19 ஆகஸ்ட், 2017. சனிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 15 சனவரி 2003

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

தை பிறந்தால் வழிபிறக்கும்-காலம் மாறும் வறட்சிக்கோலமும் மாறும்-நமக்கான காவிரி நீரை பெற்றே தீர உறுதியேற்போம்: முதல்வர் ஜெயலலிதா

சென்னை(தமிழ்நாடு), சனவரி 14

தை பிறந்தால் வழிபிறக்கும்-காலம் மாறும் அத்தோடு இந்த வறட்சிக்கோலமும் மாறும் என்றும் நமக்கான காவிரி நீரை பெற்றே தீர பொங்கல் திருநாளில் உறுதியேற்போம் என்றும் தமிழ்நாடு முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலருமான ஜெ. ஜெயலலிதா பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி:தமிழர் வாழும் இடமெல்லாம் தனிச்சிறப்புடன் கொண்டாடப்படும் விழா பொங்கல் விழா. இந்த மங்கலப் பொங்கல் திருநாளில் எங்கெங்கும் வாழும் தமிழர்களுக்கும், என் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

உழுவார், உலகத்தாருக்கு அச்சாணி என்பது உலக பொதுமறை தந்த வள்ளுவப் பெருமானின் வாக்கு.

வள்ளுவரின் வாக்குக்கிணங்க உலகுக்கு உணவூட்டும் உன்னத தொழிலாம் உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்த தமிழ மக்கள் திருவள்ளுவர் திருநாளையும், உழவர் திருநாளையும் ஒன்றன்பின் ஒன்றாக உவப்புடன் கொண்டாடி வருகிறார்கள்.

தை முதல் நாளை பொங்கல் திருநாளாகவும், தை 2-ம் நாளை திருவள்ளுவர் திருநாளாகவும், தை 3-ம் நாளை உழவர் திருநாளாகவும் கொண்டாடுகின்ற மரபு பொருள் பொதிந்த மரபாக விளங்குகின்றது.

இந்த பொங்கல் திருநாளில் காவிரி நீரில் நமக்குரிய பங்கை நாம் பெற்றே தீருவோம் என உறுதி ஏற்போம்.

இன்று காவிரியில் நீர் வரத்து இல்லை. கழனிகளில் சாகுபடி இல்லை. எனவே பொங்கலின் உண்மையான மகிழ்ச்சியும் இன்று நம்மிடையே இல்லை.

வறண்டு கிடக்கும் பூமியில் விவசாயம் செய்ய இயலாமல் உழவர்கள் வாடிக்கிடக்கும் நிலை இன்று. என்றாலும் ஊக்கத்தால் உள்ளத்தின் உறுதிப்பாட்டால் சோதனைகளை வெல்வோம்.

காலம் மாறும் அத்தோடு இந்த வறட்சிக்கோலமும் மாறும்.

அடுத்த ஆண்டு வரும் பொங்கல் நிச்சயம் மகிழ்ச்சிப் பொங்கலாய் இருக்கும். நெஞ்சில் மணக்கும் பொங்கலாய் இனிக்கும் என்ற நம்பிக்கையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி.

இன்று பிறந்தது தை, பிறக்கட்டும் வளம், சிறக்கட்டும் நலம் என வாழ்த்தி எனது அருமை தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


Site Meter