்கு ஒருமுறையாவது சரிபார்க்கப்படுவதும், வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஆண்டுக்கு ஒருமுறையாவது அவற்றை அப்புறப்படுத்துவதும் அவசியமாகும்.
  • மேலும், தங்களது அலுவலக வளாகத்தின் ஒட்டுமொத்த தூய்மையை பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக மத்திய அரசின் அனைத்து துறைகளும் சுயமதிப்பீடு செய்ய வேண்டும்.
  • இதைதவிர, அலுவலக வளாகங்களின் தூய்மைப் பராமரிப்பு தொடர்பான கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள, ஒவ்வொரு துறையின் இணைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும்.
  • குறிப்பாக, மத்திய அரசு அலுவலக வளாகங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கு இனி அபராதம் விதிக்கப்படும்.
  • இதேபோன்று, அரசு அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது, அதனால் சேரும் கட்டட கழிவுகள் குறித்த நேரத்தில் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட கட்டுமான ஒப்பந்ததாரருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும்.
  • மத்திய அரசு அலுவலக வளாகங்களில் தூய்மைப் பராமரிப்பு தொடர்பாக திடீர் ஆய்வுகளை மேற்கொள்வதும், வளாக தூய்மைக்கு ஊறு விளைவிப்போருக்கு அபராதம் விதிப்பதும் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்தின் தலையாய கடமையாகும்.
என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Site Meter