முதல் பக்கம் » சினிமா » திரைக்குப்பின்

Tamil Movie Celebrity Tamil Movie Actor, Actress Interview

பயந்து பயந்து படம் எடுக்க வேண்டியிருக்கு! - செல்வராகவன்

 Tamil Celebrity I KNOW MY LIMITS: SELVARAGHAVAN

செல்ல மகள் லீலாவதியைத் தன் மடியில் போட்டுத் தாலாட்டிக்கொண்டு இருந்தார் அப்பா செல்வராகவன். "இதுவரைக்கும் வேலைனு கிளம்பி, வெளியூரோ, வெளிநாடோ எங்கே போனாலும் மனசு எப்பவும் வீட்டைத் தேடாது. ஆனா, இப்போ ஒருநாள்கூட இவளை விட்டுட்டு இருக்க முடியலை. எப்படா ஷூட்டிங் முடியும்னு காத்திருந்து, நிஜமாவே பிரேசில்ல இருந்து பறந்து வந்திருக்கேன்!" -'இரண்டாம் உலகம்' டென்ஷன் மறந்து சிரிக்கிறார் செல்வராகவன்.

'மயக்கம் என்ன' - அந்த அளவுக்குத் திருப்தி கொடுக்கலையே....

அது இயற்கைதான். எனக்கே எதிலும் திருப்திப்பட்டுப் பழக்கம் இல்லை. அதுவும் என்னை மாதிரி ஆளெல்லாம் திருப்தி அடைஞ்சுட்டா... அவ்வளவுதான். அதான், வெற்றி தோல்வி இரண்டில் இருந்தும் விலகியே இருக்கேன். இப்போ மனசு முழுக்க 'இரண்டாம் உலகம்'தான். அந்தப் பட ஸ்க்ரிப்ட் எழுதுறது பெரிய ரோதனை. அதைப் படமாக எடுக்கிறது பெரிய சோதனை. இதை இந்தியில் செய்யப் பிரியப்படுறவங்க, 'ஸ்க்ரிப்ட்டைப் படிக்கவே ஒரு மாதிரியா இருக்கே... எப்படி இதை ஸ்க்ரீன்ல கொண்டுவருவீங்கனு பார்க்க ஆசையா இருக்கு'னு சொல்றாங்க!

அப்படி என்ன பெரிய துணிச்சலான முயற்சியில் இறங்கி இருக்கீங்க?

துணிச்சல்னு சொன்னா, உடனே இங்கே றெக்கைகளை வெட்டிர்றாங்களே. எந்தப் படம் எடுத்தாலும் அதை என் சொந்த வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறாங்க. கொஞ்சம்கூட நியாயமே இல்லாத செயல் இது.

ஒரு ரேடியோல செய்தி கேட்கும்போது, அதோட நாம சம்பந்தப்படுத்திக்கிறது இல்லை. ஐ.பி.எல். பார்க்கும்போது அதை தீவிரமா எடுத்துக்கிறது இல்லை. ஆனா, சினிமானு வந்துட்டா மட்டும் உடனே, 'இவன் வாழ்க்கையில் இது நடந்திருக்கும்டா'னு பேச ஆரம்பிச்சுடுறாங்க. படத்தைப் படமா மட்டும் பாருங்கனு சொல்லத் தோணுது. இங்கே தேவதாசிகளைப் பத்தி வெளிப்படையா ஒரு படம் பண்ண முடியாது. பயந்து பயந்து படம் எடுக்க வேண்டியிருக்கு. இதெல்லாம் என் காலத்துக்குள்ளேயாவது மாறுமானு பார்க்க ஆசையா இருக்கு. ஆனாலும், 'இரண்டாம் உலகம்' நிச்சயம் வழக்கமான என் பாணியில் இருக்காது.

நீங்க சொல்றதைவெச்சுப் பார்த்தா, படத்துக்கு ஆர்யா பொருத்தமா இருக்காரா? இன்னமும் அவரோட ப்ளேபாய் இமேஜ்தானே பிரபலம்?

சரி... அப்படியே எத்தனை நாள் இருக்கிறது? ஆர்யா ரொம்ப சென்சிபிள். எப்படி வேணுமோ அப்படி மாறுறார். ஆர்யா, அனுஷ்கா ரெண்டு பேரும் இந்தப் படத்துக்குக் கொடுத்திருக்கிற பெர்ஃபார்மென்ஸ் ரொம்பப் பெருசு. ஆர்யா நிச்சயம் அடுத்த லெவலுக்குப் போக வேண்டிய நேரம் இது. இந்தப் படம் நிச்சயம் ஆர்யாவை எலிவேட் பண்ணும். நான் அவரைப் பத்தி இவ்வளவு திருப்தியா பேசும்போதே, அவர் சரியான சாய்ஸ்தான்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே!

