20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 4 மே 2011

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

வேடந்தாங்கல் சரணாலயத்தில் 25,000 வெளிநாட்டு பறவைகள்

சென்னை, மே.4-
More than 25000 birds migrated to Vedanthangal Sanctuary - Tamilnadu News Headlines in Tamil

கோடை காலத்திலும் ரம்மியமான சூழல் நிலவுவதால், வேடந்தாங்கல் சரணாலயத்தில் 25 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் உற்சாகமாக தங்கியுள்ளன. இதனால், சீசன் ஆகஸ்டு மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.

சென்னையை அடுத்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். சென்னையில் இருந்து 82 கிலோ மீட்டர் தொலைவிலும், செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.

73 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஏரியில் நீர் கடப்பை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த மரங்கள் கூடுகட்டி வாழ ஏற்றதாக உள்ளதால், ஆண்டுதோறும் பருவமழைக்கு பிறகு வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கும்.

அக்டோபர் மாதம் முதல் நிறைய பறவைகள் வருவதால், சீசன் களைகட்டும். சுற்றுலா பயணிகளும் நிறைய பேர் வரத் தொடங்குவார்கள். இந்த ஆண்டு வேடந்தாங்கலுக்கு சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா, இலங்கை, கனடா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள் வந்துள்ளன.

நத்தை குத்தி நாரை, கூழைக்கடா, சாம்பல் நாரை, பாம்புத்தாரா, மண்வெட்டி வாயன், கரண்டி வாயன், தட்டவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் என இந்த வரிசையில் அடங்கும். சைபீரியாவில் இருந்து வரும் வர்ண நாரை, இந்த ஆண்டு தாமதமாக வந்ததால், தற்போதுதான் குஞ்சு பொறித்து, குஞ்சுகள் பறக்க கற்றுக்கொடுத்து வருகின்றன.

இதனால், வேடந்தாங்கல் ஏரியே, பறவைகள் எழுப்பும் கீச்.. கீச்.. சத்தத்துடன் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இந்த ஆண்டு சீசன் தாமதமாக தொடங்கியதால், முதலில் 20 ஆயிரம் வெளிநாட்டு பறவைகளே வருகை புரிந்தன. அதன் பிறகு சீசன் களைகட்ட தொடங்கியதும் சுமார் 40 ஆயிரம் பறவைகள் வந்தன.

பறவைகளின் வருகையை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்தது. தற்போது, கோடை காலம் தொடங்கிய நிலையிலும், ஏரியில் போதிய நீர் இருப்பு உள்ளது. இதனால், அங்கு ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. இதனால், 25 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் இன்னும் தங்கியுள்ளன.

ஆகஸ்டு மாதம் வரை இந்த பறவைகள் தங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சீசன் அதுவரை நீடிக்க வாய்ப்புள்ளது. தற்போது, பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுவிட்டதால், தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள், தங்கள் குடும்பத்தினருடன் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வந்து, ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்.. என திரியும் வெளிநாட்டு பறவைகளை ரசித்து செல்கின்றனர்.

ஆனால், தற்போது வேடந்தாங்கல் சரணாலயத்தில் ரூ.50 லட்சம் செலவில் புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடைபாதை, குடிநீர், கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தப்படுவதால், சுற்றுலா பயணிகள் மாற்று பாதை வழியாக உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு படிக்கட்டு வசதி எதுவும் இல்லாததால், சிரமத்துடனே ஏறிச் செல்கின்றனர்.

வேடந்தாங்கலுக்கு செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த பஸ்கள் நீண்ட இடைவெளி விட்டே இயக்கப்படுவதால், சுற்றுலா பயணிகள் வருவதற்கு கடும் சிரமப்படுகின்றனர். பலர், கார்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் வந்து செல்கின்றனர்.

இதேபோல், வேடந்தாங்களில் ஓட்டல் வசதியும் எதுவும் இல்லை. 2 டீக்கடை, ஒரு குளிப்பான கடை மட்டுமே உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, வேடந்தாங்கலுக்கு கூடுதல் பஸ் வசதியும், வேடந்தாங்களில் ஓட்டல் வசதியும் செய்துதர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Site Meter