முதல் பக்கம் » கவிதை » கவிதை தொகுப்பு
கவிதை தொகுப்பு -

Tamil Poem - Tamil Kavithaigal

உழவுத் தொழில் (தந்தை மகனுக்கு...)

ஆ.திருநாவுக்கரசன்

வேளாண்மை,
புராதனத் தொழில் - இன்று
புறக்கணிக்கப்பட்ட தொழில்....

காய்ந்து வெடித்த
வயல் வெளிகளும் - அதனால்
அழுது அழுது
ஓய்ந்து துடித்த
கயல் விழிகளுமாய்
முப்போகம் விளைந்த பூமி - இனி
எப்போது விளையும் என்ற
ஏக்கப் பெருமூச்சுமாய்
உழவர்களின் வாழ்க்கை!

வேளாண்மை செய்பவனை
மேலாண்மை செய்பவன்
மிதிக்கிறான்,
மேலாண்மை செய்பவனை
வேளாண்மை செய்பவன்
துதிக்கிறான்.

பழக்கப்பட்டவரிடம்
சோகத்தைச் சொல்லி அழுவதை
வழக்கமாகக் கொண்டவர் நாம்!

பாவம் உழவன்
மண்ணோடு பாதி நாள்
மாடுகளோடு மீதி நாள்
சோகத்தை யாரிடமாவது
சொல்லி அழலாமென்றால்
உறவென்று யாரும்
ஒட்டுவதில்லை.

உழுது முடித்த சனம்
அழுது முடிக்கும் முன்னே
பொழுது முடிந்துவிடும்
நாளை என்ற நம்பிக்கையில்
நாளைத் தள்ளும் நாடகமே
நடைமுறை!

வேரோடு வேராக
வளரும் பயிருக்குள்
ஒன்றி விடும் உழவர்கள்.....

வயிறு ஒட்டி
சோகம் அப்பி
தேகம் மெலிந்த
இவர்கள் தான் - இந்த
தேசத்தின் வேர்களாம்?

நீர்வீழ்ச்சியை இரசிக்கலாம்
வேருக்கு வீழ்ச்சியென்றால்
எப்படியடா ரசிப்பது?

கார் இல்லையென்றால்
கால்கள் இருக்கின்றன;
விமானம் இல்லையென்றால்
அவமானம் இல்லை.

தானியம் இல்லையென்றால்
சூனியம் தானடா!

இருந்தாலும் இங்கே
கழனிகள் எல்லாம்
மதிப்பிழந்தாச்சு;
கணினிகள் மட்டும்
மதிப்புப் பெற்றாச்சு....

குறுக்கு வலிக்க
உழைத்தக் கூட்டம்
குடிசையை விட்டு உயரவில்லை;
குறுக்கு வழியில்
பிழைத்தக் கூட்டம்
கோடிகள் சேர்க்க அயரவில்லை.

பெற்ற சம்பளம் போதவில்லை
என்பதோடு மட்டுமே
நின்றுப்போனது
கற்றறிந்தோர் போராட்டம்.

விவசாயக் கூலிகளின்
வேதனைப் பற்றியும்
விவசாயிகள் வேதனை பற்றியும்
அவரவர் அன்றி
வேறு எவரும்
கவலை கொள்ளார்.

கலப்பைகள்கூடக்
கவலை கொள்ளும் - இவர்
களைப்பறியா உழைப்பு கண்டு!

கள்ளிச் செடியும்
கலவரம் கொள்ளும் - அந்தக்
காய்ந்த நிலப்பரப்பைக்
காண நேர்ந்தால்
அதிலும்
நம்பிக்கை விதைத்து
கனிகள் விளைவித்து
உயிர் வாழ்வை
உறுதி செய்தோரின்
உயிர் வாழ்க்கை
உத்திரவாதமின்றி
ஊசலாட்டத்தில்.....

கலப்பை மாறி "டிராக்டர்" ஆச்சு
கமலை மாறி "மோட்டார்" ஆச்சு
விதைகள் மாறி "வீரியம்" ஆச்சு
விவசாயிகள் வாழ்க்கை மட்டும்
வீழ்ந்திடல் ஆச்சு

விளைபொருள் கூட
கூர்த் தீட்டிய
கொலைக் கருவியாய்
விவசாய இறக்குமதியில் இன்று?

இத்தனை சோகமும்
பார்த்த பின்னும்
காலம் மறந்து
கண்மூடி வாழ்ந்து
மரித்த பின்
மண்மூடிப் போகவா
வாழ்க்கை?

கவிதை தொகுப்பு

Site Meter