முதல் பக்கம் » சினிமா » திரைக்குப்பின்

Tamil Movie Celebrity Dhanush, Surya, Tamanna, Tamil Movie Actor, Actress Interview

எதிர்பார்க்க முடியாத கேரக்டர்... தமன்னா

Tamanna Tamil Celebrity UNEXPECTED CHARACTER - TAMANNA
தெலுங்கு புரஸ்கார் விருது வாங்கப் போகும் மகிழ்ச்சியில் சிறகு விரித்து பறந்து கொண்டிருக்கிறார் தமன்னா...

ஏ.வி.எம் - சூர்யான்னு செம கூட்டணி போட்டிருக்கீங்களே?

இது என் சினிமா பயணத்தில் கிடைச்சிருக்கிற முக்கியமான, மிகப்பெரிய ஒரு வாய்ப்புன்னு நினைக்கிறேன். ஏன்னா.... உங்களுக்கே தெரியும்! ஏவி.எம் நிறுவனம் அந்தக் காலத்திலிருந்து இன்னைக்கு வரைக்கும் சினிமாத்துறையில் ஒரு மாபெரும் நிறுவனம்.

என் பயணத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே அப்படிப்பட்ட நிறுவனத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்குன்னா நிச்சயம் நான் அதிர்ஷ்டசாலிதான். நான் ஏவி.எம்மின் "சிவாஜி"' படத்தை தியேட்டர்ல ரசிச்சிப் பார்த்திருக்கேன்.

ஆனா கற்பனையில்கூட அவங்களோட அடுத்தப் படத்து ஹீரோயின் நான்தான்னு நினைச்சிப் பார்க்கல. ஏவி.எம் - சூர்யான்னு என்னைச் சுற்றி நடப்பதெல்லாம் நிஜம்தானான்னு எனக்குத் தெரியலை. நினைக்கும்போதே எப்படி இருக்கு தெரியுமா? அது ஒரு இனிமையான ஃபீலிங்னு மட்டும்தான் எனக்கு சொல்லத் தெரியுது!

நீங்க ஆடுற "ஆனந்த தாண்டவம்" பத்திச் சொல்லுங்க?

"ஆனந்த தாண்டவம்" படத்துல நான் பண்றது ரொம்ப சவாலான, மாறுபட்ட ஒரு கேரக்டர். இதுவரைக்கும் காதல் மற்றும் கலகலப்பான கதைகள் மட்டுமே பண்ணியுள்ள நான், முதல் தடவையா யாருமே எதிர்பார்க்க முடியாத ஒரு கேரக்டர்ல வர்றேன்.

பொதுவா, காதல் கதைகளில் நடிப்பது எனக்கு கொஞ்சம் ஈஸியான விஷயம்தான். ஆனா, அதையும் தாண்டி இன்னும் நுணுக்கமா, அழுத்தமா பண்ண வேண்டிய காட்சிகள் இந்தப் படத்துல எனக்கு நிறையவே இருக்கு!

என் கேரக்டர் பத்தி டைரக்டர் காந்திகிருஷ்ணா சார் சொன்னப்போ, கொஞ்சம் கவனமெடுத்துப் பண்ண வேண்டிய கேரக்டர்னு நான் நினைச்சதென்னவோ உண்மை! ஆனா, கேமிரா முன்னாடி நடிக்கிறபோதுதான் தெரிஞ்சது...

நாம இன்னும் அதிகப்படியான கவனமெடுத்து பண்ணனும் என்பது. அந்த அளவுக்கு ஆடியன்ஸைக் கட்டிப்போடுகிற மாதிரி கதையையும், கதாபாத்திரங்களையும் செதுக்கியிருக்கார் டைரக்டர். பெரிய அளவில் ரசிகர்களைக் கட்டிப் போடுகிற ஒரு படமா "ஆனந்த தாண்டவம்" இருக்கும்.

வருங்காலத்தில் என்ன மாதிரியான கேரக்டர்கள் செய்ய ஆசைப்படறீங்க?

"கல்லூரி", "ஹேப்பி டேஸ்", "ஆனந்த தாண்டவம்" படங்கள்ல நான் பண்ணின கேரக்டர்களைப் போல், திறமைக்குத் தீனி போடும் கேரக்டர்களையே வருங்காலத்திலும் நான் பண்ண ஆசைப்படுறேன்.

அதேநேரத்துல இப்போ சூர்யாகூட பண்ணும் "அயன்" அப்புறம் தனுஷ்கூட நடிக்கும் "படிக்காதவன்" ரெண்டுமே கமர்ஷியல் கதைகள்தான். இதுமாதிரி கமர்ஷியல் பின்னணியில் எனக்கான வித்தியாசமான கேரக்டர்களும் அமைந்தால் எப்பவும் நான் நடிக்கத் தயார்தான்.

