முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

ஒற்றைக் குளம்

சா. இலாகுபாரதி

இராத்திரி முழுக்க
நிலாவையும்
நட்சத்திரங்களையும்
கழுவிக் கழுவி
சோர்ந்து போயிருக்கும்.

பின் ஓய்வில்லாது
கோழி கூவியதில்
வரத் தொடங்கியிருப்பர்
கால் முக்கிப் போகிறவர்கள்.
இருளையொத்த
மலையாய் வரும் எருமைகள்.

தொடர்ந்து
காட்டிலும் மேட்டிலும்
ஏறி இறங்குகிறவர்கள்
தாகத்தோடு
கை நனைத்து
மொண்டு உறிஞ்சுவார்கள்.

வருகையின் நீட்சியில்
சேவேரிய அழுக்குகளின்
முடிச்சுகளை அவிழ்த்துவிடுபவர்கள்
கூடியிருப்பர்.

மாலையில்
பாறைகளின் முனையிலிருந்து
எம்பியெம்பி குதிப்பவர்கள்.
கத்துக்குட்டி சாகசமாய்
நீச்சல் பழகும் சிறுவர்.

யாரும் அற்றுப்போனால்
தனிமையின் சஞ்சாரத்தில்...

புதுக் கவிதை

Site Meter