உங்க படங்களை நீங்களே திருப்பி எடுக்கிற மாதிரி இருக்கு. ஏன் இந்தத் தப்பைப் பண்றீங்க?

சமயங்கள்ல அப்படி நடந்துடுது. ஆனாலும், முழுக்கவே அப்படிச் சொல்லிடவும் முடியாது. 'மயக்கம் என்ன' விமர்சனங்களில் தனுஷ் கேரக்டரை 'சைக்கோ'னு ஒரு வார்த்தையில் சொல்லிட்டாங்க. ஆனா, அது அப்படி இல்லை. ஒரு கிரியேட்டர் குடிக்கு அடிமையானா, எப்படி நடந்துக்குவான்னு டீடெய்ல் பண்ணியிருந்தோம். நாம எப்பவும் ரெண்டு மூணு வார்த்தை வெச்சிருக்கோம்... லூஸூ, பெர்வெர்ட், சைக்கோனு. ஒரு குடிகாரனை சைக்கோனு சொல்லிட்டா, அப்புறம் நான் என்ன பண்ண முடியும்? ஒண்ணு... ஹீரோ, காமெடி நடிகர்னு வெச்சுக்கிட்டு மசாலாப் படம் பண்ணலாம். இல்லேன்னா, ஏதோ ரகசியம் இருக்குனு யோசிக்கிற மாதிரி வித்தியாசமா எடுக்கலாம். எனக்கு முதல் விஷயம் சுட்டுப்போட்டாலும் வராது. இரண்டாவது சொன்னதுதான் வரும். அதுலயே இன்னும் தொடாம நிறைய விஷயங்கள் அப்படியே இருக்கு. அதை அழகாச் செய்ய ஆசை. என் லிமிட் எனக்குத் தெரியும்.

ரொம்ப சாஃப்ட் ஆயிட்டீங்களே... இந்த நேரம் வீட்ல இருக்கீங்க. முகத்திலும் வார்த்தைகளிலும் அவ்வளவு சாந்தம் வந்திடுச்சு. ஒரு குழந்தை இவ்வளவு மாற்றங்களைக் கொண்டுவருமா?

கொண்டுவந்திருக்கே! பாப்பாவோட சின்ன அசைவுகள்கூடப் பேரானந்தம் தருது. ஸ்கூலுக்குப் போன பிறகு, 'எனக்கு ஏன் லீலாவதினு பேர் வெச்சீங்க. மாடர்னாவே இல்லை'னு பாப்பா திட்டும். அதுக்காக வாய்ல நுழைய முடியாத விநோதமான பேரை வைக்க முடியாது. அடுத்து பெண் குழந்தை பிறந்தால், என்ன பேர் வைக்கலாம்னும் முடிவு பண்ணிட்டேன்... சகுந்தலா!

மீடியாவில் எங்கே பார்த்தாலும் தனுஷ் பத்திதான் பேச்சு... பாராட்டியும் கிசுகிசு ரகசியமாகவும்... ஒரு அண்ணனா நீங்க அவருக்கு அட்வைஸ் பண்ணுவீங்களா?

எங்க எல்லாருக்கும் தனித்தனி அடையாளம் இருக்கு. யாரும் யாரோட பெர்சனல் லைஃப்க்கு உள்ளேயும் போகக் கூடாது. தனுஷ் ஒரு தனி ஆள். என் தம்பிங்கிறது எல்லாம் அடுத்துதான். நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். அட்வைஸ் எல்லாம் பண்ணிக்கிறது இல்லை.

என்ன திடீர்னு ஹாரிஸ் ஜெயராஜ்கூடக் கூட்டணி?

அதுவும் ஒரு அனுபவம். யாரும் வேண்டாம்னு அவர்கிட்ட போகலை. அவருடைய மியூஸிக் எனக்குப் பிடிக்கும். இந்தக் கதைக்கு அவர் பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு. வைரமுத்து, ஹாரிஸ்னு புது டீம் இன்னும் உற்சாகம் கொடுத்திருக்கு.

மேலும் திரைக்குப்பின்
Your Ad Here
Site Meter