எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த தீபாவளிக்கு குறைந்த அளவிலேயே படங்கள் வெளியாகும் நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி திருநாளில் பத்துப் படங்களாவது வெளிவரும் வழக்கத்தில் இருந்து வந்தது. இந்தப் போட்டியில் ஒரு சில சின்னப் படங்களும் தைரியமாக களத்தில் குதிக்கும். கடந்த சில வருடங்களாகவே இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு ஆறு அல்லது ஏழு படங்களே வெளியாகி வருகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இந்த வருடம் அரை டஜன் படங்கள்கூட வெளியாகாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ராஜூசுந்தரம் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ஏகன், ஹரி இயக்கத்தில் பரத் நடித்துள்ள சேவல், கௌதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள வாரணம் ஆயிரம், மாதவனின் குரு என் ஆளு ஆகிய நான்கு படங்களே இந்த தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கும் படங்கள். அதிலும் வாரணம் ஆயிரம் படம் தீபாவளிக்கு ஒருவாரம் கழித்துதான் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் பார்த்தால் தீபாவளி லிஸ்டில் மூன்று படங்கள்தான் உள்ளது. தீபாவளி லிஸ்டில் இருந்த அபியும் நானும் படமும் கடைசி நேரத்தில் பந்தயத்திலிருந்து கழன்றுகொண்டுவிட்டது. தீபாவளி ரிலீஸ் எண்ணிக்கை குறைந்ததற்கு பைனான்ஸ் பிரச்சினையில் ஆரம்பித்து தியேட்டர் பிரச்சினைவரை காரணமாக கூறப்படுகிறது. சமீப காலமாக பெரிய படங்கள் ரிலீசாகும் நேரத்தில் சின்ன படங்கள் ரிலீசாகாத நிலையும் ஏற்பட்டுள்ளது. பெரிய படங்கள் நிறைய தியேட்டர்களை ஆக்கிரமித்து கொள்வதே இதற்கு காரணம். அப்படி தியேட்டர் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கும் படங்கள் அநேகம் இருக்கிறதாம். மெகா பட்ஜெட் படங்கள் தியேட்டர் ஆக்கிரமிப்பு செய்யாவிட்டால் இந்த தீபாவளிக்கு மட்டும் ஒரு டஜன் படங்கள் வர காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதவிர படத்தை ரிலீஸ் செய்தால் வாங்கிய கடனை கட்டியாகவேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் ரிலீஸ் ஆவதை தள்ளிப்போடும் நிறுவனங்களும் இருக்கிறதாம். இந்தவகையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் சென்சாரெல்லாம் முடிந்து பெட்டிக்குள்ளேயே முடங்கி கிடப்பதாகவும் கூறப்படுகிறது. அப்போ இந்த தீபாவளிக்கு சிறிய படங்களின் நிலைமை புஸ்வானம்தான்.