20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 24 மார்ச் 2012

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

தடையை மீறி இடிந்தகரைக்கு புறப்பட்ட வைகோ, சீமான் உள்பட 623 பேர் கைதாகி விடுதலை

நெல்லை, மார்ச். 24-
Vaiko, Seeman, PDK leaders arrested - Tamilnadu News Headlines in Tamil

பாளையங்கோட்டையில் இருந்து இடிந்தகரைக்கு, தடையை மீறி புறப்பட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட 623 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அணுஉலை எதிர்ப்பு பேராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 14 பேர் இடிந்தகரை கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

போராட்டகுழுவினருக்கு ஆதரவு தெரிவித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தியும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருக்கும் மக்களிடம் கருத்துகளை கேட்க இடிந்தகரைக்கு புறப்படுவோம். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக கிளர்ந்து எழுந்து பல வடிவங்களில் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.

பின்னர் வைகோ தலைமையில் பல்வேறு அமைப்பு தலைவர்கள் தங்களுடைய அமைப்பு கொடிகளுடன் அணிவகுத்து புறப்பட்டனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஊர்வலமாக இடிந்தகரை செல்ல அனுமதி இல்லை என்று கூறினர். நாங்கள் காரில் செல்கிறோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினார்கள். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கு நின்று கொண்டு இருந்த வைகோ, "நாங்கள் தடையை மீறி இடிந்தகரை செல்கிறோம். நீங்கள் எங்களை கைது செய்யலாம்" என்று கூறினார். பின்னர், அங்கு போலீஸ் வேன்கள், பஸ்கள் வரவழைக்கப்பட்டன.

தடையை மீறி செல்ல முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, 40 பெண்கள் உள்பட 623 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேனில் ஏறும் போது வைகோ, "பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவம், போலீஸ் படைகளை வாபஸ் பெற வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும், கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். நாங்கள் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை பல வழியில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்" என்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள ரோஸ்மகாலிலும், பாளையங்கோட்டையில் உள்ள வீரபாண்டிய மகாலிலும் தங்க வைக்கப்பட்டனர்.

மாலையில், வைகோ உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையை அந்த பகுதி மக்களின் பிரச்சினையாக பார்க்கக் கூடாது. இந்த பிரச்சினை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினையாக பார்க்க வேண்டும்.

தமிழ் ஈழ விரோத அரசான மத்திய அரசு, கிறிஸ்தவ மிஷனரிகளை கொச்சைப்படுத்துகிறது. அங்கு போராட்டம் நடத்தும் மக்களுக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி செய்து வருவதாக மத்திய மந்திரி ஒருவர் சொல்லி வருகிறார்.

போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற பொய் பிரசாரத்தை அந்த மந்திரி தொடர்ந்து கூறி வருகிறார். கடலோர மக்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை போராட்டத்துக்காக கொடுத்து வருகிறார்கள்.

நியாயமான முறையில் போராடிய சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, திருச்சி ஜெயிலில் அடைத்து இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டு உள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

அணுமின் நிலையம் மூடும் வரை தொடர்ந்து போராடுவோம். உதயகுமார் உள்ளிட்ட போராட்டக் குழுவினருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். இவ்வாறு வைகோ பேசினார்.


Site Meter