
குடும்பத்தின் பாசப்பிணைப்பை சித்தரிக்கும் எம்மகன் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் கதை....
மனைவி குழந்தைகளிடம் சதா எரிந்து விழும் சிடுசிடு மூஞ்சிக்காரர் எம்டன். கல்லூரியில் படிக்கும் மகன் கிருஷ்ணாவை தனது மளிகை கடையில் போட்டு வேலை வாங்குகிறார். கல்லூரி போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கிருஷ்ணா மளிகை கடையில் இருக்கிறார்.
அவரிடம் அடிபட்டு அல்லோலப்படும் கிருஷ்ணாவுக்கு சிறு வயதில் குடும்ப பகையால் பிரிந்து போன மாமன் மகள் ஜனனி நினைவுகள் ஆறுதல் அளிக்கிறது. அவளை சந்திக்க துடிக்கிறான். ஜனனி தந்தைக்கும் எம்டனுக்கும் இருக்கும் பழைய பகையால் சந்திக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் தாத்தா இறந்து போக குடும்பத்தோடு கிராமத்துக்கு போகிறான். அங்கு ஜனனியை சந்திக்க காதல்.
தாத்தா இறுதி சடங்கு முடிந்ததும் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிகிறது. கிருஷ்ணாவை எம்டன் அடித்து நொறுக்கி ஊருக்கு அழைத்து வருகிறார். ஜனனியும் அதே காரில் டிக்கியில் மறைந்து கிருஷ்ணா வீட்டுக்கு வந்து விடுகிறாள்.
ஆத்திரத்தின் உச்சத்துக்கு போகும் எம்டன் இருவரையும் அடித்து வீட்டை விட்டு துரத்துகிறார். கிருஷ்ணா பக்கத்து ஊர் கோழிப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்து ஜனனியை திருமணம் செய்கிறான். படிப்படியாக பதவி உயர்வு பெற்று கார், பங்களா என்று பணக்காரன் ஆகிறான். பெற்றோர் அவர்களை ஏற்றார்களா என்பது கிளைமாக்ஸ்.
கிருஷ்ணாவாக வரும் பரத் ஒவ்வொரு காட்சியிலும் நடித்திருக்கிறார் என்பதை விட அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் என்பதுதான் உண்மை. தன்னுடன் படிக்கும் மாணவர்கள் முன்பு தன்னை அவமானப்படுத்தும் தன் அப்பாவின் முன்பு பயத்தில் நடுங்கும் காட்சியில் பரிதாபப்பட வைக்கிறார்.
கோபிகா அழகுப்பதுமையாக வந்து அனைவரின் மனதிலும் நிற்கிறார். மற்றவருக்கு பயந்து இருவரும் பேச நினைக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது.
எம்டனாக நாசர் திரையில் அசத்தியிருக்கிறார். ஐநூறு ரூபாயை காணவில்லை என்றவுடன் ஆத்திரத்தில் மகனை போட்டு அடிக்கும் காட்சியில் அனைவரின் எதிர்ப்புக்கும் ஆளாகிறார் நாசர்.
ஒரு அம்மாவாக வந்து அசத்தியிருக்கும் சரண்யா கணவனுக்காக வேண்டி நாடகமாடும் காட்சியில் நிற்கிறார்.
எம்டனையே எதிர்த்து பேசும் காட்சியில் வடிவேலு மனதில் பதிகிறார். மற்ற கலாட்டாக்களில் தன்னை தனித்து வெளிப்படுத்திய திறமையை பாராட்டலாம்.
ஒரு சில காட்சிகளில் வந்தாலும் பார்வையிலிருந்து மீளா முடியாமல் இருக்கிறார் கஜாலா. பரத்தின் கல்லூரி நண்பர்களாக வந்தாலும் தன் மனதில் நினைக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தாமல் தவிக்கும் கஜாலா உணர்வுகள் மதிக்கப்படவேண்டியவை.
வித்யாசாகர் இசையில் பாடல்கள் காதிற்கு இனிமை. எம்டன் என்றவுடன் வீட்டிலுள்ள அனைவரும் பயந்து நடுங்க வைப்பதிலிருந்து முடிவு வரை கதையோடு ஒன்ற வைத்திருக்கும் இயக்குனர் திருமுருகனை பாராட்டலாம். நிஜத்தை திரையில் பிரதிபலிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர் திருமுருகன்.
எம்டன் மகனை "எம்-மகன்" தான் என்று சொல்ல வைக்கும் படம்.