முதல் பக்கம் » கவிதை » கவிதை தொகுப்பு
கவிதை தொகுப்பு -

Tamil Poem - Tamil Kavithaigal

ஞானமடா நீயெனக்கு (17)

வித்யாசாகர்

இருட்டில் தெருவின் ஓரம் நின்று
வாசலில் போகும் வரும் வண்டிகளின்
வண்ண விளக்குகளை உனக்குக் காட்டினேன்

அவை சென்று தெருமுனை
திரும்பும்வரை நீ
கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாய்

நானும்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கையில்
ஒரு வண்டி உன்னைக் கடந்துப் போய்
தெருமுனை எட்டியது -

நீ இருட்டில் தெரியுமந்த
வண்டிவிளக்கின் வண்ணத்தில்
ரசனை பூரித்து
லேசாக சிரித்தாய்,

உன்னையே பார்த்துக் கொண்டிருந்ததில்
எனை மறந்து நானும் உன் சிரிப்பில் கரைந்துக் கொண்டாலும்
மனசு என்னவோ இன்னொரு வண்டி வருமாயென
காத்திருக்கவே செய்தது!

நீ பிறந்து
ஒன்பது மாதமே ஆகிறது..

உனக்குப் பாவாடை சட்டை
போட்டதாய் சொன்னார்கள்,
 
ஓடோடி வந்து பார்த்தேன்
நீ எனைப் பார்த்ததும் துள்ளிக் கொண்டு
ஓடி வந்தாய்

எனக்கு பாவாடை சட்டையில் நீ
வளர்ந்தவளாகத் தெரிந்தாய்,
 
கனவுகள் வருடங்கள் கடந்து
பூக்கிறது; இடையே
பயத்தில் சில இதழ்கள்
காலத்தின் கட்டாயம் கருதி
கண்ணீ­ராய் உதிர்கிறது..

உன் சிரிப்பு -
என்றுமே எனக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கும்
வரம் தான்

வரம் பெற எனக்கு
வேண்டியதெல்லாம் - ஒரு குச்சி மிட்டாயோ
கை விரல் அப்பளமோ
குடிக்கும் தேநீரில் ஒரு சொட்டோ
மேலே தூக்கி உன் கன்னத்தில் கொடுக்கும்
ஒரு முத்தமோ மட்டுமே!!

அது என்னடி
சிரிப்பது -
சிட்டுக்குருவி வாய்திறந்ததுபோல்

இருந்தாலும் அந்த உன்
சிரிப்பில் தான் திறக்கிறது
எங்களுக்கான வசந்தத்தின் கதவும்!!

உன்னை தூக்கி மடியில்
வைத்துக் கொள்வேன்,

சிலநேரம்
பசி வந்துவிட்டால்
உன் அம்மா வந்து வாங்குவதற்குள் வீல் என்று
கத்துவாய், பூச்சிப் போல நெளிவாய் நீ

உன்னை எண்ணப் பண்ணுகிறேன் பாரென்று
கோபத்தில் உனைப் பார்ப்பேன்
திட்டக் கூட திட்டுவேன்

நான் திட்டுவதை நீ
உன்னிடம் நான் வேறு ஏதோ பேசுவதாய் எண்ணி
அதற்கும் சிரிப்பாய்

உன் சிரிப்பைக் கண்டு
நானும் சிரிக்க - முத்தங்களே உனக்கு
மீண்டும் பரிசாகும்!!

