முதல் பக்கம் » சினிமா » திரை விமர்சனம் » கண்ணும் கண்ணும்

Kannum Kannum Movie Review

கண்ணும் கண்ணும்

-

Kannum Kannum

Tamil Movie - Kannum Kannum Review - Prasanna, Vadivelu, Vijayakumar, Udhayathara, M. Prabhakaran, Balasubramaniam, G. Marimuthu, G. Sasikumar, Vairamuthu, Dhina, M.R. Mohanradha, Super Suparayan,  Tamil Movie Actor, Actress

காதலித்தவனே அண்ணன் ஸ்தானத்திற்கு வந்தால்...? என்னடா கதை இது...? அப்படித்தானே தோணுது...

இந்த மாதிரி கதையென்றால் சில தயாரிப்பாளர்கள் நோ சொல்லியிருப்பார்கள். ஆனால் கேட்டவுடனே ஓ.கே. சொல்லி திரைக்கு தைரியமாக கொண்டு வந்திருக்கும் இயக்குனருக்கும், தயாரிப்பளருக்கும் வைக்கணும் முதல் வணக்கம்.

இன்ஜினியரான பிரசன்னாவுக்கு கவிதையும் எழுதத் தெரியும். தான் எழுதிய கவிதையும் வார இதழில் வெளியான கவிதையும் ஒரேமாதிரியாக இருக்க, அந்த கவிதையை எழுதிய உதயதாராவின் முகவரிக்கு கடிதம் எழுதுகிறார் ஹீரோ... அடிக்கடி கடிதங்களாலேயே காதலும் பரிமாற்றப்படுகிறது.

மனசை பறித்தவளின் முகத்தை பார்க்க குற்றாலத்திற்கு செல்லும் பிரசன்னா அங்கு தன் நண்பனின் வீட்டில் தங்குகிறார். பிரசன்னா போன நேரம் பார்த்து சுற்றுலா சென்றுவிடுகிறார் உதயதாரா. தான் வந்த நோக்கத்தை நண்பனிடம் மட்டும் சொல்கிறார். நண்பனின் தங்கைதான் உதயதாரா என்பது நம்மைத்தவிர அந்த காதாபாத்திரங்களுக்கு தெரியாது. இந்நிலையில் டூர் போயிருக்கும் உதயதாரா திரும்பி வரும்போது விபத்தில் இறந்து போய்விடுகிறார் அவரது அண்ணன்.

இறுதியில் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் பிரசன்னா. நண்பனின் தங்கைகளையும் தன் தங்கையாகவே நினைக்க, விலகிப் போகும் கடைசி தங்கைதான் தன் காதலி என்பது தெரியவருகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரை அதிகாரபூர்வ அண்ணனாகவே மாற்றிவிட, கடைசியில் யாருக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார். காதலுக்கா...? அல்லது தன்னையே நம்பியிருக்கும் அந்த உறவுகளுக்கா...? விடை சொல்கிறது கிளைமாக்ஸ்...

நான் சொல்ற ஹீரோயின்தான் போடணும், பாட்டு, பைட்டு என்று இயக்குனரிடம் அடம்பிடிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில்... கதை என்ன அதில் தனது பங்கு என்ன என்பதை உணர்ந்து நடித்து அனைவர் இதயத்திலும் இடம் பிடித்து விடுகிறார் பிரசன்னா. தனியாகவே வாழ்ந்த பிரசன்னா, நண்பனின் தங்கைகள் தன்னை அண்ணா என்று அழைக்கக் கூடாதா என்று ஏங்கும்போது கலங்க வைக்கிறார். நண்பனின் மரணத்திற்கு பிறகு, அவரது தங்கைகளையும் கரை சேர்க்கும் பெரும் பொறுப்பை ஏற்கும்போது தாய்க்குலத்தை கவர்ந்து விடுகிறார் ஹீரோவாக...

உதயதாரா பேச வேண்டிய எல்லாவற்றையும் அவரது கண்களே பேசி விடுகின்றன. அண்ணனின் மரணத்தை எதிர்கொள்ளும் எல்லா தங்கச்சிகளை போலவும் அலறி துடிப்பது பயங்கரம். கடைசி வரை தன் காதலுக்காக பிடிவாதத்தோடு இருப்பது நச். தன் வீட்டிலிருப்பது தனது காதலன்தான் என்பதை தெரிந்து கொண்டதும், அவர் பார்க்கிற ஒவ்வொரு பார்வையிலும் பரிதாபம்... நமக்கும்தான்....

சரியா நேரத்தில் என்ட்ரி கொடுக்கிறார் வடிவேலு. போலீஸ் வந்து கேட்கும். ஆனா எதையும் சொல்லாத என்று கூறிவிட்டு தப்பித்து போய்விடும் போண்டா மணிக்காக இவர் அடிவாங்கி அழுவது வெடிச்சிரிப்பு. வெட்டாத கிணறு காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் கொடுக்கும் இடத்தில் தியேட்டர் அதிர்கிறது.

உதயதாரா தவிர மற்ற தங்கச்சிகளுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர். இதில் ஒருவருக்கு ஜோடி நம்ம சந்தானம். அடக்கி வாசித்திருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் விஜயகுமார், கல்லூரி பேராசிரியரான ராஜேஷ் இவர்களும் கூட மனசை கொள்ளையடித்திருக்கிறார்கள்.

வைரமுத்துவின் அற்புதமான வரிகளுக்கு அழகாக இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார் தினா. குற்றாலத்தை சாதாரணமாக காட்டினாலே கண்கள் கவி பாடும். இதில் உயரமான கோணத்திலிருந்து குற்றாலத்தை காட்டியிருக்கும் பாலசுப்ரமணியனின் புதிய பார்வை கண்ணுக்கு குளிர்ச்சி.

இப்படி ஒரு முத்தான படத்தையா... இவ்வளவு நாள் பெட்டிக்குள் போட்டு வைத்திருந்தார் இயக்குனர் மாரிமுத்து...? என்ற கேள்வி நம்மிடையே எழுந்தாலும், "கண்ணும் கண்ணும்" நிச்சயம் மனதை கொள்ளை கொள்ளும்...

நடிப்பு : பிரசன்னா, உதயதாரா, விஜயகுமார், வடிவேலு மற்றும் பலர்
இசை : தினா
தயாரிப்பு : எம்.ஆர். மோகன் ராதா
இயக்கம் : ஜி. மாரிமுத்து
Site Meter