முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

பாட்டி!

அக்னிபுத்ரன்

பார்ப்பதற்கு ஒரு குழந்தை போலவே இருப்பாள்
பேசும்போதும் எங்களை
விட்டுக் கொடுக்க மாட்டாள்
ஏதாவது கெடைக்குமா என்று கேட்டால் போதும்
இந்தாடா என்று ஐம்பதும் நூறும் திணிப்பாள்

எங்களுடைய பெரும்பான்மையான இரவுகள்
அவளுடைய கதைகளுடன் முடிந்தன.
பள்ளிகாலங்களில் அவள் தீட்டிய ஓவியங்கள்
எங்களின் பவுடர் தீட்டப்பட்ட முகங்கள்

என்றோ ஒரு நாள் வாத்தியார் அடித்ததற்கு
அவரின் வீட்டு வாசலுக்கு
என்னை இழுத்துச் சென்று
வீதியே பார்க்கும் வண்ணம் கத்தியிருக்கிறாள்

அம்மா அடித்தாலும் அப்பா அடித்தாலும்
இவளிருக்கிறாள் என்ற எண்ணம் தோன்றும்
ஏனோ இவள் முகம் இன்றும் என்னுடன் வரும்
எனது பள்ளியை கடக்கும் போது

சென்ற முறை கிராமத்திற்கு சென்றிருந்தபோது
கவனித்தேன், அவளை யாரும்
கவனிக்கவில்லை என்பதை
தோல் போர்த்திய எலும்பாகத் தெரிந்தாள்
என் கண்கள் பனிப்பதும் தெரியவில்லை அவளுக்கு

கிளம்பும் முன் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை
எடுத்து அவள் கையில் திணித்தேன்...
எதுக்குடா... நீ வெச்சிக்கோ
என்று கொடுத்துவிட்டாள்...
என்னுடன் வா என்றதற்கும்,
தாத்தா இருந்த வீடு என்றாள்.

அதன் பிறகு இரண்டாண்டுகள்,
இன்றுதான் செல்கின்றேன்
நேற்றிரவு அவள் போய் விட்டதாக
சேதி வந்திருந்தது
வயதான உடம்பு, நெடுநேரம் இருக்கக் கூடாதுதென்று
நேற்றிரவே எடுத்து விட்டதாகச் சொன்னார்கள்

மாலை ஒன்றை சாத்திவிட்டு
கண்கள் துடைக்கும் போது
படத்தில் அவளை மறுபடி பார்த்தேன்
அதிலிருந்துகொண்டும் என்னை
வாஞ்சையாகவே பார்த்தாள் என் பாட்டி.

புதுக் கவிதை

Site Meter