அண்ணனைத் தூக்கி
ஆரி ராரி ராரி ராரோ என்று சொல்லி
கொஞ்சம் ஆட்டினால் போதும்
உடனேத் தூங்கிப் போவான்

உன்னிடம் அந்த ஆரிராரோ எல்லாம்
செல்லுபடியாவதில்லை,

இரண்டு கையிலும் உன்னை ஏந்தி
உன்னையே பார்ப்பேன் நான்

நானா பார்க்க பார்க்க நீ
சிரிப்பாய் சிரிப்பாய்
அப்படிச் சிரிப்பாய்

நானும் சிரித்துக் கொண்டே உன்
கன்னத்தில் முத்தமிட்டு உனைக் கொஞ்சுவேன்,

நீயும் என் முகத்தை கட்டிக் கொண்டு
உவா உவா என்று உன் கன்னத்தை வைத்துக்
கொஞ்சுவாய்
கன்னத்தோடு கன்னம் வைத்து உரசுவாய்
அப்படியே லேசாக ஆராரோ பாடி ஆட்டினால்
என் மனநிலையோடு ஒன்றிப் போய்
சற்று நேரத்தில் உறங்கியும் போவாய்

நீ உறங்கிய பின்
உன்னையே பார்ப்பேன் நான்

வைரமுத்து சொன்ன
பிஞ்சுப் பிரபஞ்சம் என் கையில் உறங்குவதாய் ஒரு
கர்வம் வரும் எனக்கு;

அந்த கர்வத்தோடு சேர்த்து
என் கர்வத்தையும் - நீ பெண் என்பதால்
உதறி விடுவேன்!!

பொதுவாக நான் படுக்கவே
நடுநிசி கழியும்

அப்போது பார்த்து நீ
வீல் என்று கத்துவாய்

என்னாயிற்றோ என்று பயந்து
விளக்கிட்டுப் பார்த்தால் நீ
கண்ணைக்கூடத் திறக்காமல்
வேறு எதையோ கண்டு அலறுவது போல்
அலறுவாய்

நடு இரவின் நிசப்தத்தில்
எங்கு அக்கம்பக்கத்தாருக்கு தொந்தரவாக
இருக்குமோ என்று வேறு பதறுவோம்
நாங்களிருவரும்

நீயோ எத்தனை சமாதானம் செய்தாலும்
அடங்குவதேயில்லை
கன்னத்தில் மாறி மாறி நான்கு வைக்கலாமா
என்று கோபம் வரும்

கோபத்தில் ஏதேனும் கடிந்துக் கொண்டால்
அதற்கும் சேர்த்து இன்னும் வேகமாக கத்துவாய்
வேறு உன்னை என்ன செய்திட முடியும் - அத்தனைக்
கோபத்தையும் அடக்கிக் கொண்டு,

கண்ணே மணியே செல்லமே என்று கொஞ்சி
வாசலுக்குக் கொண்டு போய்
நிலா காட்டி
விளக்கு காட்டி
சாமியிடம் வேண்டி திருநீரிட்டு
ஆரிராரோ பாடி - எப்படியோ ஒரு கணத்தில்
உறங்கிப் போவாய்

தூங்கியும் தூங்காமலும்
அன்றைய இரவு முடிந்து காலை எழுந்தால்
கைமீது பூ மாதிரி படுத்திருப்பாய்,

முகத்தைப் பார்த்ததும் ஐயோ பாவம் குழந்தை
எப்படியெல்லாம் இரவு
கோபப் பட்டோமேயென்று எண்ணுகையில்
உள்ளே உன் உறக்கத்தைக் கலைக்காமல்
மானசீகமாய் ஒரு மன்னிப்புச் சுரக்கும்,

நீ சடாரென கண் திறந்து
எதிரே என்னைக் கண்டதும் சிரிப்பாய்

நான் கேட்ட மன்னிப்பு உனக்குத்
தெரிந்திருக்காது -
என் சிரிப்பு மட்டுமே தெரியுமேயென்று எண்ணி
நானும் சிரித்துக் கொள்வேன்

இரவெல்லாம் தூங்காத தூக்கம்
பகலெல்லாம் இப்படி உனக்காக -
கவிதையாகப் பூத்திருக்கும்,
 
காலத்தின் கைகளில் எல்லாம்
கவிதைகளில் புதைந்த
நினைவுகளாகவே பதிந்திருக்கும்!!

கவிதை தொகுப்பு

Site Meter