22 ஜுலை, 2017. சனிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 2 ஜுலை 2004

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

தமிழ்நாடு: முத்திரைத்தாள் மோசடி டி.ஐ.ஜி. முகமது அலி கைது

சென்னை, ஜூலை. 2-
Tamilnadu News Headlines in Tamil

போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

ரூ.30 ஆயிரம் கோடி வழக்கு

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.30 ஆயிரம் கோடி போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, தமிழகம், குஜராத் உள்பட 14 மாநிலங்களில் இந்த முத்திரைத்தாள் மோசடி விரிந்து பரந்துள்ளது. சி.பி.ஐ. இணை இயக்குனர் அர்ச்சனா ராமசுந்தரம் தலைமையில் 50 சி.பி.ஐ. தனிப்படையினர் இந்தவழக்கை விசாரித்து வருகிறார்கள்.

தெல்கி கைது

முத்திரைத்தாள் மோசடி வழக்கில் மூலாதாரமாக விளங்கும் முக்கிய கதாநாயகன் அப்துல் கரீம் தெல்கி கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. பிடியில் உள்ளான். அவனது உதவியாளர் மற்றும் கார் டிரைவரும் கைதாகி உள்ளனர்.

தெல்கிக்கு உறுதுணையாக இருந்ததாக உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகள் மீதும் சி.பி.ஐ.யின் கிடுக்கிப்பிடி இறுகியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகளும், ஆந்திராவில் ஒரு போலீஸ் அதிகாரியும் ஏற்கனவே கைதாகி இருக்கிறார்கள்.

தமிழகத்தில்

தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் முதன் முதலில் நடவடிக்கை எடுத்தார்கள். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சித்த வைத்திய கோடீஸ்வர டாக்டர் நிஜாமுதீன் அப்போது கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் 3 பேரும் கைதானார்கள்.

இப்போது சி.பி.ஐ. விசாரணையில் தெல்கியின் முக்கிய கூட்டாளிகளில் டாக்டர் நிஜாமுதீனும் ஒருவர் என்று தெரிய வந்தது. தமிழகத்தில் நடந்த போலி முத்திரைத்தாள் சப்ளையில் டாக்டர் நிஜாமுதீன் தான் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார். டாக்டர் நிஜாமுதீனை சி.பி.ஐ. போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்திற்கு போலி முத்திரைத்தாள் சப்ளை செய்ததாக தெல்கியின் கூட்டாளிகள் இருவரும் ஏற்கனவே கைதாகி இருக்கிறார்கள்.

முகமது அலி மீது புகார்

போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் 2002-ம் ஆண்டில் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், முக்கிய குற்றவாளி டாக்டர் நிஜாமுதீனிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.

குறிப்பாக சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. முகமது அலி மீதும் புகார் எழுந்தது. இந்த புகார்கள் பற்றியும் சி.பி.ஐ. போலீசார் விசாரித்தார்கள்.

சி.பி.சி.ஐ.டி.யில் ஏற்கனவே பணிபுரிந்த சென்னை வரதட்சணை ஒழிப்பு உதவி கமிஷனர் சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், தற்போது சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டராகஉள்ள தில்லை நடராஜன் உள்பட 4 போலீஸ் அதிகாரிகளை கடந்த வாரம் சி.பி.ஐ. போலீசார் டெல்லி வரவழைத்து விசாரித்தனர்.

போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக 2002-ம் ஆண்டில் எடுத்த நடவடிக்கை குறித்து இவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அதிரடி நடவடிக்கை

இந்த விசாரணையின் எதி ரொலியாக சி.பி.ஐ.யின் நடவடிக்கை தமிழகத்தின் மீது தீவிரமாகி உள்ளது.

சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. முகமது அலி, சென்னை வரதட்சணை ஒழிப்பு உதவி கமிஷனர் சங்கர் ஆகியோர் மீது நேற்று சி.பி.ஐ. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

வீட்டில் சோதனை

சி.பி.ஐ.யின் டெல்லி பிரிவு அதிகாரிகள் ஒரு கூடுதல் சூப்பிரண்டு தலைமையில் ஏற்கனவே சென்னையில் முகாமிட்டு விசாரித்து வருகிறார்கள். சென்னை அடையாறு கிரீன்வேஸ் ரோட்டில் இவர்களுக்கு தனி அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

நேற்று டெல்லி சி.பி.ஐ. பிரிவு அதிகாரிகள் தமிழக சி.பி.ஐ. அதிகாரிகளோடு இணைந்து, டி.ஐ.ஜி. முகமது அலி வீடு, அலுவலகம், உதவி கமிஷனர் சங்கரின் வீடு மற்றும் அவரது அலுவலகம் உள்பட மொத்தம் 4 இடங்களில் அதிரடியாக ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது.

சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள ``டவர் பிளாக்" அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் ஏ-10 எண் வீட்டில் முகமது அலி வசிக்கிறார். அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் வசிக்கும் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ``டவர் பிளாக்" ஆகும்.

டி.ஐ.ஜி. முகமது அலி வீட்டுக்கு சி.பி.ஐ.யின் 10 அதிகாரிகள் சென்றனர். ஒரு பெண் அதிகாரியும் அதில் இருந்தார்.

