20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 24 மே 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

பதவியேற்றதும் ஜெயலலிதா முதல் உத்தரவு: 100 யூனிட் இலவச மின்சாரம், 500 மதுக்கடைகள் மூடல்

சென்னை

முதல்வராக ஜெயலலிதா ஆறாவது முறையாக, சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில், பதவியேற்றதும் தலைமைச் செயலகத்துக்கு சென்று, ஐந்து முக்கிய திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர காலக் கடன், நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து கடந்த மார்ச் 31 வரையில் பெறப்பட்ட அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதனால், அரசுக்கு ரூ.5,780 கோடி செலவு ஏற்படுமென தெரிவித்துள்ளது.

இப்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட் மின்சாரம் கட்டணம் இல்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில், அதற்கான கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டார். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,607 கோடி மின் வாரியத்துக்கு மானியமாக அரசு வழங்கும். இந்தச் சலுகை மே 23-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரமும், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரம் நிதியுதவிடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இப்போது தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி அனைத்து திருமண நிதி உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்துக்கென அளிக்கப்படும் தங்கம் 4 கிராமில் இருந்து ஒரு பவுன் (8 கிராம்) என உயர்த்தி கொடுக்கப்படும். இதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 200 யூனிட் இலவச மின்சாரம் இனி 750 யூனிட்டுகளாக வழங்கப்படுவதற்கான உத்தரவும், 500 அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடும் உத்தரவிலும் ஜெயலலிதா கையெழுத்திட்டிருக்கிறார்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 வரை செயல்பட்டு வந்தன. செவ்வாய்க்கிழமை முதல் (மே 24, 2016) சில்லறை மதுபானக் கடைகள்-பார்கள் அனைத்தும் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மேலும், 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும். இதற்கான உத்தரவுகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.


Site Meter