(2/27/2010)
மோகன்லால், பாவனா, ஷோபனா நடித்து கேரளாவில் 100 நாட்கள் ஓடிய படம், "சாகர் அலைஸ் ஜாக்கி". இந்த படம், "வெற்றி நடை" என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதில், தாதாக்களை ஒழிக்கும் வீரராக மோகன்லால் நடித்து இருக்கிறார். ஆயுதம் மற்றும் போதை மருந்து தொழில் நடத்தும் தாதாக்களை, மோகன்லால் தனித்து நின்று எப்படி ஒழித்துக்கட்டுகிறார் என்பதே கதை. மோகன்லால், பாவனா, ஷோபனாவுடன், சுமன், மனோஜ் கே.ஜெயன், நெடுமுடி வேணு, ஜெகதி ஸ்ரீகுமார், பாலா, சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார், ஜோதிர்மயி. படத்தின் கதை-திரைக்கதையை எஸ்.என்.சுவாமி எழுத, சாய் ஸ்ரீனிவாஸ் வசனம் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு-இயக்கம்: அமல் நீரத். இசை: கோபி சுந்தர். படத்தொகுப்பு: விவேக் ஹார்சன். பல படங்களில் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள கே.எஸ்.சீனிவாசன், உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த எஸ்.ஜெயராமன் ஆகிய இருவரும் இணைந்து ஓம் ஸ்ரீ சாய் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இணை தயாரிப்பு: ராஜேஷ் கே. இதில் ஜாக்கி பாத்திரத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார். மலையாள வாசனையே தெரியாத அளவிற்கு கதைக்களமும், பிரம்மாண்ட காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலானோர் தமிழில் நன்கு அறிமுகமானவர்கள். தற்போது படத்தின் பின்னணி குரல் சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. மார்ச் மாதத்தில் திரைக்குக் கொண்டு வர முழு வீச்சில் வேலைகள் நடந்து வருகின்றன.
(2/27/2010)
"ஏஞ்சல் ஃபிலிம் இன்டர்நேஷனல்" சார்பாக ஜி.எம்.பாலாஜி தயாரிக்கும் படம் "தம்பி அர்ஜுனா". இப்படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்குபவர் விஜய்.ஆர்.ஆனந்த். இவர் இயக்குனர் அருண்பாண்டியனிடம் "தேவன்", "விகடன்" போன்ற படங்களில் உதவியாளராக வேலைப் பார்த்தவர். இப்படத்தின் கதையின் நாயகனாக ரமணா நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆஷிமா நடிக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்த பெரோஸ்கான் மற்றொரு நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக, "மிஸ் கேரளா 2006" அழகியான ஷர்மிளா நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக, வில்லன் பாத்திரத்தில் சுமன் தோன்ற, மற்றொரு வில்லனாக கிக் பாஸ்கரும் நடிக்கிறார். முதன் முறையாக முக்கிய பாத்திரம் ஒன்றில் இசையமைப்பாளர் தினா நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, ராஜேந்திரன், ராஜசிம்மன், சிங்கமுத்து, பிரவீன்ராஜ், பாலாசிங், ரமேஷ்காந்த், மாஸ்டர் பர்தீன் கான் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் நடந்தது. "ஒரு பெண்ணின் மீது ஒருவனுக்கு ஏற்பட்ட காதல், ஒரு மாநகரையே உலுக்குவதுதான் கதையின் மையக் கரு. காதல் வந்தால் மனசுக்குள் பெரிய போரே உருவாகும் என்று சொல்வார்கள். அந்த மாதிரி நாயகனுக்கு வந்த காதலால் சென்னை மாநகரம் என்ன பாடுபடுகிறது என்பதை சுவாரஸ்யமாக, அதிரடியாக சொல்ல இருக்கிறார்கள். இந்தக் காட்சிக்காக ஹெலிகாப்டர் ஒன்றை எடுத்து, இதுவரை யாரும் காட்டாத சென்னையைக் காட்ட இருக்கிறார்கள். கதையின் நாயகனான ரமணா பல படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தை அவர் தனது முதல் படம் போல எண்ணி நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு அர்ஜுனன் பாத்திரம். இந்தப் படத்தின் மூலமாக அவர் இன்னும் பெரிய அளவில் அடையாளம் காணப்படுவார். அந்தளவிற்கு முழு ஈடுபாட்டோடு அவரது நடிப்பு இருக்கும். இப்படத்தின் ஒளிப்பதிவை மாதவராஜ் ஏற்க, எம்.கார்த்தி வசனம் எழுத, நா.முத்துக்குமார், யுகபாரதி, உமா சுப்பிரமணியன் ஆகியோர் பாடல்களை எழுத, தினா இசையமைக்கிறார். ரவிதேவ் நடனம் அமைக்க, சண்டைப் பயிற்சியை "மிராக்கிள்" மைக்கேல் கவனித்துக் கொள்கிறார். மகாபலிபுரம் அருகே ஐ.ஜி.ரிசார்ட் என்னும் இடத்தில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
(2/26/2010)
ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞனும், பெண்ணும் காதலித்து, ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதனால் அந்த ஊரே இரண்டாக பிரிகிறது. பிரிந்த ஊரை ஒன்று சேர்க்க, அதே ஊரை சேர்ந்த சில இளைஞர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்கள் முயற்சி வென்றதா, ஓடிப்போன காதலர்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், "பாடகசாலை" என்ற படம் தயாராகிறது. இந்த படத்தில் புதுமுகங்கள் சத்யா, அரவிந்த், ஸ்ருதி, ப்ரீத்தி புஸ்பன் ஆகிய 4 பேரும் கதாநாயகன்-கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹித்தேஷ் இசையமைக்க, தளபதி தினேஷ் சண்டைப்பயிற்சியை கவனிக்க, படத்தொகுப்பை முருகராம் மேற்கொள்ள, கதை-திரைக்கதை-வசனம்-ஒளிப்பதிவு-இயக்கம்: தமிழ்.ஜெ. நடனம்: ராமகிருஷ்ணன், தேவ விஜயம் பிலிம்மேக்கர்ஸ் சார்பில் ஒய்.தேவநேசன் தயாரிக்க, இணை தயாரிப்பு: கிரிஷ் மாதேவ். படப்பிடிப்பு காரைக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, முட்டம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
