முதல் பக்கம் » சினிமா » திரைமுன்னோட்டம்

Methai Tamil Movie Preview

மேதை

 (

Methai

)

"கரகாட்டக்காரன்" உள்பட பல வெள்ளிவிழா படங்களில் நடித்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின், மீண்டும் நடிக்கிறார். அவர் நடிக்கும் புதிய படத்தின் பெயர், "மேதை". இது, அவர் நடிக்கும் 44-வது படம். "மேதை", வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம். இதில், ராமராஜன் கிராமத்து பள்ளி ஆசிரியராக நடிக்கிறார். கிராமிய மணம் கமழும் இந்த கதையில் காதல், நகைச்சுவை, குடும்பப்பாசம், அதிரடி சண்டை காட்சிகள் ஆகிய அனைத்து அம்சங்களும் உள்ளன. ராமராஜனுக்கு ஜோடியாக, "வேள்வி" பட நாயகி ஹாசினி மற்றும் புதுமுகம் கௌசிகா நடிக்கின்றனர். மற்றும் வடிவேல், சார்லி, பிதாமகன் மகாதேவன், ஆர்யன், ஹரிராஜன், அலெக்ஸ், அஜய், சோனா நாயர், கே.நட்ராஜ், விட்டல், ஸ்ரீரஞ்சனி, ராஜலெட்சுமி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ராமராஜன் தனது படங்களில் மிக ஆபத்தான சண்டை காட்சிகளில், இதுவரை நடித்ததில்லை. அதுபோன்ற "ரிஸ்க்" ஆன காட்சிகளில், அவருக்கு பதில் "டூப்" நடிகரை பயன்படுத்துவது வழக்கம். இந்த படத்தில், மிக பயங்கரமான ஒரு சண்டை காட்சி இடம்பெறுகிறது. அந்த சண்டை காட்சியில் ராமராஜன், "டூப்" இல்லாமல், ஒரிஜினலாக அவரே நடித்துள்ளார். பூந்தமல்லி அருகில் உள்ள ஒரு செங்கல் சூளையில், இந்த பயங்கர சண்டை காட்சி 7 நாட்கள் படமாக்கப்பட்டது. இதே படத்துக்காக ஏவி.எம். ஸ்டூடியோவில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டு, அதில் "நிலவுக்கு பிறந்தவள் இவளோ...என் நினைவுக்கு ஒளிதரும் பகலோ" என்ற பாடல் காட்சி படமானது. இந்த பாடல் காட்சியில் ராமராஜன்-கௌசிகா ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள். "கிழக்கு திசை நோக்கி கேளுங்கடா, மேற்கு திசைநோக்கி வணங்குங்கடா, வடக்கு திசை நோக்கி பாடுங்கடா, தெற்கு திசை நோக்கி ஆடுங்கடா இனிமே எட்டு திசையெங்கும் என் பாட்டு கேட்குமடா" என்று மாயவரம் அருகே பேரளத்தில் ராமராஜன் பாடி ஆடிய காட்சியும் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அங்குள்ள லலிதாம்பிகை கோயிலும் இப்பாடலில் இடம் பெறுகிறது. வேகமாக தமிழகம் முழுவதும் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விட்டன. இசை: தினா, ஒளிப்பதிவு: ஆர்.எச்.அசோக், நடனம்: சிவசங்கர், தினா. கலை: ஜனா, படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ், சண்டைப் பயிற்சி: டி.எஸ்.ஆர்.முருகன். பாடல்கள்: முத்துலிங்கம், கங்கை அமரன், முத்துவிஜயன், யுகபாரதி, என்.டி.ஜி சரவணன், பரிணாமன். தயாரிப்பு மேற்பார்வை: அனந்த நாராயணன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு: எஸ்.காமராஜ். முன்னணி இயக்குனர்கள் பலரிடம் உதவியாளராக பணிபுரிந்து அனுபவம் பெற்றுள்ள என்.டி.ஜி.சரவணன் மேதை படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக இப்படம் மூலம் அறிமுகமாகிறார். கலைமகள் கலைக்கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிசெட்டியார், சிர்காழி கே.சிவசங்கர், பாலகிருஷ்ணரெட்டி ஆகிய 4 பேரும் இணைந்து தயாரிக்கிறார்கள். ராமராஜனின் சொந்த ஊரான மேலூரில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, கடலூர், புதுச்சேரி, நெய்வேலி, சிதம்பரம், நாகர்கோவில் மற்றும் கேரளாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Site Meter