முதல் பக்கம் » சினிமா » திரைக்குப்பின்

Tamil Movie Celebrity Tamil Movie Actor, Actress Interview

மதன் பாப் குடும்பத்தின் இசை ரகளை!!

 Tamil Celebrity MADAN BOB SPEAKS ABOUT HIS 'MADAN UTSAV' MUSIC TROOP

கலகலவென மூச்சுவிடாமல் மூன்று நிமிடங்கள் சிரிக்கும் மதன்பாப் வீட்டிற்குப் போயிருந்தபோது இசை ரகளை... அவரது மனைவி சுசீலா, மகன் அர்ஜித், மகள் ஜனனி எல்லோருமே 'மதன் உற்சவ்' ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் பாடகர்கள் என்பதால் நேரம் கிடைத்தால் இப்படி உட்கார்ந்துவிடுவார்களாம். கூடவே மருமகள் ப்ரிதா, குட்டிப் பேரன் ஆலிந்த் ஆகியோரும் ஜமாவில் சேர்ந்துகொள்ள ஒரே களேபரம்!

"எங்கள் 'மதன் உற்சவ்' நிகழ்ச்சி வழக்கமான ஆர்க்கெஸ்ட்ரா மாதிரி இருக்காது. ஸ்டேஜ் பின்னணியில் பெரிய திரையில் பாட்டுக்குப் பொருத்தமான காட்சி ஓடிக்கொண்டிருக்கும். தவிர மேடையில் பாடகர் பாடும்போது குரூப் டான்ஸ், கத்திச்சண்டை போன்ற அட்டகாசங்கள் நடக்கும். இதில் எதிர்பாராத காமெடிகள் நிறைய நடக்கும்..." என்று வாய்விட்டு சிரித்தவர் தொடர்ந்தார்.

'உத்தமபுத்திரன்' படத்துல வருகிற 'யாரடி நீ மோகினி' டூயட் பாடல். ஹெலனுக்காக ஜிக்கி பாடுவதை என் மகள் ஜனனி பாடுவது போலவும், சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடுவதை புதுப் பாடகரும் பாடுவார்கள். இதில் என்ன ஆச்சுன்னா சிவாஜி கெட்டப்பில் பாடிக்கொண்டிருக்கும் பாடகர், இடுப்பிலிருந்து கையை எடுக்கவில்லை. ஷெர்வானி போட்டுக்கொண்டு மேடையின் இங்குமங்கும் அலைபவர் இரண்டு கைகளையும் எடுக்காமல் பாடுவதால் எரிச்சலாகிய நான், மேடையின் ஓரத்திலிருந்து 'கையை எடுங்க' என்று கத்தறேன். அவரோ எதையும் காதில் வாங்கிக்கொண்டதுபோல் தெரியவில்லை. ஓரத்திலிருந்து ஆளுக்காள் கத்தறோம். ஆடியன்ஸ் 'எடுக்காதே'ன்னு கத்தறது. ஒரே குழப்பம்.. சிரிப்பு. பாட்டு முடிஞ்சதும், உள்ளே ஓடி வர்றார் ஷெர்வானிக்காரர். இப்போதான் கையை எடுத்தார். ஷெர்வானி முட்டிக்கால் கீழே இறங்கி ஜட்டியோட நிற்கிறார்! டிரஸ் ரெடி பண்றவர் நாடா கோக்க மறந்துபோய், அவசரத்துல கொடுத்து இவரும் மாட்டிக்கொண்டு மேடை ஏறிட்டார்னு புரிந்தது!

