"சுப்பிரமணியபுரம்" படத்தையடுத்து இயக்குநர் சசிகுமார் தயாரிக்கும் புதிய படம் "பசங்க". இதில் புதுமுகங்கள் அன்பு, ஜீவா, மனோன்மணி, குட்டிமணி, சிவகுமார், சுஜாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குபவர் பாண்டிராஜ். இவர் இயக்குனர் சேரனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். பத்து வயது சிறுவன் ஒருவனுடைய கனவு, ஒட்டுமொத்த பள்ளியையும் எப்படி கனவு காணச் செய்கிறது என்பதை சுவாரஸ்யமாகக் கூறுவதே படத்தின் கதை. குழந்தைகளின் மகிழ்ச்சி, துக்கம், மொழி ஆகியவற்றை குழந்தைகளின் மனநிலையிலேயே கூறும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு எதிர்கால கனவுகளைத் தூண்டும் படமாகவும் பெரியவர்களுக்கு கடந்த கால நினைவுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும் படமாக இது அமையும். சுப்பிரமணியபுரத்தில் கண்களிரண்டால் தமிழகத்தை இழுத்த ஜேம்ஸ் வசந்தன் தான் இந்த படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். தாமரை, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு -பிரேம்குமார். படத்தொகுப்பு- யோகா பாஸ்கர். சுப்பிரமணியபுரம் தந்தவரின் படம் என்பதால் பசங்க படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம். சென்சார் படத்துக்கு அனைவரும் பார்க்கத்தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளது.