சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் "வெங்காயம்". இப்படத்தில் புதுமுகம் அலெக்சாண்டர், புதுமுக நாயகி பவினா மற்றும் பலர் நடிக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை இது. படத்தில், தயாரிப்பாளர் எஸ்.எம்.மாணிக்கம் தெருக்கூத்து கலைஞராக நடித்து இருக்கிறார். இப்படத்தில் சத்யராஜ் பெரியாரின் கருத்துக்களை சொல்கிறார். "சின்னப்பயலே சின்னப்பயலே செய்தி கேளடா," "காடு வெளஞ்சது மச்சான் நமக்கு கையும் காலும்தான் மிச்சம்" போன்ற கருத்தாழம் உள்ள பாடல் காட்சிகளில் நடிக்க முடியவில்லையே என்று சத்யராஜுக்குள் நீண்ட கால குறை இருந்தது. இந்த ஆசை, "வெங்காயம்" என்ற படத்தின் மூலம் நிறைவேறியதாக அவர் கூறினார். இந்த படத்துக்காக, சுப.வீரபாண்டியன் ஒரு புரட்சிகரமான பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடல் காட்சியில் சத்யராஜ், நடிகர் சத்யராஜாகவே நடித்துள்ளார். இப்படம் முற்றிலும் கமர்சியலான விஷயங்களுடன் காதல் விஷயங்களையும், காமெடியும் கலந்து உருவாக்கியுள்ளனர். வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது என்பதைப்போல் கதையில் வரும் காதலிலும் விஷயம் இருக்காது என்பதை நகைச்சுவை கலந்த அம்சங்களுடன் கதையை உருவாக்கியுள்ளார் சங்ககிரி ராஜ்குமார். நித்யன் இசை அமைக்கிறார், ராகு ஒளிப்பதிவு செய்ய, சண்டைப்பயிற்சியை கராத்தே மனோகர் கவனிக்கிறார், படத்தொகுப்பு செ.மா.செந்தில்குமார், தயாரிப்பு நிர்வாகம்: திலீபன், தயாரிப்பு: எஸ்.எம்.மாணிக்கம், இணை இயக்கம் சம்பத், சபா. பாடல்கள்: சுப.வீரபாண்டியன், கவிஞர் கக்கன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சங்ககிரி ராஜ்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.