(2/26/2010)
பெண்களை பற்றி உயர்வாக சித்தரித்ததற்காக, 2007-ம் ஆண்டின் தமிழக அரசின் சிறப்பு விருதும், சிறந்த நடிகைக்கான விருதும் பெற்ற படம், "மிருகம்". இந்த படத்தை தயாரித்த கார்த்திக் ஜெய் மூவீஸ் அடுத்து, "நெல்லு" என்ற புதிய படத்தை தயாரிக்கிறது. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மண்ணில் வாழும் ஒரு வீர இளைஞனின் வீரமும், காதலும் கலந்த கதை இது. விவசாய மக்களின் வாழ்க்கையை கதை சித்தரிக்கிறது. இதில், சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் பாக்யாஞ்சலி நடிக்கிறார். இவர்களுடன் ஓ.ஏ.கே.சுந்தர், வாசு விக்ரம், ஸ்டாலின் கார்த்திக்கேயன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை-திரைக்கதை-வசனம் எழுதி, இந்த படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார், எம்.சிவசங்கர். ஸ்ரீபவன் சேகர் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.எஸ்.குமரன் இசையமைக்கிறார். ஏ.எம்.கார்த்திக்கேயன் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு: பி.செந்தில்குமார். படப்பிடிப்பு கோபிசெட்டிப்பாளையத்தில் தொடங்கி, 50 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
(2/26/2010)
காதலே இல்லாமல், ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, "குறுநில மன்னன்" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. காதலை மட்டுமல்ல, வேறு எந்த செயற்கை பூச்சும் சேர்க்காத மண்ணின் மனிதர்களின் கதை இது. நகப்பூச்சு, முகப்பூச்சு தொடங்கி, இதயத்துக்கே செயற்கை முலாம் பூசும் எந்திர வாழ்க்கை மனிதர்களிடம் இருந்து விலகி நிற்கிறது, இந்த கதை. மண்ணின் மைந்தர்களாக, வெள்ளந்தியாக வாழும் கரிசல் காட்டு வெள்ளை மனிதர்கள்தான் கதையின் நாயகர்கள். மனதளவில் ராஜாவாக, சுற்றத்தை ஒரு ராஜ்ஜியமாக நினைத்து வாழும் ஒருவனின் கதைதான் படம். செயற்கை உரம் போட்டால் மண்ணின் விளைச்சல் அதிகமாகலாம். ஆனால் வீரியம் கெட்டு விடும். அதுபோலவே இந்த கதைக்கு நட்சத்திரங்களின் துணை தேடினால், மண்வாசனையின் இயல்பு கெட்டுவிடக்கூடும் என்று கருதி, முழுக்க முழுக்க புதுமுகங்களை நடிக்கவைத்து இருக்கிறார்கள். கதாநாயகனாக பிரதீப் அறிமுகமாகிறார். இவர், இசையருவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். படத்துக்காக கூத்துப்பட்டறையில் 2 மாதங்கள் பயிற்சி பெற்று நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். இவர், "ஆறாம் வனம்" என்ற படத்தில் நடித்துக்கொண்டிருப்பவர். "பசங்க" படத்தில் அண்ணியாக நடித்த செந்தி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லனாக, கூத்துப்பட்டறையை சேர்ந்த ஜெகத் நடிக்கிறார். கதையில் வரும் மெய்யர், சொக்கர், சேவாயி, மலர்க்கொடி, கொட்டாணி ஆகிய பாத்திரங்கள் ரத்தமும் சதையுமாக அந்த மண்ணில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். மருதுபாண்டியர் வாழ்ந்த மண்ணில் நடக்கும் கதை என்பதால் மருதுபாண்டியர் பற்றி ஒரு கூத்தாடும் கலைஞர் கதை சொல்வதாக ஒரு பாடல் இடம் பெறுகிறது. அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள்:- மருதுபாண்டி வீரத்தோட கதையைக் கொஞ்சம் கேளுங்க, பெரிய மருது சின்ன மருது அண்ணன் தம்பி தானுங்க! முன்னவரோ வேட்டையில் வேங்கை புலிதானுங்க, பின்னவரோ நாட்டையாளும் சூரப்புலிதானுங்க! இந்த பாடலை கவிஞர் நா.முத்துகுமார் எழுதியுள்ளார். ஜோஹன் இசையமைக்கிறார். கவிஞர் அறிவுமதியின் மகள் ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு: பிரபாகரன், கலை: ராஜா, சண்டை: ஃபயர் கார்த்திக், கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்: ர.முருகையா. தயாரிப்பு: நிஷா கென்னடி. காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள வெற்றியூர், கல்லல், காளையார் கோயில், வேப்பங்குளம், தேவகோட்டை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.


Tamil Horoscope
Exclusive Tamil Actress Pictures
CHANDRAYAAN-1
Tamil Online Free eGreetings eCards
Latest Tamil Movies Online Website
Tamilnadu Classifieds - Koodal Business Link