யோகி படத்துக்கு பிறகு புது இமேஜ் கிடைக்கும் என்றார் மதுமிதா. அவர் கூறியதாவது: யோகியில் வாழ்நாளில் மறக்க முடியாத கேரக்டரில் நடித்திருக்கிறேன். அது என்ன என்பது சஸ்பென்ஸ். ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை விட்டு நீங்காதது. குறிப்பிட்ட ஒரு காட்சியில் வசனத்துக்கு இடையில் அழ வேண்டும். கட் செய்துவிட்டு கிளிசரினும் போட முடியாது. அந்த காட்சியை என் மனதில் அமீரும், இயக்குனர் சுப்ரமணிய சிவாவும் பதிய வைத்துவிட்டனர். காட்சி படமாகும்போது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். இதில் எனது 100 சதவீத நடிப்பு வெளிப்படும். தேசிய விருது கிடைக்குமா? என்கிறார்கள். அது எனக்கு தெரியாது. யோகிக்கு பிறகு எனக்கு புது இமேஜ் கிடைக்கும். அதன் பிறகு வரும் வேடங்களும் நடிப்புக்கு சவால் விடும் வேடங்களாக இருக்கும். இதற்கிடையில் சொல்ல சொல்ல இனிக்கும் படத்தில் நவ்தீப் ஜோடியாக நடிக்கிறேன். இப்போது எம்.பி.ஏ. படிக்கிறேன். அதற்கான தேர்வு நடப்பதால் இயக்குனர் அனுமதியுடன் ஷூட்டிங்கிற்கு லீவு போட்டுவிட்டு படித்து வருகிறேன். ஷிவபாலாஜியுடன் எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. படிப்பு முடிந்தவுடன் திருமணம். நல்ல ரோல்களாக வந்தால் திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன். இவ்வாறு மதுமிதா கூறினார்.