20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 14 ஏப்ரல் 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தலைவர்கள் வாழ்த்து

சென்னை
Wish you a Happy Tamil New Year 2016 - Tamilnadu News Headlines in Tamil
தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் ரோசைய்யா:
வருங்கால தலைமுறையை காக்கும் வகையில், இயற்கை வளத்தை காக்கவும், பருவ நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை களையவும் உறுதிமொழி எடுத்து கொள்வோம் .இந்த இனிய புத்தாண்டில், தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், வாழ்வு செழிக்கட்டும், நலங்கள் தழைக்கட்டும், வளங்கள் பெருகட்டும், வெற்றிகள் தொடரட்டும், உலக அளவில் இந்தியாவை முதன்மை நாடக்கவும், அமைதி, வளம், ஒற்றுமை தழைக்கவும் புத்தாண்டில் உறுதி எடுப்போம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா:
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்தப் பொன்னாளில் என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
'ஆதிமனிதன் தமிழன் தான் அவன் மொழிந்ததும் செந்தமிழ்தான்' என்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கவிதைக்கேற்ப, உலகிலேயே தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியை பேசும் மூத்த குடிமக்களான  தமிழ்ப்பெரு மக்கள், ஆண்டாண்டு காலமாக சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.  வலிமையும், வளமும் மிக்க தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடரவும், அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம், ஊக்கத்தோடு உழைப்போம், புதிய சாதனைகளை படைப்போம் என மலரும் இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.
இந்த இனிய புத்தாண்டில், தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், வாழ்வு செழிக்கட்டும், நலங்கள் தழைக்கட்டும், வளங்கள் பெருகட்டும், வெற்றிகள் தொடரட்டும் என வாழ்த்தி, எனதருமை தமிழ்ப் பெருமக்கள் அனை வருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
இன்று சித்திரை திங்கள் முதல் நாளில் துன்முகி தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் தே.மு.தி.க. சார்பில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் தமிழக மக்கள் தாங்கள் பட்ட துன்ப துயரங்களுக்கு காரணமான தீய சக்திகளை கண்டறிந்து, அவற்றை புறந்தள்ளி தமிழக மக்கள் அனைவரும் நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்வதற்கு, சுயநலமில்லாத பொதுநலத்தோடு மக்களுக்கு உழைக்கிற நல்லவர்களை கண்டறிந்து நாட்டை ஒப்படைக்க வேண்டும். பிறக்கும் புத்தாண்டில் எல்லா மக்களும், எல்லா வளங்களும் பெற்று வாழ தே.மு.தி.க. சார்பில் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:
துன்முகி ஆண்டு தொடங்கி சித்திரைத் திங்கள் பிறந்து புத்தாண்டு மலரும் நாள். இந்நாள் தமிழ் மக்கள் தங்கள் இல்லங்கள் தோறும், நல்லமுது படைத்து, உற்றார், உறவினர், நட்போடு உண்டு, பிறருக்கு பகிர்ந்து கொடுத்து மகிழும் நாள் ஆளும். தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் என் இதய பூர்வமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை:
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தாமரை மலர்ந்து மணம் வீசும் புத்தாண்டாக அமையவுள்ளது. தமிழ் புத்தாண்டில் தமிழர்கள் பசியாறி, மகிழ்ச்சியுடன் தொழில் தொடங்கி, செல்வச் செழிப்போடு வாழவகை செய்யும் வழி பிறக்கவுள்ளது.  இந்த சித்திரை, தமிழகமாம் இத்தரையில் அனைத்து நலன்களையும், வளங்களையும் கொண்டு வர தமிழகத்தில் தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும் என்று எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன்:
துர்முகி ஆண்டு பிறக்கின்ற இந்த நல்ல நாளில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை தருகின்ற தாமரையின் ஆட்சியை தமிழகம் காண அனைத்து மக்களும் உறுதியேற்போம். இந்தியாவில் தமிழகம் முதல்நிலை மாநிலமாக மாற துர்முகி ஆண்டு வழிகாட்டட்டும்.

Site Meter