முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

கடற்கரய் கவிதைகள்

சிவக்குமார்
நகைச்சுவை திங்கள்

பெட்டியிலிருந்து வந்து விழும் இக்கிழமையை
நினைவில் இருந்தி குதூகலிக்கிறார்கள் குழந்தைகள்.
வழக்கமான பெயர்களில் புளிப்பேறிப் போன குழந்தைகளுக்கு

புது உச்சரிப்பில் ஏதோ பெருமிதம் மாட்டுகிறது.
மெதுமெதுவாய் அவர்கள் உச்சரிக்கும் கிழமையால்
உதட்டில் நீலம் பாரித்துக் கொண்டே வருகிறது.
அவர்கள் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

காதல் செவ்வாய்

காதலின் அர்த்தம் புரியாத குழந்தைகளுக்கு
காதலிக்க பழக்கித் தருகிறது பெட்டி.
சரசம் குழையும் உரையாடல்களைக் கண்டு
பால் பேதம் நுகரத் தொடங்கினார்கள் குழந்தைகள்.
"ஆதலால் காதல் செய்வீர்" என்ற
வசன முழுக்கத்தைக் கேட்டு நீந்திக் குதித்தான் சிறுவன்.
காதலின் ரசாயன மாற்றத்தை பிள்ளைகள்
லேசில் கற்றுத் தேர்கிறார்களே எப்படி?

காவிய புதன்

வரலாற்றின் பக்கங்களை
புரட்ட மறந்திட்ட தலைமுறைக்கு உகத்தான நாளாய்
கவிழ்கிறது வீடெங்கும் கிழமை.
வீட்டின் நடு அறையில் காவிய நிலவு எழுப்பும் கருகல்
நெடியை ஒவ்வாமையாக்கி
கிடுகிடுவென்று திருப்புகிறார்கள் சேனலை.
மூன்று வயதில்

அதிரடி வியாழன்

மறவர் தீரத்தை
பாடப்புத்தகங்களின் பக்கங்களில்
வாசிக்கப் பழகிய நம் குழந்தைகளுக்கு
குரூரத்தின் நெடிய உச்சியிலிருந்து
சண்டை கொள்ளவும்,
யுத்தம் ரசிக்கவும் பழக்கித் தருகிறது பெட்டி.
அன்பின் தழைகள்
பச்சையம் அற்று
சருகாகிய மன பூமியில் அறவே
பாலையாக்கும் முறைகளைச்
சுளுவாக்கி முன்னேறுகிறார்கள் குழந்தைகள்.
நம் வருங்காலத்தின் எதிரிகளை
சுலபத்தில் உண்டாக்கி வருகிறோம்
நம் வீடுகளிலிருந்தே!

சூப்பர் ஹிட் வெள்ளி

எதையும் திரைப்படத்திலிருந்தே தொடங்கும் வாழ்நாள்
கலாச்சாரம் நம் சந்ததிக்குச் சொந்தமாகிறது.
பாடத்திட்டங்களைத் தவறவிட்ட பிள்ளைகள்,
திரை நாயகர்களின் துணுக்குகளைப்
புசித்து யானையென பெருக்குகிறார்கள் உடலை.
போஸ்டர்கள் தின்று மலம் கழிக்கும் சந்ததி வளரும் நாளில்,
விளை நிலங்கள் பாழ் வெளியாகி தொலையக்கூடும்.

சனி - ஞாயிறு

புது வார்த்தைகளால் வசிகரிக்க முடியாத இவ்விரு
கிழமைகளும் விளம்பரதாரர்களுக்காகக் காத்திருக்க
செய்கின்றன.
நாள் முழுக்க உழைத்து உழைத்து
சூம்பிப்போன நம்முடன் ஸ்நேகத்துடன் கைகுலுக்கிப்
பழக, வீட்டுக் கூரையைப் பிரித்துக் கொண்டு
உள் நுழைகிறார்கள் சேட்டி லைட்
பெருமுதலாளிகள்.
திரைகளில் ஒளிரத் துவங்குகிறது.
புது வீடு....
புது காரு....
புது சம்சாரம்
கலக்குற சந்ரு..

புதுக் கவிதை

Site Meter