20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 7 மே 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

2016 தேர்தல் - தமிழக மக்களுக்கு இலவசங்கள் எதுவும் தேவையில்லை - சீமான்

திருவண்ணாமலை
Tamil Nadu election 2016: Naam Tamilar Seeman - Tamilnadu News Headlines in Tamil

திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் கமலக்கண்ணன், கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்பாளர் ரமேஷ்பாபு, கலசப்பாக்கம் தொகுதி வேட்பாளர் பாலாஜி, செங்கம் தொகுதி வேட்பாளர் வெண்ணிலா ஆகியோரை அறிமுகப்படுத்தி சீமான் பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, "தாய் மொழியாம் தமிழை காப்பாற்ற, அரசாங்கம் இல்லை. தமிழனை காப்பாற்றும் அரசியல் இல்லை. தமிழனை வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் அரசியல் உள்ளது. ஈழத் தமிழர்கள் படுகொலையை கண்டிக்க தலைவர்கள் இல்லை. தமிழகத்தில் 36 ஆறுகளில் இருந்து மணல் சுரண்டப்பட்டுள்ளன. மணல் கடத்தலுக்கு எதிராகப் போராடினால் கைது செய்கிறார்கள். மீத்தேன் திட்டம், கூடங்குளம் திட்டம், கெயில் திட்டத்தை பிற மாநிலங்களில் கொண்டு வராதது ஏன்? தமிழகத்தை ஆள்பவர்கள் இடைத்தரகர்களாக இருப்பதால், கமிஷன் வாங்கிக்கொண்டு அனுமதிக்கின்றனர். மீத்தேன் திட்டத்துக்கு எதிராக நாட்டை ஆள துடிப்பவர்கள் யாரும் போராடவில்லை" என்றார்.

"தமிழக மக்களுக்கு இலவசங்கள் எதுவும் தேவையில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்கிறீர்கள். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது அதையெல்லாம் ஏன் செய்யவில்லை. ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எந்த ஆட்சியும் ஒரு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் கொத்துக், கொத்தாக கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா ஒரு எதிர்ப்புகூட தெரிவிக்கவில்லை."

"தமிழர்களின் உயிர் அரசியலாகவில்லை. தமிழர்களின் வாக்கு மட்டுமே அரசியலாக்கப்படுகிறது. தமிழக மக்களுக்கு இலவசங்கள் எதுவும் தேவையில்லை. இலவச கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற சம்பளத்தை மட்டும் கொடுங்கள். இலவசங்களைக் கொடுத்து, கொடுத்து மக்களை கையேந்த வைக்காதீர்கள்" என்றார் சீமான்.

பின்னர் அவர், செய்தி யாளர்களிடம் கூறும்போது, "அதிமுகவின் தேர்தல் அறிக்கை நேர்மையாக இருந்திருந்தால், தனது முதல் பிரச்சாரத்துக்கு முன்பே ஜெயலலிதா வெளியிட்டு இருக்கவேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்படும் தோல்வி பயத்தை ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை காட்டுகின்றன. அடுத்த வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டு இருப்பது அவர்களது அச்சத்தையே காட்டுகின்றன. ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறும் ஜெயலலிதா, தேர்தலுக்கு முன்பே ஆட்சியில் இருக்கும்போது விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டியதானே? ஏன் செய்யவில்லை. அலைபேசி திட்டம் உட்பட இலவசத் திட்டங்களை மக்கள் கேட்டார்களா? தடையில்லாத மின்சாரத்தைத் தாருங்கள், பிறகு இலவச மின்சாரத்தை தரலாம்" என்றார்.


Site Meter