
எட்டு நண்பர்களைக் கொண்ட காலாட்படையின் நாயகன் ஜெய் தன் நண்பனின் தங்கை விதுவை காதலிக்கிறார். ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த விதுவுக்கும் ஜெய் மீது காதல் என்றாலும் ஜாதி அவர்களது காதலுக்கு குறுக்கே நிற்பதோடு, தன் நண்பன் தனக்கு துரோகம் செய்துவிட்டானே என்று விதுவின் அண்ணன் அருணும் அவர்களது காதலை எதிர்க்க... காலாட்படை பிளவுப்பட்டு இரண்டு அணிகளாக மோதுகின்றனர் ஒரு பக்கம் ஜாதி பிரச்னை இன்னொரு பக்கம் நண்பர்களுக்குள் மோதல்கள்... கடைசியில் ஜெய்-விதுவின் காதல் என்ன ஆனது...? அது கிளைமேக்ஸ்!
ஆறடி ஆறு அங்குலம் உயரம் கொண்ட ஜெய் நடிப்பில் பரவாயில்லை! சண்டைக் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். ரவுடிகளை விட்டு தன்னை தாக்கிய லிவிங்ஸ்டனை நேரில் சந்தித்து என்னால் உங்க ஆட்களை அடித்து நொறுக்கியிருக்க முடியும், ஆனால் ஆட்களை ஏவியவன் எங்கோ இருக்க அவன் அனுப்பிய ஆட்களை அடிப்பதில் நியாயமில்லை என்று தன் வீரத்தை வார்த்தைகளாலேயே வெளிப்படுத்தும் கட்டம் சூப்பர். நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தினால் ஜெய் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வரலாம்.
ஜெய்யின் காதலியாக, ஆச்சாரமான பிராமணப் பெண்ணாக விது. தன் காதலனிடம் நம் வாழ்க்கைக்கு உங்களுக்கு ஒரு வேலை தேவை, முதலில் ஒரு வேலையை தேடுங்கள் என்று பொறுப்புடன் கூறும் போதாகட்டும், காதலுக்காக பெற்றோர்களின் சம்மதத்துக்காக போராடும் போதாகட்டும், காதலனை மறக்கச் சொல்லி அண்ணன் வற்புறுத்தும் போதாகட்டும்... நடிப்பில் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் விது. நல்ல எதிர் காலம் உண்டு!
ஜெய்யின் தந்தையாக ராதாரவி. குணச்சித்திர வேடத்தில் நேர்த்தியான நடிப்பு! இளைஞர்களிடம் வேலைத் தேடச் சொல்லி பைத்தியம் போல் சுற்றித் திரியும் தலைவாசல் விஜய்யின் கதாபாத்திரமும் மறக்க முடியாதது. விதுவின் அண்ணனாக வரும் அருணும் நடிப்பில் குறை வைக்கவில்லை.
மற்றும் லிவிங்ஸ்டன், கை தென்னவன், குயிலி, ஜோதி, ராஜசேகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
காதலித்து திருமணம் செய்ய நினைப்பவர்கள் தங்களது பெற்றோர்களை மதித்து, அவர்களது சம்மதத்துடனும், வாழ்க்கைக்கு தேவையான அஸ்திவாரத்தை அமைத்துக் கொண்டும் திருமணம் செய்வதென்றால்... அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற கருத்தைக் கொண்டு இதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஜெ. ரமேஷ் பாராட்டுக்குரியவர். ஆனால் எட்டு பேர் அடங்கிய காலாட்படை எங்கே படிக்கிறது...? அவர்களது பின்னணி என்ன...? என்பதையெல்லாம் விளக்காமல் விட்டு விட்டது குறைதான்! பரத்வாஜ் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றது. டி. சினுவின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் ரசிக்க முடிகிறது.
சோழா கிரியேஷன்ஸ் தயாரிப்பான காலாட்படைக்கு ரசிகர் படையின் ஆதரவு நிச்சயம்.