கர்நாடக இசை, சினிமா இரண்டிலும் பயணம் செய்யும் பாடகிகளில் லேட்டஸ்ட் வரவு சாருலதா மணி. 'வேலாயுதம்' படத்தில் சாருலதா பாடிய 'சில்லாக்ஸ்' பாட்டு தற்போது விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம். சாருவுக்கு ஒரு ஹாய் சொல்லி, 'சில்லாக்ஸ்' குறித்த ஆய்வில் இறங்கினோம்.
சைலண்ட்டா வந்த உங்க 'சில்லாக்ஸ்' குத்து இப்போ ஹிட் ஆகிடுச்சே? என்று கேட்டதும் சாருலதா முகத்தில் குஷி பளிச்சிடுகிறது.
ஹைய்யோ. டி.வி. சேனல்கள், டீக்கடைகள்ன்னு பல இடங்களில் 'சில்லாக்ஸ்' அதிருது. சில எஃப்.எம்.களின் டாப் 10 லிஸ்ட்டில் இந்தப் பாட்டுக்குத்தான் முதல் இடம். சினிமாவில், பட்டையைக் கிளப்புற மாதிரி ஒரு பாட்டு பாடணும்ங்கிறது என்னோட நெடுநாள் கனவு. தொடர்ந்து விஜய் படங்கள் மூலமா அந்தக் கனவு நிறைவேறுறதுல எனக்கு டபுள் சந்தோஷம். முதல்ல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நான் நன்றி சொல்லணும். 'சில்லாக்ஸ்' பாட்டுப் பாட அவர் என்னைக் கூப்பிட்டப்போ, அது விஜய் படத்துக்காகத்தான்னு எனக்குத் தெரியாது. ரிக்கார்டிங் முடிஞ்சு சில வாரங்களுக்குப் பிறகுதான் எனக்கு விஷயம் தெரியும்.
என் குரல் நல்லா செக்ஸ் அப்பீல் கொடுக்கும். அதை நல்லா பயன்படுத்துற மாதிரி ஹஸ்கி வாய்ஸ்ல 'சில்லாக்ஸ்' பாட்டு அமைஞ்சது. இன்னொரு ஸ்பெஷாலிட்டி, இந்தப் பாட்டு நீளமான ஆலாபனையில் ஆரம்பிக்கும். அங்கங்கே அராபிக் பீட் போடணும். நடுவில் நிறைய ஜதிகள் வரும். கர்நாடக இசையில் நல்ல பயிற்சி இருக்குறவங்கதான் இதைப் பாட முடியும். அதனால் சில்லாக்ஸ் 'குத்து' கிடையாது. ஃபாஸ்ட் பீட்ல அமைஞ்ச டூயட்!
சில்லாக்ஸூக்கு சினிமா வட்டாரத்தில் ரெஸ்பான்ஸ் எப்படி?
'இந்தப் பாட்டுக்கு உங்க வாய்ஸ் பெரிய ப்ளஸ்'ன்னு டைரக்டர் ராஜா சொன்னார். பாட்டுக்கு ஆடிய ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியை படத்துக்கான ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பார்த்தப்போ, என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்காத குறையா பாராட்டினார். இசையமைப்பாளர்கள் தமன், சத்யா, இயக்குநர் தரணின்னு நான் எதிர்பார்க்காதவங்க கிட்டருந்தெல்லாம் பாராட்டு வந்துட்டிருக்கு.
சரி, உங்க சொந்த வீடான கர்நாடக இசை வட்டாரத்தில் இதுபோன்ற சினிமா பாடல்களுக்கு ரியாக்ஷன் எப்படி இருக்கும்?
கர்நாடக இசையில் என்னோட ரோல் மாடல் அருணா சாய்ராம். நான் ஜாலியா சினிமா பாடல்களை எடுத்துவிட்ட ஒரு ஃபங்ஷனுக்கு அவங்க வந்திருந்தாங்க. முதல் வரிசையில் கணவரோட ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்து ஒவ்வொரு பாட்டையும் கைதட்டி ரசிச்சாங்க. சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன், உன்னிகிருஷ்ணன் போன்றவர்கள் பல நிகழ்ச்சிகளில் என்னைப் பாராட்டியிருக்காங்க.
சில கர்நாடக இசைப்பாடகர்கள் சினிமாவை விலக்கி வைக்குறதை விரதம் போல கடைப்பிடிக்குறாங்க. அவங்ககிட்டருந்து ஏதாவது விமர்சனங்கள்?
எனக்கு எது வருமோ அதை நான் பண்றேன். எனக்கு கர்நாடக இசை பிடிக்கும். அதை தியானம் மாதிரி அனுபவிச்சுப் பாடுறேன். அதே சமயம் ஜாலியான அவுட்லெட்டும் எனக்குத் தேவை. அமைதியான சபாக்களில் பாடறதும் எனக்குப் பிடிக்கும். லைட் மியூசிக் கச்சேரிகளில் 'சியர் அப்'ன்னு ரசிகர்களை நோக்கி கத்திக்கிட்டு, மூவ்மெண்ட்ஸ் கொடுத்துட்டே பாடவும் பிடிக்கும். எனக்குப் பிடிச்ச வாழ்க்கையை நான் வாழ்றேன். மற்றவங்களோட விமர்சனத்தைப் பற்றி கவலையே படறதில்லை. ரசிகர்களும் சினிமா பாடல்களை ஒதுக்கி வைக்குறதில்லை. சமீபத்தில் ஒரு கர்நாடக இசை நிகழ்ச்சிக்குப் பாடப் போயிருந்தப்போ, ஒரு மாமி என் கையைப் பிடிச்சிட்டு, 'நீ பாடுன 'சில்லாக்ஸ்' ரொம்ப நன்னாருக்குடி. சில்லாக்ஸூக்கு என்ன அர்த்தம்?'ன்னு கேட்டாங்க. 'சில் அவுட் ப்ளஸ் ரிலாக்ஸ்'ன்னு அர்த்தம் சொல்லிட்டு வந்தேன், என்று சிரிக்கிறார் சாருலதா மணி.