"வாரணம் ஆயிரம்" படத்தை வெளியிட்ட தயாநிதி அழகிரி, தனது கிளவுட்நைன் மூவீஸ் சார்பில் முதன்முதலாக ஒரு படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்துக்கு, "தமிழ் படம்" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படத்தின் தலைப்பைப் போலவே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் இது. தமிழ் சினிமாவில் பார்த்து சலித்துப்போன "பார்முலா"க்களையும், "ஹீரோயிஸத்தை"யும் சுவாரஸ்யமான நகைச்சுவையோடு சித்தரிக்கிறது, படம். "சென்னை-28", "சரோஜா" போன்ற படங்களில் நடித்த மிர்சி சிவா, இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மும்பை அழகி தீஷா பாண்டே கதாநாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், வெ.ஆ.மூர்த்தி, மனோபாலா, டெல்லி கணேஷ், வி.எஸ்.ராகவன், "பரவை" முனியம்மா "மகாநதி" சங்கர், பெரியார்தாசன், கஸ்தூரி ஆகியோரும் பங்குபெறுகிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, புதிய இசையமைப்பாளர் கண்ணன் இசையமைத்து இருக்கிறார். பல விளம்பர படங்களை தயாரித்த சி.எஸ்.அமுதன் படத்தை இயக்கியுள்ளார். இவர் பட்டிமன்ற பேச்சாளர் "திண்டுக்கல்" ஐ.லியோனியின் மருமகன் ஆவார். எந்த நடிகரையும், படத்தையும் நையாண்டி செய்யாமல், படம் பார்க்க வரும் ரசிகன் ரசித்து சிரிக்கக் கூடிய வகையில் படம் இருக்குமாம். படத்தின் நாயகன் சிவா இதில் பரதம் நாட்டியம் ஆடியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறஆடை மூர்த்தி, மனோபாலா போன்ற முதிர்ந்த நடிகர்கள் இதில் கல்லூரி மாணவர்களாக நடித்திருக்கிறார்கள். வயதான நடிகர்கள் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சியுங்கள், வாலிபர்களுக்கு வழிவிடுங்களேன் என நீதி போதனை செய்யும் படமாகவும் "தமிழ்படம்" இருக்கும். கலை: டி.சந்தானம், பாடல்கள்: சந்துரு, தியாரூ எடிட்டிங்: டி.எஸ்.சுரேஷ், ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன், நடனம்: கல்யாண், தினா, காயத்ரி ரகுராம், இயக்கம்: சி.எஸ்.அமுதன். இணை தயாரிப்பு: விவேக் ரத்தினவேல், நிர்வாகத் தயாரிப்பு: எஸ்.சஷிகாந்த்.