20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 27 ஏப்ரல் 2012

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு போட்டி இல்லை: தா.பாண்டியன்

சென்னை, ஏப். 27-
CPI not to contest Pudukottai by-election - Tamilnadu News Headlines in Tamil

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடாது என்று தா.பாண்டியன் கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முத்துக்குமரன். இவர் கடந்த 1-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதைதொடர்ந்து புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூன் மாதம் 12-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல், இதைத்தொடர்ந்து நடைபெற்ற திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஏற்கனவே அறிவித்துவிட்டது.

புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற இடம் என்பதால் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில துணை செயலாளர்கள் சி.மகேந்திரின், கோ.பழனிச்சாமி, மற்றும் அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

2011-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்காக நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, அன்று, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை அகற்ற வேண்டும்மென்ற ஒரு பொதுநோக்கத்திற்காக ஒரு வலிமைமிக்க அரசியல் கூட்டணியை அமைக்கவேண்டிய அரசியல் தேவை இருந்தது. அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டுமென்ற நோக்கில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தன்பங்கை ஆற்றியது, வலிமையான கூட்டணி உருவானது.

அதனடிப்படையில் பங்கீடு செய்து கொள்ளப்பட்ட 10 தொகுதிகளில் புதுக்கோட்டையில் போட்டியிட்டு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. சாலை விபத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் உயிரிழந்ததையொட்டி புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பற்றி அ.தி.மு.க.வின் கருத்தறிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடிதம் எழுதியது. அதற்கு இன்றுவரை பதில் வரவில்லை. மாறாக அக்கட்சி தனது வேட்பாளரை அறிவித்து விட்டது.

இதுபற்றி இன்று கூடிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு நிர்வாகக்குழு "இன்றைய அரசியல் சூழ்நிலையில் புதுக்கோட்டை தொகுதிக்காக நடைபெறும் இடைத்தேர்தல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது வேட்பாளரை நிறுத்த தார்மீக உரிமைப் பெற்றிருந்தாலும் 2011-ல் அமைந்த கூட்டணிக்கு தலைமையேற்ற கட்சியே மாறுபட்ட நிலை எடுத்து அறிவித்திருப்பதாலும், இடைத் தேர்தல் நடைமுறை பலவீனங்களை உணர்ந்திருப்பதாலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என" தீர்மானித்துள்ளது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிலை என்ன?

பதில்:- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம்.

கேள்வி:- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் உங்கள் கட்சி போட்டியிட்டால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளாரே?

பதில்:- மாநில நிர்வாக குழுவில் நாங்கள் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம்.

கேள்வி:- கடந்த தேர்தலில் புதுக்கோட்டை தொகுதி நீங்கள் வெற்றி பெற்ற தொகுதியாகும். அப்படியிருந்தும் ஏன் போட்டியிடவில்லை?

பதில்:- அ.தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது 11 இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை. இடைத்தேர்தல்கள் எப்படி நடத்தப்படும் என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.


Site Meter