
பள்ளிப்பருவத்தின் சின்ன குறும்புகளை அரும்பு மாலையாக கோர்த்துள்ள படம்.
அந்த கிராமத்துப் பள்ளியின் சுட்டி மாணவன் கிச்சா. அவனுடன் சேர்ந்து படிக்கும் மாணவி சுப்புலெட்சுமி. நண்பர்களுடன் பதினாறு வயதுக்கே உரிய சேட்டைகளை செய்து வரும் கிச்சா, தனது நண்பர்களுக்காக சிறிய தவறுகள் உள்பட எதையும் செய்கிறான்.
ஆசிரியர்கள், ஆசிரியை அனைவருடைய வெறுப்புக்கு ஆளாகும் அவனை சுப்புலெட்சுமி மட்டும் நல்லவனாகவே பார்க்கிறாள்.
சித்தி கொடுமைக்கு உள்ளான சுப்புலெட்சுமி மீது கிச்சாவுக்கு தனி அக்கறை ஏற்படுகிறது. அவனை அவள் உயிருக்கு உயிராக நேசிக்கத் தொடங்குகிறாள்.
ஆனால் அவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பள்ளிக்கு வரும் புதிய தலைமை ஆசிரியை மீது கிச்சாவின் கவனம் திரும்புகிறது. கிச்சாவை எல்லோரும் குற்றம் சொன்னாலும் அதை தலைமை ஆசிரியை ஏற்க மறுக்கிறார்.
அவன் மீது தனி பாசம் காட்டுகிறார். கிச்சாவின் குறும்பு எல்லை மீறி போவதால் அவனை பெற்றோர் வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
சுப்புலெட்மியின் நினைவு கிச்சாவை வாட்ட...
தலைமை ஆசிரியையின் அன்புக்காக கிச்சா ஏங்குகிறான்... முடிவு என்ன என்பது மீதி கதை.
கிச்சாவாக வரும் மணிகண்டா பள்ளிக்கூடத்திலும், வகுப்பறையிலும் அடிக்கும் லூட்டிகள், செய்யும் கலாட்டாக்கள் அனைத்தும் கலகலப்பு. இந்தியாவை எத்தனை வகையாக பிரிக்கலாம்? என்று ஆசிரியையின் கேள்விக்கு மூன்று வகையாக பிரிக்கலாம்... என்று கிச்சா சொல்லும் பதிலுக்கு ஆசிரியை நினைக்கும் அர்த்தமும்... தலைமை ஆசிரியை சொல்லும் விளக்கமும் கலகலப்பு.
வழக்கமான வகுப்பறை ஜோக்குகளும் உண்டு. ஓட்டலில் கும்பலாக சாப்பிட்டு விட்டு ஏமாற்றுவது. சத்துணவுகூட பாத்திரங்களை திருடுவது டீன்ஏஜ் வயதில் ஏற்படும் செக்ஸ் ரசனை. சுப்புலெட்சுமி வாய்க்குள் இருக்கும் மோதிரம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவளை முத்தமிடுவது, பக்கத்து வீட்டு அக்காவுக்கு பாதுகாப்புக்காக படுக்கப்போய் அவளிடமே சில்மிஷம் செய்வது என்று சிறுவயது சேட்டைகள் அனைத்தையும் கண்முன் கொண்டு நிறுத்துகிறார் மணிகண்டா...
சுப்புலெட்சுமியின் லவ் லெட்டர் கொடுக்க அந்த தாளின் பின்னால் இருக்கும் மளிகை சாமான் லிஸ்டை பார்த்து வீட்டு பொருட்களை வாங்கும்போது அவளது சித்தியிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது விவரம் புரியாத உருக்கம். பொருத்தமான தேர்வு.
பள்ளி மாணவியாக வரும் சுஜிபாலா, மணிகண்டாவுடன் சேர்ந்து பள்ளியிலும் கிராமத்திலும் சுற்றுலா செல்லும் போதும் கலாட்டாக்கள் சூப்பர் காமெடிகள் சித்தியின் கொடுமையை அனுபவிக்கும் போதும், கிச்சாவை நினைத்து கலங்கும்போதும் சேர்ந்து கலங்க வைத்திருக்கிறார்.
சிம்ரன் தலைமை ஆசிரியையாக வந்து அசத்துகிறார். இதெல்லாம் எனக்கு தூசு என்று ஊதி விட்டுப் போகிறார். எல்லோரும் குறை சொல்லும் கிச்சாவை நல்லவன் என்று பாராட்ட அவர் சொல்லும் விளக்கம் சிந்திக்க வைக்கிறது.
சிம்ரனின் கணவர் தீபக் சில காட்சிகளில் சேர்ந்து நடித்திருக்கிறார். கிச்சா சிம்ரனுடன் சினிமாவுக்கு போக வாங்கிய டிக்கெட்டில் அவர்கள் இருவரும் படம் பார்ப்பது வெடி சிரிப்பு. சிம்ரன் திருமணம் செய்து விட்டு டெல்லி போய் விட்டதால் சில காட்சிகளை அவர் இல்லாமலேயே சமாளித்து இருக்கிறார்கள்.
ஜெய்ஆகாஷ் வந்து போகிறார். கஜேந்திரன், பாண்டு, வையாபுரி, நெல்லை சிவா, ஆர்த்தி, ஸ்ரீரேகா உள்பட நடித்த அனைவரும் கிச்சாவுக்கு கலகலப்பூட்டுகிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் அனைத்திலும் ஏ. ராஜகோபால் வெற்றி பெற்றிருக்கிறார். நல்லது கெட்டது தெரியாத பள்ளிப்பருவத்தை பக்குவமாக எடுத்து வைத்து எது சரி எது தவறு என்பதை புரிய வைத்திருக்கிறார். கதையில் சிறு தடங்கல் கூட இல்லாமல் கலகலவென்று கொண்டு போகிறார்.
இதற்கு ராஜமரியாதை கிடைக்கலாம். படம் பார்ப்பவர்களின் பள்ளி பருவத்தை ஆட்டோகிராப் ஆக்கி இருக்கிறார்.
இசை தினா. தேனாக இனிக்கிறது. அசோக் செல்வாவின் கேமரா பள்ளி பருவ குறும்புகளை பக்குவமாக படம் பிடித்திருக்கிறது. பள்ளிக் குறும்புகள் வரம்பு மீறியது என்றாலும் மன்னிக்கும் ரகம்.
கிச்சா வயது 16-க்கு மட்டுமல்ல 61-க்கும் பிடித்தமானவன்.