'கண்ணும் கண்ணும் கலந்து'ன்னு ஒரு ஹிட்டான பாட்டு... ஜிக்கி, பி.லீலா பாடியது. ஒரு கச்சேரியில எங்களுக்கு ரெகுலரா வாசிக்கும் தபேலாகாரர் கடைசி நிமிஷத்தில் வர முடியாமல் போக, அவசரத்திற்கு ஒருத்தரை ஏற்பாடு பண்ணேன்! 'கண்ணும் கண்ணும்' பாட்டு அமர்க்களமா போயிட்டிருக்கு. நடை வேகமா வாசிக்க வேண்டிய இறுதிக் கட்டத்துல சற்று ஸ்லோவாக வாசிக்கிறார் தபேலாகாரர். ஆர்கெஸ்ட்ராவை கண்டக்ட் பண்ண நான், பல்லைக் கடிச்சுகிட்டு 'உருட்டிவாசிப்பா' என்றேன் - இரண்டு தடவை! அவர் குழம்பிப்போய் ரொம்ப சீரியஸா தபேலாவை உருட்டிவிட, அது கீ போர்டுக்கு உருண்டு வர, குரூப் டான்ஸ் ஆடற பொண்ணு அதுல காலை வைத்து தடுமாறி உருள.. நான் பிடிக்க... இவர் ஏன் திடீர்னு தபேலாவை உருட்டிவிட்டார்னு புரியாம ஆடியன்ஸ் பயங்கரமா சிரிக்க... நாங்க எல்லாரும் ஐந்து நிமிஷம் சிரிச்சுட்டுதான் அடுத்த பாட்டுக்குப் போனோம்!

சமீபத்தில் வந்த 'ஈசன்' படத்துல கடற்கரையில் சுண்டக்கஞ்சி விற்கும் பெண்மணி தன் சோகக் கதையை சொல்வதுபோல் வரும் 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து' என்ற பாட்டை நினைவிருக்கிறதா? ஒரு கல்யாணக் கச்சேரியில் அந்தப் பாட்டை என் மகளைப் பாடச் சொல்லிவிட்டு, 'ஈசன்' படத்தில் வருவதைப் போன்றே ஒரு குண்டுப் பெண்மணியை வாயசைக்க ஏற்பாடு செய்தேன். வானம் சூழ்ந்த கடற்கரை போலவே காட்சி இருக்கணும் என்பதற்காக புகையை விட்டவர் ஆர்வக் கோளாறில் கொஞ்சம் ஜாஸ்தியா விட்டுவிட்டார்! திரைப்படப் பாட்டின் கடைசியில் 'என் கதைய முடிக்கறேன்' என்று பாடிக்கொண்டே அந்தப் பெண்மணி தனியாகப் போவதுபோல வரும்! எங்கள் குண்டு பொம்புளையும் அப்படி மேடைக்கு ஓரமா போக... புகை மூட்டத்தில் சட்டுனு ஒண்ணும் தெரியலை! ஒரிஜினல் பாட்டில் அந்த வரிக்குப் பிறகு சில வினாடிகள் கழித்து மீண்டும் பாட்டு தொடங்கும். அதேப்போல் என் மகள் மைக்கில் பாடுகிறாள். ஆனால் போன பொம்பளை வாயசைக்க திரும்பவில்லை. கல்யாண கூட்டத்தில் கலாட்டா. நாங்கள் எல்லோரும் புகைக்குள் புகுந்து தேட, மேடையோரமாக கீழே உள்ள படி தெரியாமல் காலை வைத்து உருண்டிருக்கிறார். வலியில் முனகுகிறார். இப்படியா அவர் கதைய முடிப்பது?

ஒரு நிகழ்ச்சியில் எனக்கு மிக முக்கியமான ஒரு வெளிநாட்டு கால் வந்ததால், நான் மேடைக்குப் பின்புறம் செல்லை எடுத்துக்கொண்டு ஓடினேன். அடுத்த பாடலை எனக்கு பதிலாக அறிவித்தவர் 'அற்புதமான சிவாஜி பாடல்' என சன்பென்ஸாக அறிவிக்க, ஆர்கெஸ்ட்ரா குழுவினர் 'பல்லேலக்கா' பாட்டு பின்னணி இசையை ஜம்மென்று உடனே இசைக்க, எங்கள் குழுவில் டி.எம்.எஸ். குரலில் பாடுபவர் அவசரமா மைக்கைப் பிடித்து 'போனால் போகட்டும் போடா' ஆரம்பித்துவிட்டார்! நான் காமெடியைப் புரிந்து கொண்டு, பாடகரை அப்படியே தொடரச் சொன்னேன். பிஜிஎம் மட்டும் 'பல்லேலக்கா' பாட்டுக்கு வருவதை போல கடைசிவரை தொடர்ந்தது. 'வித்தியாசமான ரீமிக்ஸ்' என்று 'போனால் போகட்டும் போடா'வுக்கு பயங்கர கிளாப்ஸ்!

மேலும் திரைக்குப்பின்
Your Ad Here
Site Meter