Shakthi Tamil Celebrity I HAVE MORE FRIENDS - SHAKTHI
சனவரி 11 2008
எனக்கு நிறைய நண்பர்கள்... - ஷக்தி
"தொட்டால் பூ மலரும்" படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, இப்போது ஆட்ட நாயகனில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ஷக்தியிடம்...

"ஆட்ட நாயக"னோட வொர்க் எப்படி போய்கிட்டிருக்கு?

"ரொம்பவும் நல்லா போய்கிட்டிருக்கு. இது ஜாலியான ஒரு படம். தைரியம், தெனாவெட்டு, நக்கல், நையாண்டி உள்ள ஒரு பையனை பத்தின படம். அவன் யார் பேச்சையும் கேட்க மாட்டான். தான் நினைச்சதுதான் சரின்னு நினைப்பவன்.

அவனோட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. இப்படத்தை இயக்குனர் விக்ரமனிடம் அசோஸியேட்டாக இருந்த கிருஷ்ணராம் இயக்கி வருகிறார்.

"தொட்டால் பூ மலரும்" படத்திற்குப் பிறகு ஏன் இவ்வளவு இடைவெளி?

இந்த இடைவெளி நானா ஏற்படுத்திகிட்டதுதான். அந்தப் படம் வெளியான பிறகு நிறைய கதைகளைக் கேட்டேன். ஆனால் கதை பிடித்தால் புரொடக்ஷன் கம்பெனி சரியா அமையாது, நல்ல கம்பெனி அமைந்தால் கதை சரியா அமையாது. இப்படியே கொஞ்சம் நாட்கள் போயிடுச்சு.

அடுத்தப் படம் பண்ணும்போது அது பெரிசா இருக்கணும் அல்லவா? அதனால் நல்ல கதை, கம்பெனிக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டியதா போச்சு. அப்படி இருக்கும்போது கிடைத்த வாய்ப்புதான் "மகேஷ் சரண்யா மற்றும் பலர்". இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ். இது நான் சொன்ன மாதிரி ரொம்பவும் நல்ல படமா இருக்கும்.

"மகேஷ் சரண்யா மற்றும் பலர்" படத்தில் என்ன மாதிரியான கேரக்டர்...?

என்னோட கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்ல முடியாது. அது சஸ்பென்ஸ். காரணம் அது பற்றிச் சொன்னால் படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் என்னோட கேரக்டரும், நடிப்பும் பேசப்படுகிற மாதிரி இருக்கும். படப்பிடிப்புத் தளம் பிக்னிக் போன மாதிரி இருந்தாலும் எல்லோரும் கடுமையாக உழைச்சிருக்காங்க. அதை படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்.

அடுத்து வேறு என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

"ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்" நிறுவனம் தயாரிக்கும் "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் நடிக்கிறேன். இதில் பிருத்விராஜூம் ஒரு கேரக்டர் பண்றார். இது வித்தியாசமான ஒரு சப்ஜெக்ட். இந்தப் படத்தை கமல் ஸாரின் அசிஸ்டெண்டும், இயக்குனர் கே.என்.ரங்கராஜனின் மகனுமான குமரவேல் இயக்குகிறார். பத்து நாள் ஷூட்டிங்தான் பாக்கி இருக்கு. இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாகும்.

சொந்தத் தயாரிப்பில் எப்போது நடிக்கப் போகிறீர்கள்?

இப்போதைக்கு இல்லை. காரணம் நிறைய வெளி கம்பெனி பட வாய்ப்புகள் வந்துகிட்டிருக்கு. அதெல்லாம் முடித்த பிறகுதான் நடிப்பேன். அப்பா எனக்காக சொந்த பேனரில் ஒரு படத்தைத் தயாரித்து இயக்கினார். அதன் மூலம் எனக்கு ஹீரோ அந்தஸ்து கிடைத்தது. இப்போதைக்கு அந்த ஹீரோ அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதில்தான் என் கவனமெல்லாம். சொந்த பேனருக்காக படம் பண்ணுவேன். ஆனால் அது இப்போது இல்லை.

உங்கள் தந்தை பி.வாசு ஒரு இயக்குனராக, தந்தையாக உங்களுக்கு எப்படியெல்லாம் உதவியாக இருக்கிறார்?

அப்பா பெரிய இயக்குனர். நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அவர் எனக்கு தந்தை மட்டுமல்ல, குருவும் கூட! அவரது உயர்வான எண்ணங்களும், கடுமையான உழைப்பும்தான் அவரை இவ்வளவு பெரிய நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. அவருடன் பணி புரியும்போது குருவாகவும், வீட்டில் இருக்கும்போது தந்தையாகவும் நினைத்துதான் பழகினேன்.

ஆனால் இப்போது தனித்தனியாக பார்ப்பதில்லை. எனக்கு வழிகாட்டிய குருவாகத்தான் பார்க்கிறேன். அவர் நான் நடிக்கும் படத்திற்கு முதலில் என்னைதான் கதையை கேட்க சொல்வார். கதை கேட்ட பிறகு எனக்கு திருப்தியாக இருந்தால் அவரைக் கேட்கச் சொல்வேன். அவருக்கும் கதை பிடித்திருந்தால் மட்டுமே நான் நடிப்பேன்.

உங்களுடன் நடிக்கும் நடிகைகள் பற்றி?

எல்லோரும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். எல்லோரிடமும் நல்லா வரணும் என்கிற ஆர்வமும், வேகமும் இருக்கிறது. கதையையும், தங்களது கதாபாத்திரங்களையும் உள்வாங்கிகிட்டு நன்றாக நடிக்கிறாங்க.

சக நடிகர்கள், நண்பர்கள் உங்களுக்கு ஆலோசனைகள் கூறுவதுண்டா?

திரையுலகைப் பொறுத்த வரையில் எல்லோரும் போட்டியில் ஜெயிக்கணும் என்ற இலக்கை நோக்கிதான் போய்க் கொண்டிருக்கிறார்கள். இப்படியிருக்க ஆலோசனைகள் கூறுவதெல்லாம் யாருக்கும் சரிப்பட்டு வராது. ஆனால் எனது நண்பர்கள் உண்மையிலேயே எனது வளர்ச்சியில் அக்கறை உள்ளவங்களாக இருக்கிறாங்க. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லோரது பெயரையும் நான் சொல்லுவேன். ஆனால் நீங்கள் இடம் பத்தாது என்று ஒரு சிலர் பெயரை மட்டும் போட்டுவிட்டு மற்றவர்களை விட்டுவிட்டால் அது எங்களுக்குள் மனவருத்தத்தைதான் ஏற்படுத்தி விடும், அது வேண்டாம்" என்கிறார் இந்த ஆட்ட நாயகன் ஷக்தி!



மேலும்

Tamil Horoscope
Exclusive Tamil Actress Pictures
CHANDRAYAAN-1
Tamil Online Free eGreetings eCards
Latest Tamil Movies Online Website
Tamilnadu Classifieds - Koodal Business Link