முதல் பக்கம் » சினிமா » திரை விமர்சனம் » டிஷ்யூம்

DISHYUM Movie Review

டிஷ்யூம்

-

DISHYUM

Tamil Movie - DISHYUM Review -  Tamil Movie Actor, Actress

சினிமாவில் "ஸ்டண்டு" நடிகராக இருக்கும் ஒருவரின் இன்ப - துன்பங்களை சினிமா பாணியில் சொல்லியிருக்கும் படம் டிஷ்யூம்.

படப்பிடிப்பில் கதாநாயகனுக்காக "டூப்" போட்டு உயிரை பணயம் வைத்து ஆபத்தான காட்சிகளில் நடித்துப் பிழைக்கும் இளைஞரான "ரிஸ்க்" பாஸ்கர் ஓவியக் கல்லூரி மாணவி சிந்தியாவை எதிர்பாராத விதமாக சந்திக்கிறான். அவள் மற்ற மாணவர்களைப் போல பாஸ்கரிடமும் சாதாரணமாக பழகுகிறாள்.

அவனுக்கு அவள் மேல் காதல் வருகிறது. ஆனால் அவள், "கொஞ்ச நாள் பழகிப் பார்ப்போம் அதன் பிறகு எனக்கும் காதல் வந்தால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்" என்று சொல்கிறாள்.

தீயணைப்பு படையில் வேலை செய்யும் தனது கணவரைப் பற்றி தினமும் தான் கவலைப்படுவது போல மகள் வாழ்க்கையும் அமைந்து விடக்கூடாது என்று சிந்தியாவின் அம்மா, ஸ்டண்ட் நடிகருடன் மகள் பழகுவதை எதிர்க்கிறாள்.

இந்த நிலையில் சந்தியாவின் தந்தை தீயணைக்க போகும் இடத்தில் தீயில் கருகி உயிர் இழக்கிறார். சிந்தியா, பாஸ்கரை விட்டு விலக, அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு பாஸ்கரை சந்தித்து விட்டு வர சிந்தியா புறப்படுகிறாள். வழியில் விபத்தில் சிக்கிய அவளை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள். அவள் பிழைத்தாளா? "ரிஸ்க்" பாஸ்கர் நிலை என்ன? என்பது "கிளைமாக்ஸ்".

நிறைய "ரிஸ்க்" எடுத்து ஸ்டண்டு நடிகராகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஜீவா. எதைப்பற்றி கேட்டாலும் ஸ்டண்டு பாணியிலேயே பதில் சொல்வது யதார்த்தம். ஆபத்தான ஸ்டண்டு காட்சிகளில் நிஜமாகவே சாதனை புரிந்து ரசிகர்களிடமும் பாராட்டுகளை அள்ளி இருக்கிறார்.

சிந்தியாவை காதலிக்க தயங்குவதும், காதலித்து விட்டு மறக்க முடியாமல் அவதிப்படுவதும் முத்திரைகள். காதலி முன்பு கடற்கரையில் "பல்டி" அடித்து காட்டுவது தமாஸ். காதலிக்கு திருமணப் பரிசு கொடுப்பதற்காக வட்டிக்குப் பணம் வாங்கி, கடனை அடைப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து சண்டைக்காட்சியில் நடிப்பது கதையின் உயிரோட்டம். உச்சகட்ட காட்சி நடிப்பில் எட்ட முடியாத உயரத்தில் போய் நிற்கிறார் ஜீவா.

ஜீவாவிடம் பழகும் சிந்தியாவாக ஓவியக்கல்லூரி மாணவியாக சந்தியா வருகிறார். "காதல்" என்று சொன்னாலே ஆவேசப்படுவதும், பின்னர் தன்னை சமாதானம் செய்து கொள்வதும் ரசனை. ஜீவா மீது சம்பந்தம் இல்லாமல் அக்கரை எடுத்துக் கொள்வதும், ஜீவாவின் சினிமாதனமான நடவடிக்கைகளைப் பார்த்து மனதை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதும் இளம் பெண்களின் மனதை படம் பிடிக்கும் வண்ண ஓவியங்கள். ஜீவாவுக்காக தாயிடம் செய்யும் வாக்குவாதங்களில் யதார்த்த ரேகைகள்.

அமிதாப் - ஆக வரும் குள்ள நடிகர் பத்ரு, நகைச்சுவை காட்சிகளில் "காமெடி" நடிகர்களை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுகிறார். தனது உயரத்தைப் பற்றி கிண்டல் செய்பவர்களுக்காக வருத்தப்பட்டு "கடவுளே தப்பு செய்கிறான்... என்னைப் போன்றவர்களை படைக்கிறான்..." என்பது "சுளீர்" என்று உருக்கம். உருவம் "மடு" என்றாலும் திறமை "மலை" என்பதை நிரூபித்திருக்கிறார்.

சந்தியாவின் அப்பா - அம்மாவாக, நாசர்- "அண்ணி" மாளவிகா இருவரும் நிறைவு செய்திருக்கின்றனர். மகாநதி சங்கர் உள்பட அனைவரும் கை தட்டல் வாங்கி இருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சசி. இதுவரை யாரும் சொல்லாத புதிய கருவை கதையாக்கி "சபாஷ்" பெற்று இருக்கிறார்.

கதையை "நறுக்" கென்று சொல்லி, "ஸ்டண்டு" நடிகர்களின் வாழ்க்கை இதுதான் என "சுருக்" கென்று தைக்கும் காட்சிகளை அமைத்து இருக்கிறார். சில காட்சிகளில் வசனங்களை நீளம் என்றாலும் கதை செல்லும் வேகத்தில் அந்த குறை மறந்து போகிறது. "கிளைமாக்ஸ்" பேச வைக்கிறது.

விஜய் ஆண்டனியின் இசை ரம்யம். ஒளிப்பதிவு - எஸன்டோனியோ டெர்ஸியோ. பெயரைப் போல காட்சிகளையும் வித்தியாசமாக படமாக்கி "அசத்தி" இருக்கிறார் ஸ்டண்ட் பயிற்சி - சக்தி. பரவசப்பட வைத்திருக்கிறார். கை குலுக்கலாம்.

டிஷ்யூம் - தூள் பறக்கும் அபூர்வ அனுபவம்.

நடிப்பு : ஜீவா, சந்தியா, நாசர், மாளவிகா, மகாநதி சங்கர், பக்ரு மற்றும் பலர்
இசை : விஜய் ஆண்டனி
தயாரிப்பு : வி. ரவிச்சந்திரன்
இயக்கம் : சசி
Site Meter