மத்தபடி, "சந்திரமுகி" மாதிரி அட்டகாசமான கேரக்டர்களை என்னை நம்பிக் கொடுத்தால் நான் சூப்பரா பண்ணி டைரக்டர் என் மேல் வைக்கும் நம்பிக்கையைக் காப்பாத்துவேன்.

ஆனா இப்படிப்பட்ட கேரக்டர்கள்தான் பண்ணனும்னு என் மனசுல நான் எந்த ஐடியாவையும் வச்சிக்கிறதில்லை. எல்லாக் கேரக்டரும் பண்றதுக்கு ஏத்த மாதிரி அதை வெற்றிடமாகவே வச்சிருக்கேன்.

"படிக்காதவன்"ல என்ன கேரக்டர் பண்றீங்க?

அழகும், அட்டகாசக் குறும்புகளும் நிறைஞ்ச பொண்ணா நடிக்கிறேன். முதல் தடவையா இந்தப் படத்துல செம காமெடி பண்றேன். "படிக்காதவன்"ற தலைப்பே படத்துல தனுஷ் என்ன கேரக்டர் பண்றார்ன்றதை உங்களுக்குப் புரிய வச்சிருக்கும்.

ஹீரோயின் கேரக்டரை என்னால்தான் ரொம்ப நல்லா பண்ண முடியும்னு தனுஷ் சார்தான் சொல்லியிருக்கார். நிச்சயம், அவரோட நம்பிக்கையை நான் காப்பாத்துவேன்.

ஒரு நடிகையாக நீங்கள் பின்பற்ற விரும்பும் நடிகை யார்?

ஹிந்தியில் மாதுரி தீட்சித்தையும், தமிழ்ல ஜோதிகாவையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரெண்டு பேருமே கேரக்டரோடு தங்களை முழுசா அர்ப்பணிச்சி நடிச்சவங்க. அதேமாதிரி, அவங்க பண்ணின கேரக்டர்களையும் பாத்தீங்கன்னா, ஒன்றுக்கொன்று பெரியளவில் மாறுபட்டதாய் இருக்கும்.

உங்க வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஏதாவது இருக்கா?

என் சினிமா பயணமே முழுக்க முழுக்க ஒரு மறக்க முடியாத சம்பவம்தான். எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைச்சப்போ வயசு 13 தான். எனக்குத் தெரிஞ்சி இவ்ளோ சின்ன வயசுல ஹீரோயினா நடிச்சவங்க யாராவது இருக்காங்களான்னு தெரியலை.

இப்போ நான் நடிக்கவந்து 3 வருடங்கள் ஆயிடுச்சி. இந்த 3 வருடங்களையும் நான் திரையுலகில் வளர்வதற்கு எடுத்துக்கொண்ட வருடங்கள்னு சொல்லலாம். உங்களுக்கே தெரியும்! இப்போ நான் என் சினிமா பயணத்தில் முக்கியமான காலகட்டத்துல இருக்கேன்.

என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு புது விஷயத்தோடுதான் தொடங்குது! காலேஜ் போய் தினமும் ஏதாவது பாடம் படிக்கிற மாதிரி, நிறைய விஷயங்களை நான் இந்த சினிமாத்துறையில் கத்துகிட்டிருக்கேன்.

இந்த இருபது வயசுக்குள்ளயே நான் சினிமாவில் இவ்ளோ தூரத்தை அடைஞ்சிருக்கேன்னா நிச்சயம் நான் அதிர்ஷ்டசாலிதானே! "கேடி"யில் நன்றாக நடித்திருந்தும், தமிழில் எனக்குப் போதிய வாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் நான் நடிச்ச "ஹேப்பி டேஸ்" மற்றும் இங்கே பண்ணின "கல்லூரி" ரெண்டு படங்களும்தான் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தவை.

இந்தப் படங்களால் இன்னைக்கு நான் இரண்டு மொழியிலயும் பிஸியான நடிகை. அதிலும், தெலுங்கு "ஹேப்பி டேஸ்" எனக்குப் பெரிய பெயர் தந்ததோட சிறந்த நடிகைக்கான தெலுகு புரஸ்கார் அவார்டையும் வாங்கிக் கொடுத்திருக்கு.

அதனால, நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இன்னும் ரொம்ப நல்லா நடிச்சி ரசிகர்களை எப்பவும் சந்தோஷப்படுத்தணும். அதுதான் என் ஆசை!" என்கிறார் தமன்னா... இப்படி நினைக்கிற நீங்களும் எப்போதும் சந்தோஷமா இருப்பீங்க...

மேலும் திரைக்குப்பின்
Site Meter