வாக்கிங் சென்றிருந்தார்

சி.பி.ஐ. அதிகாரிகள் சென்ற போது காலை 6.45 மணி இருக்கும். டி.ஐ.ஜி. முகமது அலி ``வாக்கிங்" சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தார். காலை 7 மணி அளவில் முகமது அலி வீடு திரும்பினார். உடனே அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ``கோர்ட்டின் வாரண்டை" காண்பித்து ``உங்கள் வீட்டை சோதனை போட வந்திருக்கிறோம்" என்று கூறினார்கள்.

``தாராளமாக சோதனை போடுங்கள்" என்று முகமது அலியும் சிரித்துக் கொண்டே கூறினார். முகமது அலி குளித்து விட்டு வந்தவுடன் 7.30 மணிக்கு சோதனை தொடங்கியது. முகமது அலி வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் தீவிர சோதனை நடத்தினார்கள்.

விசாரணை

ஒருபக்கம் சோதனை நடக்க, இன்னொரு பக்கம் முகமது அலியிடம் தனியாக விசாரணை நடந்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் காலை டிபன் கூட வெளியிலிருந்து வாங்கி வந்து சாப்பிட்டனர்.

தகவல் கிடைத்து காலை 8 மணியிலிருந்து முகமது அலி வீட்டு முன்பு பத்திரிகை நிருபர்களும், போட்டோகிராபர்களும் குவிந்தனர். ஆனால் முகமது அலியின் வீட்டுக் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. தகவல் தெரிந்து முகமது அலியின் உறவினர்களும் நிறைய பேர் கூடி விட்டனர்.

வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் மதிய உணவு கூட சாப்பிடாமல், டீ, பிஸ்கட் மட்டும் வெளியிலிருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு சோதனையை தொடர்ந்தனர்.

சமையல்காரர் சொன்ன தகவல்

மதியம் 1.30 மணி அளவில் முகமது அலியின் வீட்டுக்குள்ளி ருந்து சமையல்காரர் வெளியில் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறும்போது ``முகமது அலி அய்யாவிடம் தனியாக விசாரிக்கிறார்கள். அறைகளில் சோதனையும் நடக்கிறது" என்று குறிப்பிட்டார்.

9 மணி நேரம்

சரியாக மாலை 4.30 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையை முடித்துக்கொண்டு வெளியில் வந்தார்கள்.

அவர்கள் டி.ஐ.ஜி.முகமது அலியையும் காரில் ஏற்றி அழைத்துச் சென்றார்கள். முகமது அலி சென்னை அடையாறு கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முகமது அலி வீட்டில் சுமார் 9 மணி நேரம் சி.பி.ஐ. போலீசார் தொடர் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி கமிஷனர் சங்கர்

உதவி கமிஷனர் சங்கரின் வீடு சென்னை அரும்பாக்கம் அமராவதி நகர் 3-வது தெருவில் உள்ளது. அங்கும் காலை 7 மணியிலிருந்து 11 மணிவரை சோதனை போட்டனர்.

சங்கரும் விசாரணைக்காக, சி.பி.ஐ. அலுவலகம் கொண்டு போகப்பட்டார்.

எல்.ஐ.சி. அதிகாரி

தமிழகத்தில் நடந்த முத்திரைத்தாள் மோசடி வழக்கில், மதுரையைச் சேர்ந்த ராமசாமி சாது என்ற எல்.ஐ.சி. அதிகாரி முக்கிய குற்றவாளி என்று தெரிய வந்தது. ராமசாமி சாதுவையும் நேற்று சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து விசாரித்தார்கள்.

இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் முத்திரைத் தாள்களை தெல்கியிடம் இருந்து போலியாக வாங்கி தமிழகத்தில் விநியோகம்செய்ய உதவியாக இருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது அறிவிப்பு

டி.ஐ.ஜி. முகமது அலி, உதவி கமிஷனர் சங்கர், எல்.ஐ.சி. அதிகாரி ராமசாமி சாது ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் மாலை 6 மணி அளவில் சி.பி.ஐ. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி கொண்டு செல்லப்படுவார்

கைதான டி.ஐ.ஜி. முகமது அலி மேல் விசாரணைக்காக கோர்ட்டு அனுமதியுடன் விமானத்தில் டெல்லிகொண்டு செல்லப்படலாம் என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட் டது.

தமிழகத்தில் ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் ஊழல் வழக்கில் உயர் போலீஸ் அதிகாரிகள் அரிஹரனே, வீரராகவன் ஆகியோர் கைதாகி விசாரணையை சந்தித்தார்கள். இப்போது முத்திரைத்தாள் மோசடி வழக்கில் டி.ஐ.ஜி. முகமது அலியும் கைதாகி இருக்கிறார்.

டி.ஐ.ஜி. முகமது அலி கைதான சம்பவம் தமிழக போலீஸ் வட்டாரத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்ததில் டி.ஐ.ஜி. முகமது அலி முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.பி.ஐ. டி.ஐ.ஜி. பேட்டி

முகமது அலி கைது தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. டி.ஐ.ஜி. அருண்குமார் நேற்று இரவு நிருபர்களிடம் கூறும்போது, ``சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில்தான் முத்திரைத்தாள் மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கிறது. தமிழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதலில் போலி முத்திரைத்தாள் வழக்கை சரியாக விசாரிக்காததால்தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோதனையில் சிக்கிய ஆவணங்கள் பற்றி கோர்ட்டில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.


Site Meter